Friday, May 29, 2015

மொத்த சொத்தும் அம்மா பெயரில்தானாம்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 54)

அஞ்சு மணிக்குத்தான் கோவில் திறப்பாங்க. இப்பவே என்னத்துக்கு ஆடறேன்னு இழுத்தார் கோபால்.  எனக்கு அஞ்சு மணிக்குக் கோவிலில் இருக்கணும். சாமி தரிசனம் முடிச்சுட்டுப் பொழுதோடு ரங்கனைப் பார்க்கப்போகணும்னு மந்திரிச்சுவிட்ட கோழிமாதிரி சொல்லிக்கிட்டே இருந்தேன்.  சரியா அஞ்சு அஞ்சுக்குக் கோவில் வாசலில்போய்  இறங்கியாச்சு:-)  எங்கியோ இருக்குன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேனா....  கடைசியில் பார்த்தால் நம்ம சங்கம் ஹொட்டேலில் இருந்து வெறும் மூணே கிமீ தூரம்தான்!

அஞ்சு நிலை கோபுரத்தோடு  முன்வாசலில் பளிச்சுன்னு  'அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோவில், உறையூர்- திருச்சி' னு எழுதி இருக்கு.  ஓக்கே.  தாயார் வீடு!

இந்த உறையூரின் புராணப்பெயர் திருக்கோழி!  ஆதித்த கரிகாலன் புது தலைநகரம் நிர்மாணிக்கும் யோசனையுடன் தன் நாட்டின்  ஒவ்வொரு பகுதியாகப்போய்க்கிட்டு இருக்கான். அப்போ இங்கே  வரும்போது,   மேய்ஞ்சுக்கிட்டு இருந்த ஒரு கோழி  அவனுடைய பட்டத்து யானையுடன்  சண்டை போடுது!  கோழியின் வீரத்தைப் பார்த்த மன்னன், இது வீரம் விளையும் பூமின்னு  அங்கேயே தலைநகரத்தை உருவாக்கிக்கிட்டானாம்.
 திருக்கோழி என்ற பெயருடன்!  குக்கிடபுரி, கோழியூர், வாரணபுரி, திருமுக்கீசுரம், நிசுளாபுரி ன்னு  பலபெயர்களும் கிடைச்சிருக்கு.

ஆனால் உறையூர் என்ற பெயர் எப்போ எப்படி ஏற்பட்டதுன்னு  தெரியலையே:(  மஹாலக்ஷ்மியான கமலவல்லி இங்கே நித்ய வாஸம் செய்து இங்கேயே உறைந்துவிட்டதால்  உறையூர் என்று பெயர் வந்திருக்கலாமோ என்னவோ!

சர்ச்சிலுக்கு உறையூர் சுருட்டு பிடிக்குமுன்னும் இங்கே இருந்து சுருட்டு தயார் பண்ணி அனுப்புவாங்கன்னும்  கேள்விப்பட்டுருக்கேன்.  ஆங்கிலேயர் நாட்டை மட்டும் சுருட்டலைன்னு  இதிலிருந்து தெரியுது பாருங்களேன்! 

நந்த சோழன் என்ற மன்னன் இந்தப்பகுதியை ஆட்சி செய்துக்கிட்டு இருந்த காலக்கட்டம்.  மன்னன்,  ரங்கனின்  பரமபக்தன்.  இவனுக்கு ஒரு பெரிய மனக்குறை, குழந்தை இல்லை என்பதுதான்.  ரங்கனிடம்  வேண்டிக்கேட்க,  ரங்கனே மஹாலக்ஷ்மியை மன்னனுக்கு மகளாக் கொடுக்க நினைச்சுட்டான்.  ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடப்போன இடத்தில் ஒரு  தடாகத்தில் மலர்ந்திருந்த தாமரையில் ஒரு பெண்குழந்தை கிடந்துருக்கு!

(தடாகக்கரையில் இருந்திருக்கப்டாதோ? குழந்தையின் கனத்தை மலர் தாங்கி இருக்குமோ? அதென்ன பெண்குழந்தைகளாகவே எப்போதும் கிடைக்குது... உஷ்....  மனசே.... அடங்கிக்கிட! )


கமலத்தில் கிடந்த குழந்தையை எடுத்துவந்து கமலவல்லி என்ற பெயர்வச்சு  வளர்த்து ஆளாக்கினான் மன்னன். ஒருநாள்  குதிரையில்  போன ரங்கனைக்கண்ட கமலவல்லி காதலில் விழுந்தாள். மன்னன் கனவில் வந்த ரங்கன்,  உன் மகளை  நானே கல்யாணம் கட்டப்போறேன் என்றதும்,  மகளைக் கூட்டிக்கிட்டு ஸ்ரீரங்கம்  போயிருக்கான்  மன்னன்.

கருவறைக்குள் நுழைந்து அவனோடு ஐக்கியமாகிட்டாள்னு கோவில் புராணம் சொல்லுது!  இது ரங்கனுக்கு ரொம்பவே வழக்கமான செய்கைதான்.  ஆண்டாளையும் இப்படித்தானே  செஞ்சான் இல்லையோ?

உறையூர் திரும்பிய மன்னன், மகளுக்காக ஒரு கோவிலைக் கட்டினான்.  அதுதான் இது!  ஸ்ரீதனம்!

இங்கே கமலவல்லியின் மணாளனாக இருக்கும் பெருமாளுக்கு   அழகிய மணவாளர் என்று பெயர்.  மாப்பிள்ளையும் பொண்ணுமாக் கல்யாணக்கோலத்தில் நின்றபடி ஸேவை சாதிக்கிறார்கள், வடக்கு நோக்கி!  ஏனாம்?  ரங்கன் முகம் பார்த்துக்கிட்டே இருக்கணுமாம். ரங்கன் தெற்கே பார்ப்பதால்  இவுங்க ரெண்டு பேரும் வடக்கு பார்க்கும்படியா ஆகி இருக்கு.

கோபுரவாசல் கடந்து பிரகாரத்தில்காலடி வைத்ததும் கண்ணுக்குப் புலப்படும் வகையில் கோவிலின் விவரங்கள், ஸேவை  நேரங்கள் எல்லாம் பளிச்ன்னு எழுதிப்போட்டு வச்சுருக்காங்க.  108 திவ்ய தேசக் கோவில்களின் வரிசையில் இதுக்கு  ரெண்டாம் இடம்!  (முதலிடம் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம்தான்!)  வலது பக்கம் திரும்பி  பிரகார மூலை கடந்தால்  வலது பக்கத்தில் மூலவர் சந்நிதிக்குப்போகும் வழி.


கோவில் திறந்திருக்கும் நேரம்  காலை  6 முதல் 12,  மாலை 5 முதல் 8.. விசேஷ பூஜை இருக்கும் நாட்களில்  இரவு 9 வரையும்கூட திறந்துருக்குமாம்.



சந்நிதி திறந்ததும்  போய் ஸேவித்துக்கொண்டோம்.  பெயருக்கேத்தமாதிரி ரொம்பவே அழகா  இருக்கார்  அழகியமணவாளர்! பிரகாரத்தை வலம் வந்தோம்.  நல்ல அகலமானவையா இருக்கு!


சேர்த்தி மண்டபம்!

திருமங்கை , குலசேகரன்  என்ற ரெண்டு ஆழ்வார்கள்  ஆளுக்கொன்னுன்னு பாசுரங்கள் பாடி மங்களசாஸனம் செஞ்சு வச்சுருக்காங்க.  திருமங்கை ஆழ்வார்,

  கோழியும்  கூடலும் கோயில் கொண்ட  கோவலரேயுப்பர் கொன்றமன்ன
பாழியும் தோளுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோவிவர் வண்ணமெண்ணில் மாகடல் போன்றுளர் கையில் வெய்ய 
ஆழியொன்றேந்தியோர் சங்கு பற்றி அச்சோவொருவரழகியவா  என்றும்,

குலசேகராழ்வார்  இப்படியுமாப்   பாடி  இருக்காங்க.

அல்லிமாமலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள் தம்
எல்லையிலடிமைத் திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம்
கொல்லிக் காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் குலசேகரன்
சொல்லினின் தமிழ்மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்களாவாரே

இருவருமே கோழி என்றே இந்தத்  தலத்தைக் குறிப்பிட்டுள்ளதை பாருங்க!
திருப்பாணாழ்வாரின் அவதார ஸ்தலம் இது. அவருக்குத் தனிச்சந்நிதியும் இருக்கு.





இப்படி இருந்தாலும் நம்ம கமலவல்லிக்குத் தனிச்சந்நிதி கிடையாது!  முழுக்கோவிலும் இருக்கே. அப்புறம் தனியா எதுக்குன்னு விட்டுட்டாங்க போல!




பிரகாரங்களின்  மூலைகள் சேருமிடங்களில் அழகான மண்டபங்கள்.  வலக்கோடி மண்டபம் திருவாய்மொழி மண்டபமாம்.  இன்றைக்குத் தாயாரின் சேவை  அங்கே நடக்குமுன்னு  கோலம் போட்டுக்கிட்டு இருந்தவங்க சொன்னாங்க. 6 மணிக்காம்.  இன்னும் அரைமணிதானே இருந்து பார்த்துட்டே போகலாமுன்னு தோணுச்சு.

ஒரு காஃபி குடிச்சால் தேவலை. பொடிநடையில் ரெண்டு நிமிசத்தில்  மெயின்ரோடுக்கு வந்தோம். இது நாச்சியார் ரோடு!  கண்ணுக்கு நேரா இருந்த நளாவுக்குப் போனோம்.  வெறும் காபிதான் மூவருக்கும்.  சின்னதா ஒரு அஞ்சடுக்கும் நாலடுக்குமா டிஃபன் கேரியர் என் இடுப்புயரத்துக்கு!  பார்ஸல் அனுப்புவாங்களாம்!  பத்துப்பதினைஞ்சு பேர் சாப்பிடலாம்.  விலை ஒன்னுமப்படி அதிகமில்லை.  40, 45 ரூபாய்க்கே கிடைக்குது.  சென்னை சரவணாவில் ஒரு வடை 25 ரூ என்பது  நினைவுக்கு வந்துபோச்சு.







திரும்பி ரெண்டே நிமிஷத்தில்  மீண்டும் கோவில்.  மண்டபங்களில் இருந்த சிற்பங்களைக் கிளிக்கிட்டு இருந்தேன். பராமரிப்பு போதாது.  இன்னும் கொஞ்சம் நல்லா வச்சுருக்கலாம்....





 சரியா ஆறுமணிக்குத் தாயார் திருவாய்மொழி மண்டபத்துக்கு  எழுந்தருளினார். திரை போட்டு அவருக்கான  சடங்குகள் நடக்கும்போது . கொஞ்சம் கொஞ்சமாக் கூட்டம் சேர்ந்துச்சு.  திரை விலகினதும்  பார்த்தால்.....  அம்மாடி.... என்ன ஒரு அழகு!  ரொம்பக்கிட்டக்க நின்னு  பார்க்க முடிஞ்சது.


இந்தக் கோவிலில் ஒரு விசேஷம் என்னன்னா....  எல்லா முக்கிய பூஜைகளும் அம்மாவுக்கே!  ஸ்ரீரங்கத்தில்  நம்பெருமாளுக்கு நடக்கும்  அனைத்துமே இங்கே தாயாருக்குத்தான்.  இன்னும் சொல்லப்போனால் இங்கே  பெருமாளுக்கு  உற்சவமூர்த்தியே கிடையாது.   ஸ்ரீரங்கத்து நம்பெருமாள்தான் இங்கேயும் வந்துபோறார்!

பங்குனி  உத்திரத்துக்கு ரங்கநாயகியுடன் சேர்த்தி  ஸேவை அங்கே நடக்குது பாருங்க, அதுக்கு முதல் நாள் நம்பெருமாள் இங்கே வந்து  நம்ம கமலவல்லியுடன் சேர்த்தி ஸேவை சாதிச்சுட்டு11 மணி இரவில் கிளம்பி அங்கே போயிடறார்  ரொம்ப சமர்த்தாக:-)

இங்கே  வைகுண்ட வாசல் இருந்தாலும், வைகுண்ட ஏகாதசி கொண்டாட்டம், பரமபதவாசல்  திறப்பு எல்லாம் கிடையாதாக்கும். அதுக்கு பதிலா மாசி  மாசம் தேய்பிறை ஏகாதசிக்கு வைகுண்ட வாசல் திறந்து  வெளியே வருவது நம்ம கமலவல்லிதான்!  அதிகாரம் யார் கையில்னு புரிஞ்சதோ:-)

 எட்டுவரை  தாயார் இங்கே தானாம்!  கொடுத்து வச்ச உள்ளுர் மக்கள். ஊஞ்சல் சேவைகள் முடிஞ்சாட்டு பிரசாத  விநியோகம் உண்டு போல!  பாத்திரங்கள்  அங்கே வரிசையா மூடி வச்சுருந்துச்சுதான். அதுவரை பொறுமை காக்க என்னால் முடியாது.  ரங்கன் இங்கிருந்து ஒரு ஆறே கிமீ தூரத்தில்தான்  இருக்கான்.  போகலாம்  போகலாமுன்னு கிளம்பிட்டேன். அப்படியும்  போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கிட்டுப் போய்ச் சேர ஏழேகால் ஆனது.

கமலவல்லி நாச்சியார் மேலதிகத் தகவல்கள்  இருந்தால் உள்ளூர் மக்கள் சொல்லுங்க. நானும் தெரிஞ்சுக்கறேன்.

கேமெரா டிக்கெட் வாங்குமிடத்தில் யாரையும் காணோம்.  இருட்டி வேற போச்சு. நாளைக்கு பகல் வெளிச்சத்தில் வரலாமுன்னு மனசை சமாதானப்படுத்திக்கிட்டேன். முதலில்  பெரிய திருவடியை  தரிசனம் செஞ்சுட்டுக் கோவிலைச் சும்மாச் சுத்தி வரலாமுன்னு இருந்தவளிடம்,'ஏம்மா... பெருமாளைப் பார்க்க வேணமா?'ன்னார் கோபால். வேணாம்.  ஐந்நூறு தண்டம் என்றேன். 'ரங்கன் ரங்கன்னு  புலம்பிட்டு, இப்ப  என்ன இப்படிக் கஞ்சத்தனம் பண்ணுறே' ன்னவர்   விடுவிடுன்னு போய்  அம்பது ரூ டிக்கெட் ரெண்டு வாங்கியாந்தார். காசு கொடுத்துப் பார்க்கணுமோ!  ரொம்பத்தான் ஆகிக்கிடக்குன்னு முணுமுணுத்துக்கிட்டே போனேன். போனமுறைக் கசப்புக் கொஞ்சூண்டு மனசில் மிச்சம் இருந்துச்சு.


அரை நிமிஷம் தரிசனம் கிடைச்சது. வெளியே வந்தவுடன்,  அச்சச்சோ.... திருவடி தரிசனம் செய்யாமல் முகம் பார்த்துக்கிட்டே  முப்பது வினாடியும் நின்னுருந்தேனேன்னு இன்னும் கொஞ்சூண்டு புலம்பல்.


'போறான் போ'ன்னு  கொடிமரம்தாண்டி வரும் சமயம்,  புதுமண்பானையில்  கைவிட்டு தச்சுமம்மு உருட்டிக்கொடுத்துக்கிட்டு இருந்தாங்க பாமா!  இன்னிக்குக் கல்யாண நாளாம். பதினெட்டு வருசம் ஆகுது. அதுதான்  சொல்லி வச்சுருந்தோம் என்று சொன்னாங்க. கணவர் பாலாஜியும், மகளும் பக்கத்துலே நின்னுக்கிட்டு இருந்தாங்க.



ஆஹா.... பதினெட்டை வாழ்த்த நாப்பத்தியொன்னுக்குக் கசக்குமா?  நல்லா இருங்கன்னு மனமார வாழ்த்திட்டுக் கையை  நீட்டினேன்.  இளஞ்சூடான தச்சுமம்மு! க்ருஷ்ணார்ப்பணம்!   திருப்பதியில் கிடைச்ச வெந்நீர்பழையதைபோல் இல்லாமல் புளிக்காத கெட்டித்தயிர் போட்டு, தாளிச்சுக் கொட்டி.....   அடடா..... அமோக ருசி!

எத்தனையோ வகைவகையா மடப்பள்ளியில் செஞ்சாலும் பெருமாளுக்கு என்னவோ  சிம்பிள் தயிர்சாதம்தான்  நைவேத்யம். தினமும் ஒரு புது மண்பானையில்  சமையல்.  முதல்முறையா  நமக்கும்  கிடைச்சது   மனசுக்கு மகிழ்ச்சி!

சீனிவாசனுக்குச் சொல்லலாமேன்னு கண்ணை ஓட்டினால்  தூணுக்குப் பக்கத்தில் நின்னு  தச்சுமம்முவை வாயில் போட்டுக்கிட்டு இருந்தார்!

மற்ற சந்நிதிகளை ஒரு சுத்து வந்துட்டு  அகலங்கன் திருவீதியில்  அகஸ்மாத்தாக் கண்ணில் பட்ட  கதவுக்குள்   சிலர் போறதும் வாரதுமா இருந்தாங்களேன்னு  எட்டிப் பார்த்தா அங்கே  பெரிய வட்டிலில்  ப்ரசாத விற்பனை!  அக்கரவடிசில், புளியோதரை கிடைச்சது.  பப்பத்து  ரூ தான். ஆனது ஆகட்டுமுன்னு  வாங்கி  விழுங்கியாச்சு.  க்ருஷ்ணார்ப்பணம்!

வெளிப்பக்கம்   மண்டபத்தில் பிரசாதஸ்டாலில் கூட்டமான கூட்டம்.
மணி  கிட்டத்தட்ட ஒன்பது!  பேசாம  ஹொட்டேலுக்குப் போயிடலாம்.
 நாளைக் கதை நாளைக்கு !

தொடரும்........:-)

28 comments:

said...

அழகான படங்கள் மூலம் இன்றும் ஒரு முறை சுற்றி வந்து விட்டோம்...

அங்கும் மதுரை ஆட்சி தானோ...?

தச்சுமம்மு... ஸ்ஸ்...!

said...

உறையூர் பினனணியும் கோவில் சிறப்பும் அழகான புகைப்படங்களும் அருமை. நாங்களும் வலம் வந்த திருப்தி.

said...

ஒரு வழியா நம்ம ஊருக்கு வந்துட்டீங்க. நாங்க இன்னும் இந்தக் கமலவல்லியைப் போய்ப் பார்க்கலை! :(

said...

திருச்சியில் இந்த கோயிலை நாச்சியார் கோயில் என்றுதான் சொல்வோம். நீங்கள் கோயிலில் எடுத்த அழகிய படங்கள், பதிவைப் படிப்பவருக்கு, கோயிலை ஒரு முழுச் சுற்று சுற்றியது போல் இருக்கும்.

இந்த நாச்சியார் கோயிலுக்கு அடுத்த தெருவில்தான், பிரசித்தி பெற்ற உறையூர் வெக்காளி அம்மன் கோயில் உள்ளது. (மூன்று நிமிட பயணம்) இந்த பயணத்தின் போது. நீங்கள் இந்த கோயிலுக்கு சென்றீர்களா என்று தெரியவில்லை. இந்த வெக்காளி அம்மன் கோயில் உறையூர் மண்மாரியால் அழிந்த கதையோடு தொடர்பு கொண்டது.

said...

நீங்கள் கோயிலில் எடுத்த அழகிய படங்கள், பதிவைப் படிப்பவருக்கு, கோயிலை ஒரு முழுச் சுற்று சுற்றியது போல் இருக்கும்.

Repeat

said...

நாச்சியார் கோவிலில் கூட்டமே இருக்காது. ஸ்ரீரங்கம் அதற்கு நேர் எதிர். நாச்சியார் கோவிலில் படமெடுக்க அனுமதிக்கிறார்களா?

said...

Are you visiting kumbakonam by any chance?

said...

கோயிலும் அழகு.. தச்சு மம்முவும் ருசி. எடுத்து விளம்ப ஒரு கரண்டி போட்டுருந்துருக்கலாம்ன்னு தோணுது.

said...

கொஞ்ச நாளா பதிவுகளுக்கு வரலை. மன்னிக்கவும் டீச்சர்.

உறையூருக்குப் பழைய பேர் கோழியூர். அது சோழர்களின் தலைநகரமா இருந்திருக்கு. அதுக்கப்புறம் காவிரிப்பூம்பட்டினம். அப்புறம் பழையாறை. அப்புறமாத்தான் தஞ்சாவூர்.

நீங்க சொல்றதப் பாத்தா இந்தக் கோயில் வைணவ மதுரை போலத் தெரியுது. :)

தச்சிமம்மு அருமை. படத்தைப் பாத்ததும் எனக்குப் பசிச்சிருச்சு.

said...

திருச்சிக்கு வந்தாச்சா டீச்சர்..:) நாங்கள் சென்ற அன்று சேர்த்திக்கு மறுநாள். அருமையான கோவில். பக்கத்தில் தான் நடக்கும் தொலைவில் வெக்காளியம்மன் கோவில். வெட்டிவேர் பந்தலில் அருமையாக காட்சியளித்தாள்.

said...

யாராவது, ஸ்ரீரங்கம் பிராகார ஸ்டாலைத் தவிர்த்து, பெருமாள் பிரசாதம் (அவருக்கு அளித்தது) எங்கு கிடைக்கும் எப்படி வாங்கலாம் என்று எழுதுவார்கள் என்று பார்த்தால் யாரும் எழுதவில்லை. டீச்சர்..நீங்களாவது சோர்ஸ் விசாரித்திருக்கலாம்.

ஸ்ரீரங்கம் கோவில் போயிருந்தாலும் உறையூரைச் சேவித்ததில்லை.

said...

கோயில் புராணத்துடன் ஸ்நாக்ஸ் காஃபி, மீல்ஸ், பிரசாத புராணமும் இனித்தது. சுவைத்தேன் துள்சி . எனக்கும் சேர்த்து ஒரு பாக்கெட் அக்கார அடிசில் & புளியோதரை சாப்பிங்க :)

said...

நெல்லைத் தமிழன்,

நிவேதனம் ஆனதுமே கருவறை செல்லுவதற்கு ஏறும் சந்தனு மண்டபத்துக்கு எதிரே இருக்கும் கிளி மண்டபத்தில் பட்டாசாரியார்கள் அமர்ந்து கொண்டு பிரசாத விநியோகம் செய்வார்கள். சில சமயம் பணம் கொடுத்தால் வாங்கிப்பாங்க. சில சமயம் சிலர் வேண்டாம்னு சொல்றதும் உண்டு. மாலை மூன்றிலிருந்து நான்கிற்குள்ளாக தரிசனம் முடிந்து கீழே இறங்குகையிலேயே சூடான அப்பம் கிடைக்கும். மற்ற இடங்களில் விற்பது மொத்தமாக ஒப்பந்ததாரர்கள் செய்து கொண்டு வருவது. பெருமாள் கோயில் தோசை வேண்டுமென்றால் சந்தனு மண்டபத்தில் தான் குறிப்பிட்ட நேரம் மாலை வேளைகளில் கிடைக்கும்.

said...

அல்லது நீங்களே தளிகைக்கு ஏற்பாடு செய்து பணம் கட்டினால் நிவேதனம் செய்ததும் உங்களுக்கும் வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கொடுப்பார்கள். கோயிலுக்குள் நுழையும் போது ரங்கவிலாச மண்டபத்தில் இருக்கும் உள் ஆண்டாள் சந்நிதியில் காலை ஒன்பதரையிலிருந்து பத்துக்குள் கோஷ்டி நடக்கும். அங்கே கோஷ்டி சமயம் போய்க் கோஷ்டியில் கலந்து கொண்டால் சுவையான பிரசாதங்கள் கிடைக்கும். புளியோதரை பெருமாள் கோயில்ப் புளியோதரையாக மிளகு மட்டுமே சேர்த்து, மி.வத்தல், பெருங்காயம் இல்லாமல் தனி வாசனையோடு நல்லெண்ணெய் மணக்கக் கிடைக்கும். ஆனால் தளிகை சொன்னால் வீட்டுக்குக் கொடுப்பதில் மி.வத்தல், பெருங்காயம், கடலை எல்லாம் போட்டிருப்பாங்க! :)

said...

சாப்பாடைப் பத்தி சா.ரா. ஆன நம்மை இல்லையோ கேட்கணும்! :))))

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அங்கும் என்ன அங்கும்? எங்கும் மதுரை ஆட்சிதான்! சிலது வெளிப்படையாகத் தெரியும். பலது பிஹைண்ட் த ஸீன் :-)))))

said...

வாங்க செந்தில் குமார்.

ரசித்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க கீதா.

ரொம்பப் பக்கத்தில் இருந்தால் அப்புறம் போகலாமுன்னு இருந்துருவோம். இப்படி நான் பல இடங்களைக் கோட்டை விட்டுருக்கேன். பூனாவில் அஞ்சு வருசம் இருந்தும் லோனாவாலா, Matheran எல்லாம் போனதே இல்லை:(

said...

வாங்க தமிழ் இளங்கோ.


மண்மாரி பற்றிய தகவல்களுக்கு நன்றி. அடுத்தமுறைதான் வெக்காளி அம்மனை தரிசிக்கணும்.

said...

வாங்க ஜோதிஜி.

ஆஹா.... நன்றி!

நம்ம பதிவுகள் Arm Chairs travelers களுக்கானது! அவர்களுக்கும் போய் வந்த புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கெமெராக் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் நமக்கு பிரச்சனை ஒன்னும் இல்லை. இல்லாத இடங்களில் அலுவலகத்தில் போய் அனுமதி வாங்கிக்கணும். பெரும்பாலும் எடுத்துக்கச் சொல்றாங்க. நமக்கும் நம்ம லிமிட் தெரியும்தானே?

said...

வாங்க கோபி.

கும்பகோணத்தில் ரெண்டு நாட்கள் தங்கினோம். விவரம் வரும் பதிவுகளில்.

பயணம் முடிச்சு வீடு திரும்பியபின்தான் பயணத்தைப் பற்றி எழுத ஆரம்பிப்பேன். இணைய வசதிகள் பயண சமயம் கிடைத்தாலும் அப்லோட் செய்ய எடுத்துக்கும் நேரம் அதிகம். சரிப்படாது:( தவிர ஓயாத சுற்றலின் நடுவே எழுதவும் நேரம் கிடைக்கணுமே....

said...

வாங்க சாந்தி.

கரண்டி.... எனக்கும் ஒரு விநாடி அப்படித் தோணுச்சுதான். ஆனால் கோயிலில் அவுங்க அன்னபூரணியா இருக்கணுமுன்னு தோணி இருக்காது! போகட்டும், அம்மா உருட்டிக் கையில் கொடுத்த சோறுன்னு நினைச்சுக்கலாம்.

said...

வாங்க ஜிரா.

வைணவ மதுரை !!!! ஆஹா .....

மதுரையின் ஒரிஜினல் பெயர் மதிரையாம். சோழர் கல்வெட்டுகளில் மதிரைன்னு இருப்பதா ஒரு தகவல் குழுமம் ஒன்றில் போய்க்கிட்டு இருக்கு இப்போ!

லேட்டா வந்தால் பிரச்சனை இல்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம். அது ஒரு வசதி இல்லையோ இணையதளத்தில்:-)

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

இந்த முறை காளியை மிஸ் பண்ணிட்டேன். எங்க கிவி ஆட்டிட்யூட் கை கொடுக்குதே!

நெவர் மைண்ட் நெக்ஸ்ட் டைம்!

இனி ரெங்கனின் தரிசனத்துடன் கமலவல்லியையும் சேர்த்தாச்சு. அப்போ கூடவே வெக்காளியம்மனையும் தரிசிக்கலாம்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

கீதாம்மா, உங்களுக்கான பதிலைச் சொல்லிட்டாங்க,பாருங்க.

நானும் பலமுறை திருச்சியில் தங்கி ஸ்ரீரங்கம் வந்தும், உறையூரை இப்பதான் முதல்முதலாகப் பார்த்தேன். எதுக்கும் வேளை வரணும் என்பது ரொம்பச் சரி!

said...

வாங்க தேனே!

நோ ஒர்ரீஸ்:-) அடுத்தமுறை அக்காரஅடிசில் பேக்கெட்டில் உங்க பெயரை எழுதிடலாம்!

said...

வாங்க கீதா.

அருமையான விளக்கங்களுக்கு நன்றி!