Friday, September 11, 2015

என்ன இருந்தாலும் படிச்ச காஃபி இது! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 77)

சொன்னாக் கோவிச்சுக்குவீங்க....  இதை நான் சொல்லலைப்பா....

காபி சூத்திரம் இன்னும் பிராம்மணன் கையில்தான் இருக்கிறது. அதற்கு குருக்கள் ஜாதி.  நாங்களெல்லாம் கூட  லாயக்கில்லை.  கும்பகோணம், கோயமுத்தூர் டிகிரி -நாக்கை அறுத்துப்போடு.....  ( லா.ச.ராவின் கல் சிரிக்கிறது )

தலை லேசா வலிக்கிறதுபோலிருக்கே... காப்பிச் சனியனை உள்ளே தள்ளினால் தேவலை. கும்மோணம் வந்துட்டு அசல் டிகிரிக் காப்பியை ஒருமுறையாவது குடிச்சுப் பார்க்கலைன்னா எப்படி?

"கும்பகோணம் டிகிரி காப்பி இங்கே கிடைக்குதா சீனிவாசன்?"

"இருக்கு மேடம். நம்ம ஓட்டலுக்குப் பக்கத்துலேயே ரெண்டாவது கடை."

"அசல்தானா?"

"ஆமாம் மேடம்."

'சென்னையில் இருந்து வர்ற வழியில் எல்லாமே பார்த்தோமே அதெல்லாம் ...'

 வாக்கியத்தை முடிக்குமுன்  'அதெல்லாம்  போலி மேடம் 'னு பதில்!

கஷ்டப்பட்டு வருசக்கணக்காப் படிச்சு வாங்கும் டிகிரியிலேயே போலிகள் வந்தாட்டு, காஃபியில் போலி வர்றது  கஷ்டமா என்ன?

நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது எங்கே பார்த்தாலும் கும்பகோணம் டிகிரி காப்பிக் கடைகள்தான். இது வரை போகலை. இப்ப அச்சு அசலுக்கு வந்துருக்கோம்.

நம்ம சீனிவாசந்தான் இப்போ நம்ம கைடு!  வாசலில் இருந்த போர்டின் லோகோவைக் காமிச்சு, 'இந்தப்படம் இருந்தாத்தான் ஒரிஜினல்.  மற்றதெல்லாம் போலி!'

கூரைக்கொட்டாய் போட்டு வச்சு முகப்பில் சில டெர்ரகோட்டா பொம்மைகளுடன்  குட்டியா ஒரு தோட்டம். லுக்கே எனக்குப் பிடிச்சுப் போச்சு.

ரிஷபப்ரியா, சாருகேஸி, தர்பார் இப்படி ராகங்களின் பெயர்களில் காப்பிக்கொட்டை வகைகள்.


மூணு காஃபிக்குச் சொன்னோம். கொஞ்சம் நேரம் ஆகுமாம். அதுவரை உக்கார்ந்துக்கப் பிரம்பு நாற்காலி செட்கள். டைம்பாஸ் வாசிப்புக்குன்னு இல்லாம  நல்ல வாசிப்புக்கான புத்தகங்கள் கொஞ்சம், இது இல்லாம விலைக்கு வாங்கிக்கக்  கொஞ்சம் புத்தகங்கள்,  கொலு பொம்மை செட், ஊதுபத்தி வகைகள். காபிப்பொடி வகைகள்,  இட்லி மொளகாய்ப்பொடி, ஊறுகாய் வகைகள், வத்தக்குழம்பு இப்படி சின்னதா ஒரு சூப்பர்மார்கெட்:-)








ஆங்.... சொல்ல மறந்துட்டேனே... பித்தளை டபரா செட். அப்படியே  அள்ளிக்கிட்டுப் போகுது.  க்ளிக்கினவுடன்,  எடுத்த இடத்துலேயே வச்சுட்டார் நம்மாள்.

கொட்டகையின் கடைசியில் திரை போட்டு சின்னதா ஒரு பகுதி.  சாமி ரூம்.  காலணி பாடில்லா.  கழட்டிட்டு உள்ளே போய் கும்பிட்டேன்.

நமக்கான காப்பிக்கொட்டை வறுக்கும் வேலை நடக்குது. ரிஷபப்ரியா  பெயர் கேக்கறதுக்கே அட்டகாசமா இருந்தாலும்....   நான் 'தர்பார்' சொல்லி இருந்தேன்.

மேடையில் மூணு அடுப்புகள். ஒரு பெரிய மூடி போட்ட பாத்திரத்தில்  கப் அண்ட் ஸாசர்கள்  வெந்நீரில் தளைச்சுக்கிட்டு  இருக்குதுகள்.

இன்னொன்னில்  பால் . ஒன்னில் காஃபிக்கொட்டை வறுத்து எடுத்ததும் டிகாக்‌ஷனுக்கு தண்ணீர் வச்சுட்டு,  காபிக்கொட்டை அரைக்கும் மெஷீனில் வறுத்த கொட்டைகளைப் போட்டார்.  மூணு பேருக்கு எதுக்கு இவ்ளோன்னு பிரமிப்பா இருந்தது. அவர்பாட்டுக்குக் கை கையா எடுத்துப்போட்டுக்கிட்டே இருக்கார்! நம்ம வீட்டுக்கு இது ஒரு வாரத்துக்கு வரும்! போதும் போதுமுன்னு  கத்தி இருப்பேன்:-)


அடுத்து  டிகாக்‌ஷன். ஃபில்ட்டரில் வெந்நீர் ஊத்தியாச்.  இனி அது இறங்கணும்.

விலைப்பட்டியலில் பார்த்தால்.... காஃபிக்குச் சம்பந்தமே இல்லாத சாண்ட்விச்கள். சுண்டல் கூட  ஒன்னு  இருக்கு. இது ஓக்கே. ஆனால்.... சாண்ட்விச் எதுக்கு?

நாங்க வத்தலகுண்டு என்ற ஊரில் இருந்தப்ப ராஜாஜி மைதானம் தாண்டி கொஞ்சதூரத்தில் பால்பண்ணை ஒன்னு இருந்துச்சு.  வாசலைக் கடந்து உள்ளே போனால் இதுவே ஒரு பெரிய மைதானம் அளவுக்கு இருக்கும். வேலியை ஒட்டி வரிசையா மாடுகளைக் கட்டிப்போட்டுப் பால் கறந்துக்கிட்டு இருப்பாங்க.  வாசலுக்குப் பக்கம் பெரிய திண்ணை மேடையில் கணக்கு வழக்கு பார்க்கும் ஆட்கள். கறந்த பாலைக் கொட்டி வைக்கும் பெரிய அண்டாக்கள். எருமைப்பால், பசும்பால்னு தனித்தனியா ரெண்டு. கறந்து வந்த பாலை அளந்து வாங்கி  பால்காரர் கொண்டுவரும் சின்ன நோட்புக்கில் வரவாக்கி  கையெழுத்துப்போட்டு, ஒரு ஸ்டாம்பு அடிப்பாங்க. அதுக்குப்பின்  மாட்டுக்காரர் மாட்டை ஓட்டிக்கிட்டுப்போயிருவார். கறக்கும் நேரம் மட்டும் இங்கே வந்தால் போதும். மாடு வாங்க கோ ஆப்பரேடிவ் சொஸைட்டி கடன் கொடுக்குது.

அதுக்கும் முன்னால்  பால்காரர் கொண்டு வந்த சொம்பில் இருந்து கொஞ்சம் பாலை ஒரு கண்ணாடிட் டம்ளர் மாதிரி இருக்கும் ஒன்னில் ஊத்தி, தெர்மாமீட்டர் போல ஒன்னு போட்டு ரெண்டு நிமிசம் வைப்பாங்க.  இது பால்மானி.  டிகிரி போட்டுப் பார்ப்பதுன்னு இதைச் சொல்வாங்க.தண்ணி கலந்த பாலைக் கண்டு புடிச்சுருமாம். நேரில் கறக்கும்போது கூடவா தண்ணி சேர்ப்பாங்க?
இது வலையில் சுட்ட படம்.  ஹைட்ரோ மீட்டர்.

பொதுவா காலை, மாலைன்னு ரெண்டு நேரத்துக்கும்  அங்கே போய் நம்ம வீட்டுக்குப் பாலை உதவியாளர்கள் வாங்கியாந்துருவாங்க. இடையில் எப்பவாவது பால் தேவைப்பட்டால் அக்கா என்னை கெஞ்சுவாங்க. "குதிரையில் போய் சட்னு வாங்கிக்கிட்டு வந்துருடீ என் செல்லம்". போகும்போது குதிரை ஓக்கே. வரும்போது  நடத்தித்தான் கூட்டி வரணும். பால் தளும்பிருமுல்லெ!

நான் எங்கெயாவது போனால் சட்னு திரும்பி வந்ததா சரித்திரமே இல்லை:-)  எல்லாத்தையும் விலாவரியாப் பார்த்துட்டுத்தான் போனவேலையைக் கவனிப்பேன். திண்ணையில் ஏறி உக்கார்ந்து வேடிக்கை பார்க்க எனக்கு மட்டும்  அனுமதியும் உண்டு.  பெரிய இடத்துப்பிள்ளை பாருங்க!  டாக்குட்டரம்மா வீடுன்னா சும்மாவா?  அதுவும் ஊருக்கு ரெண்டே ரெண்டு டாக்டர்ஸ்தான் அப்போ. தனியார் கல்லூரி என்ற நாமதேயமே கிடையாது. 

 ஆமாம்...இந்தக் கதை இப்போ எதுக்கு?  எல்லாம் டிகிரிக்காகத்தான்:-)


கும்மோணம் டிகிரியிலே ஸ்பெஷலே இந்த டிகிரிப்பால்தான். சொட்டுத்தண்ணி கலக்கப்டாது கேட்டோ! காஃபி குடிக்கும்போது நாக்குலே ஒட்டணும். கள்ளிச்சொட்டுக் காஃபின்னும் சொல்லலாம்:-) அந்த ஆரம்பகாலத்தில் கடைக்குப்பின்புறம் மாடுகளைத் தொழுவத்தில் வச்சு  கறந்தபாலைக் கறந்தபடிக் காய்ச்சி காஃபி கலந்து தருவாங்களாம்.


நம்ம டிகாக்‌ஷன் இறங்கிருச்சு. இதுவே  பயங்கரமா திக்கா இருக்கு!  பக்கத்து அடுப்பில் காய்ஞ்சுக்கிட்டு இருந்த பாலை அப்பப்பக் கரண்டியால்  கலக்கிக்கிட்டே இருந்தவர்  ஒரு எவர்சில்வர் மக்கில்  வடிகட்டிவச்சு பாலை அதில் ஊத்தி மேலே சுத்திக்கிட்டு இருந்த பாலேடு துகள்களை  வடிகட்டியதும்,  கப்பில் ஊத்துன டிகாக்‌ஷன் மேலே  பாலை விட்டார். நுரைச்சு மேலே வந்தது காஃபி.

எல்லாம் சேர்ந்து ஒரு 35 நிமிஷக் காத்திருப்பு.

நமக்குக் கொண்டுவந்து கொடுத்தப்பச் சின்னதா எனக்கொரு ஏமாற்றம். பித்தளை டபராசெட்டில் சம்ப்ரதாயமாக் கொடுக்கப்டாதோ? போகட்டும் இது நல்லா ஸ்டெரலைஸ் செஞ்ச கப் என்று அதே சமயம் ஒரு ஆறுதலும் வந்தது உண்மை.


நல்ல மணம் குணம் இருந்தாலும் இன்னும் கலர் லைட்டா இருக்கேன்னதும் கூடுதல் டிகாக்‌ஷன் வந்தது. இதுலேயே மூணு காஃபி போட்டுறலாம் போல!   கொஞ்சூண்டு சேர்த்ததும் அரச தர்பார் போலவே அமர்க்களம், போங்கோ!

ரொம்ப நாளைக்குப்பின் நல்ல காஃபி குடிச்ச திருப்தி!

ஒரு காப்பி அறுபது ரூபாயான்னு கேக்கப்டாது.  அதுக்குண்டான வேலைகளைப் பாருங்க.  மாடர்னா இருக்குன்னு  இப்போக் காளான் மாதிரி முளைச்சுக்கிடக்கும்  காஃபி ஷாப்களில் போய்  நூத்தியம்பது ரூபாய் காஃபிகளைக் குடிச்சுக்கிட்டு இருக்கும் நமக்கு ' த  ரியல் காஃபி டேஸ்ட்' வேணுமுன்னா ஒருக்கா இந்தக் கடையில் குடிச்சுப்பார்க்கத்தான் வேணும்.

வழியெல்லாம்  கடைகள் இருந்தாலும்  கவனமா, லோகோ இருக்கான்னு பார்த்துட்டு அது சரியான கடைதான்னு உறுதி செஞ்சுக்கிட்டு உள்ளே நுழையலாம்.  இந்த லோகோவையும் யாரும்  காப்பி அடிக்காமல் இருக்கணும். பெருமாளே காப்பாத்து!

தொடரும்.......:-)

PINகுறிப்பு:  ஆமாம். நம்ம சுப்ரமணிய பாரதியார் காஃபி குடிச்சுருப்பார்தானே!  இன்றைக்கு அவருடைய நினைவுநாளுக்காக இந்த அசல்  கும்மோணம் காஃபியை அவருக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

இன்னொரு சமாச்சாரம், தமிழ் விக்கிபீடியாவில்  பாரதியின் ஆயுசு இன்னும் ஒரு நாள் கூடுதலாக் கூட்டப்பட்டிருக்கே! க்ரேஸ் டைமா!


28 comments:

said...

அடுத்த தடவை நீங்களும் கோபால் சாரும்
சென்னைக்கு வரும்போது உங்களுக்கு
கும்பகோணம் டிகிரி காபி கண்டிப்பா நாங்களே ( இவளை விடுங்க, அன்னிக்கு இவ மூட் எப்படி இருக்கும் நு இன்னிக்கே சொல்ல முடியாது இல்லையா !!!!!!!!!!!!!!!!) நானே போட்டுத் தர்றேன்.

இதிலே ஒண்ணும் சிதம்பர ரகசியம் இல்ல.
டிகாஷன் நீங்க இறக்கும்போது, முதலில் இறங்கும் ஒரு கால் கப் தனியா எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆவின் பாலோ ஆரோக்யா பாலோ, காய்ச்சி பொங்கும்போது, அந்த பொங்கும் நுரையுடன் முக்கால் டம்ளர்.

இப்போ, டிகாஷணோட பாலை சேர்க்கணும் . இரண்டும் ஒன்னாக த்தானே ஆகப்போறது என்று சட்னு பால் லே டிகாஷனை ஊத்திட்டா, அந்த காம்பினேஷன் கிடைக்காது.

டிகாஷனோடு பாலை கொஞ்சம் கொஞ்சமா...
எப்படி ?

கொஞ்சம் கொஞ்ச...மா....ஆமா...கொஞ்சமா கொஞ்சமா....

சேர்க்கணும். உங்களுக்கு எந்த கலர்லே வேணுமோ அங்கே பால் ஊத்தறத ஸ்டாப் பண்ணிக்கணும்.

இந்த மாதிரி காபிலே சக்கரை கூட போட்டுக்கொண்டா காபி டேஸ்ட் போயிடும்.

கொஞ்சமா அரை ஸ்பூன், இல்லேன்னா கூட பரவா இல்ல, சக்கரை இல்லாத காபி இன்னும் டேஸ்டா இருக்கும்.

கண்டிப்பா எங்கள் வீட்டுக்கு வரவேண்டும்.

கேட்டோ ?

காபி குடிச்ச அனுபவம் இங்க பார்க்கவும்.
www.youtube.com/watch?v=rqufEkez3BQ
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com

said...

காஃபி எப்படி இருந்தது துளசி மேடம்.

said...

ரசித்தேன் அம்மா...

said...

சுவையான காபி ..........

said...


பித்தளை டபரா செட் இருந்தும் கப் அண்ட் சாசரிலா. ? இந்தக் கடை எங்கே இருக்குன்னு சொல்லலையே. “நாங்கள் தங்கி இருந்தைடத்துக்கு அருகில் “ என்று சொல்லக் கூடாது. கும்பகோணம் போனால் இங்கே காப்பி குடித்துப் பார்க்கவேண்டும் என் தளத்துகு வாருங்கள் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.

said...

//இன்னொரு சமாச்சாரம், தமிழ் விக்கிபீடியாவில் பாரதியின் ஆயுசு இன்னும் ஒரு நாள் கூடுதலாக் கூட்டப்பட்டிருக்கே!//
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=83162

said...

துளசி அம்மா, நீங்க சொல்லி தான் சென்னை போற வழில இருக்க காபி எல்லாம் போலி னு தெரியுது!!!! பாவம் என் பேமிலி இது தெரியாம சென்னை போறப்ப எல்லாம் காபி குடிப்பாங்க...!!!! (ஆனா நான் காபி குடிக்க மாட்டேனே டீ தான் பிடிக்கும்.......)

said...

காபிக்குப் பின்னால் இவ்வளவு விஷயமா? கும்பகோணத்தில்கூட இப்போது முன்பிருந்த தரத்தைக் காணமுடியவில்லை. கும்பகோணம் காபி என்ற பெயர் பலருடைய வியாபாரத்திற்கு உபயோகமாக இருக்கிறது.

said...

கும்பகோணத்தில் இது எங்கே இருக்கு? ஆனாலும் எங்க விட்டுக் காஃபிக்கு ஈடு இணை இல்லை. பித்தளை டபரா, டம்பளரோடு சில கும்பகோணம் டிகிரி காஃபிக் கடைகளிலே கொடுக்கிறாங்க.

வெளியே நான் சாப்பிட்ட காஃபியிலேயே சிறப்புன்னா ராயல் நேபாள் ஏர்லைன்சிலும், நேபாளத்தில் காட்மாண்டுவில் தங்கி இருந்த 5 நக்ஷத்திர ஓட்டலிலும் தான்! அதுக்கப்புறமா ஷிர்டியில் உட்லன்ட்ஸில் நல்ல காஃபி கிடைச்சது. திநகர் பாண்டி பஜாரில் கீதா கஃபேயிலும் நல்லா இருக்கும் காஃபி.

said...

Jambulingam sir sonnadhu unmai

said...

இதுவொரு காபியின் கதை.

காப்பிக் கொட்டைக்கு தர்பாரின்னு பேர் வெச்சவங்களுக்கு... காபின்னு பேர் வைக்க முடியல பாத்தீங்களா? :)

அப்பப்ப வறுத்து.. அப்பப்ப அரைச்சு அப்பப்ப டிகாஷன் போட்டு அப்பப்ப அதுல காபி போட்டுத் தர்ராங்களா.. ஆகா.

காபி ஒரு காலத்தில் பிடிச்ச பானம். இப்பக் குடிக்கிறதில்ல. ஆம்ஸ்டர்டாம்ல எனக்குன்னு ஒரு பில்டர் வேற வெச்சிருந்தேன். நான் டிகாஷன் போடுறப்போ அதுல கொஞ்சம் ஜீனியும் போடுவேன். டிகாஷன் எறங்குறப்போ கெட்டியா எறங்கும்.

டபரா செட்டெல்லாம் பாத்து வாங்கனும் டீச்சர். மேல கலர் மட்டும் இருக்கும். கொஞ்ச நாள் போனா வெளுத்துரும்.

said...

அருமையான காஃபி குடிச்ச அனுபவம். இங்க மாடவீதியில் அதாவது சென்னையில்

கும்பகோணம் காப்பி இருந்தது. கிலோ ரூபாய் 720 ஆக இருந்தது.

இந்தக் கடையை நாங்கள் பார்க்கவில்லை. திருச்சி திரும்பிவரும் போது ,இருந்த கடையில் சாப்பிட்டதனால்
வந்த வயிற்று வலிக்கு, கீதா கொடுத்த தயிர் சாதம் தான் மருந்தாக இருந்தது..
வத்தல குண்டு புராணம் எப்பவும் அலுக்காது.

said...

வாங்க அத்திம்பேர்.

மீனாக்ஷி அக்கா நலமா?

அடுத்தமுறை கட்டாயம் உங்க வீட்டு காஃபிதான். மாடு நேரில் வந்து கறக்கும்தானே:-)

said...

வாங்க கைலாஷி.

காஃபி ரொம்ப நல்லா இருந்தது. அரைச் சக்கரை போட்டு குடிக்கும்போது அமர்க்களம்!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நன்றீஸ்.

said...

வாங்க அனுராதா ப்ரேம்,

ஆமாம். சுவைதான்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ராயாஸில் தங்கி இருக்கோமுன்னு கும்மோணம் கட்டுரைகளில் சொல்லிக்கிட்டே இருக்கேனே. மஹாமகக்குளத்துக்கு நேரெதிரில். காஃபிக் கடையும் இங்கேயே இதே வரிசையில் தான்.

said...

வாங்க கனக்ஸ்.

நலமா? ரொம்ப நாளாச்சே பார்த்து!

சுட்டிக்கு நன்றி. இந்த மாற்றம் வந்தது எனக்கு இதுவரை தெரியலை. மீண்டும் நன்றிகள்.

அடுத்த வருச தினக்கேலண்டரில் மாற்றுவாங்க போல!

said...

வாங்க அபிநயா.

இனி லோகோவைக் கவனிச்சு உள்ளே போங்க:-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

போலிகள் நிறைஞ்ச உலகமாப் போச்சே:-(

said...

வாங்க கீதா,

இது மஹாமகக் குளத்தாண்டைதான். ராயாஸ் ஹொட்டேல் பக்கம்.

சிலசமயம் முதல்முறை ருசித்தவைகளின் சுவை அப்படியே மனசில் பதிஞ்சுதான் போயிருது. அப்புறம் அதே கடையில் அதே வகை ருசித்தாலும் முதல் சுவை கிடைக்கறதில்லை.

என் முதல் கப்புச்சீனோ... அஸ்ட்ராலியா கிங்க்ஸ்ஃபோர்ட் இண்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டிலே. ஆச்சு 30 வருசம்.

said...

வாங்க சிவா.

எங்கும் எதிலும் போலிகள் வந்தாச்:-(

said...

வாங்க ஜிரா.

வகை வகையான காஃபி கொட்டைகளுக்கு ராகங்களின் பெயர்கள் வச்சது நல்ல ஐடியான்னே எனக்குத் தோணுது!

ஃபில்ட்டரில் காஃபித்தூள் போடுமுன் கொஞ்சூண்டு சக்கரை போட்டுட்டு அப்புறம் பொடியை கெட்டிக்கணும். கொதிநீர் ஊத்துனவுடன் ஃபில்டர் கண் அடைச்சுக்காம நிதானமா டிகாக்ஷன் இறங்கும்.

புது எலெக்ட்ரிக் ஜக் ஒன்னு வாங்கி இருக்கேன். காஃபி, டீ, இன்னும் சிலபலவித பானங்களுக்கு வெவ்வேற கொதிநிலைன்னு சொல்லுது. காஃபிக்கு 90 டிகிரிதானாம்!

said...

வாங்க வல்லி.

அச்சச்சோ.... வயித்து வலியா? என்ன சாப்பிட்டீங்க? நான் வெறும் பருப்பு நெய் என்பதால் பிரச்சனை இருக்கவில்லை.

கீதா வீட்டு தயிர்சாதமா? பேஷ் பேஷ்!

said...

உங்களுக்கு வந்த சந்தேகம் தான் எனக்கும் . லோகோவை காப்பி அடிக்காமலிருக்கணும் .

நம்ம ஊர்ல இப்போ எங்க பாத்தாலும் .... கும்மோணம் டிக்ரி காப்பி , மெட்ராஸ் காபி , மெட்ராஸ்லையே மைலாப்பூர் காப்பி, அப்டி இப்பிடின்னு ஏகப்பட்ட காபி கடைகள் . ஆனா ஒன்னு கூட இப்போ பதிவுல நீங்க சொன்ன படி காபி தயாரிக்க மாட்டாங்க , அது நிச்சயம் . என்னமோ எல்லாம் கமர்சியல் ஆயிடுச்சு .

said...

ஆகா நான் எல்லாம் மூணாங்க கிளாஸ் முடிக்கவே கஸ்டப்பட்டேன். இங்க காப்பி கூட டிகிரி படிச்சு இருக்கு. அருமை, நீங்க சொல்லும் போதே காப்பி குடிச்ச மாதிரி. நன்றிகள் டீச்சர்.

said...

வாங்க சசி கலா.

அடுத்த பயணத்துலே லோகோ காப்பி வந்தாச்சான்னு தெரிஞ்சுரும்:-))

said...

வாங்க பித்தனின் வாக்கு.

நலமா? ரொம்ப நாளாச்சே!

சரி.சூடா ஒரு காஃபி குடிங்க. அதுவும் டிகிரி:-)