Friday, November 06, 2015

இன்றும் சில சந்திப்புகள்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 92)

நடிகையர் திலகம் வீணை வாசிச்சு எழுப்புனாங்க இன்னிக்கு!   கோமாதா...... எங்கள் குலமாதா....
நல்ல சகுனம்!  காலை பத்துமணிக்கு மலர்விழியுடன் ஒரு சந்திப்பு. இந்த முறை எனக்கு அவுங்க ஆஃபீஸ் போக நேரம் அமையலை என்பதால்  அவுங்களே  வரேன்னு சொல்லிட்டாங்க.  கையில் ஒரு மஞ்சள் ரோஜாக் கொத்து!  கூடவே நன்றின்னு ஒரு  காஃபிக் கோப்பை. நம்ம பெயர்கள் வேற போட்டுருக்கு அதுலே. என்னத்துக்கு இதெல்லாம்னு கொஞ்சம் கடிஞ்சுக்கிட்டேன்.
இவுங்க நம்ம சென்னையில் ஹோப் ஃபவுண்டேஷன் இருக்கு பாருங்க, அங்கே இவுங்க  Exec. Officer-Women & Children Programs. நமக்கு ஒரு 13 வருசங்களாத் தெரியும்.  பெரிய குடும்பி.  நாப்பது பிள்ளைகள்!

 சென்னையில் தாம்பரத்தில் இருந்த இவுங்க ஹோம் இப்ப மேல்மருவத்தூர்  பக்கம் போயிருச்சு. இது ஹோப்பின் சொந்தக் கட்டிடம். பள்ளிக்கூடம், ஹாஸ்டல் எல்லாமும் சேர்ந்து அமைச்சது.  இவுங்களைப் பற்றி முந்தி எழுதுன பதிவுகளில் ஒன்னு  இங்கே.

பண்டிகைகள் எல்லாம் சமீபிக்கிறதேன்னு  பிள்ளைகள் துணிமணி செலவுக்காக ஒரு காசோலை கொடுத்துட்டுக் கொஞ்ச நேரம் பள்ளிக்கூடம், குடும்பம் பற்றியெல்லாம் பேசிக்கிட்டு இருந்தோம். இவுங்க சென்னையில் இருந்தவரை பயணங்களில் பிள்ளைகளைப்போய்ப் பார்ப்பது  வழக்கமா இருந்துச்சு.  வேறிடம் போனதும் இவுங்க தவறாமல் நமக்கு அழைப்பு அனுப்பினாலும்  அது என்னவோ தள்ளிப்போய்க்கிட்டே இருக்கு.

ச்சும்மா  ஆளில்லா அறையில்  மலர்கொத்து   வச்சு அழகு பார்க்கவேணாமேன்னு  மலரிடமே,  மலர்களைக் கொடுத்தனுப்பிட்டேன். அவுங்க அலுவலகத்தில் வச்சாலும்  வந்துபோகும் மக்கள் அழகை ரசிப்பாங்க!
அடுத்தமுறை கட்டாயம் ஒரு விஸிட் அடிக்கணும். மலர்விழி தானே  வந்து கூட்டிப்போறேன்னு சொன்னாங்க. பேஜாராப் போச்சு எனக்கு.   ஊரெல்லாம் சுத்தறோம்.... அந்த வழியாகவும் போயிருக்கோம்.  ஒரு எட்டுப்போகத் தோணலையே....   :-(

மலர்விழி கிளம்பினதும், நாங்களும் தாம்பரம் அத்தை வீட்டுக்குப் போகும் போது  ஒரு நடை நம்ம  விஷ்ணுவைக் கண்டுக்கலாமுன்னு தி நகர் சிவா விஷ்ணு கோவிலுக்குப் போனோம்.


யப்பா..... அந்த  சாலையில் என்னவொரு நெரிசல். வண்டியை ஜஸ்ட் நிறுத்தி இறங்கக்கூட வழி இல்லை. எதிர்சாரியில் நிறுத்திட்டு சாலையைக் கடக்கும் கூட்டத்தோடு ஒட்டிக்கிட்டேக் கோவிலுக்குப் போய் கும்பிடு போட்டுட்டுத் திரும்பினோம். இனி நேராத் தாம்பரம்தான்.

எங்க வீட்டு வேளுக்குடி இவுங்க. கோவில் விவரங்கள் எல்லாம்  அத்துபடி. தூக்கத்துலே எழுப்பிக் கேட்டாலும் கரெக்ட்டாச் சொல்லிருவாங்க. வயசானதால் கொஞ்சம் தள்ளாமை உடலுக்கு.

பகல் சாப்பாடு அங்கேதான். நாம் பயணம் போய் வந்த இடங்களைக் கேட்டு மேல்விவரம் எல்லாம் சொன்னாங்க. வாய்த்த மருமகளும் மாமியாருக்கு மேலே!  எப்பவும் இன்சொல். அஸிஸ்டண்ட் வேளுக்குடியாகிக்கிட்டு வர்றாங்க. க்விஸ் போல  சட்னு அப்பப்ப ஒரு  கேள்வியும் கேப்பாங்க.
அன்றைக்கான கேள்வி... திருநின்றவூர் பெருமாளின் பெயர் என்ன?  சட்னு நினைவுக்கு வரலை.....  விநாடி நேரம் யோசிக்கும்போதே   பக்தவத்ஸலன் என்ற பதில் :-)

பகல் சாப்பாட்டுக்கு, அத்தையின் கடைசி மகன் சந்த்ரு வந்ததும்  கொஞ்சநேரம் பேசிட்டு ரெண்டரை மணிக்குக் கிளம்பினோம். இன்னும் ஒரு வாரத்தில் சந்த்ருவுக்கு  சஷ்டியப்த பூர்த்தி! நமக்கு  இருந்து  அனுபவிக்கச் சான்ஸ் இல்லை. அதுக்காக நமக்கு வரவேண்டிய  கிஃப்ட் வராமப் போயிருமா?  அழகான  காமாக்ஷி விளக்கு, வெள்ளியில்!  நல்லா இருங்க  தம்பதிகளே!

ரெண்டுமணிக்கு மேலேதான் பகல் சாப்பாடே நடக்குது சென்னையில். நம்மவருக்கோ....  கடிகாரமுள் பனிரெண்டரை காட்டினால் போதும், பசி இருக்கோ இல்லையோ சாப்பிடும் கடமையைச் செய்து  முடிச்சுடணும்.
இப்ப நாம் போனது ஒரு பிரபல மருத்துவமனைக்கு. அரசு மருத்துமனை போல் இல்லாமல் அட்டகாசமான முகப்பு. வரவேற்பிலும்  பளிச்னு இருக்கும் குத்துவிளக்குகள், பூச்செடிகள்னு அருமை. நம்ம  நண்பரின் மகள்கூட இங்கே மயக்கமருந்து பிரிவில் மருத்துவரா இருக்காங்க. இப்ப நாம்  இங்கே வந்த காரணம் அவுங்களை பார்க்கறதுக்கு இல்லை.



நம்ம  பதிவுலக நண்பர் (மரத்தடி காலம்!) மகன், ஒரு விபத்தில் சிக்கி  இங்கே சிகிச்சையில் இருக்கார். சின்னப்பையன். சீக்கிரம் குணமாகணுமுன்னு போற கோவில்களில் எல்லாம் வேண்டிக்கிட்டேதான் இருக்கேன். நிலைமையைப் பார்த்தால் இன்னும் கொஞ்சநாள் மருத்துவமனையில் இருக்கும்படியாத்தான் என்ற தகவல் கிடைச்சது.  ஊரை விட்டுக்கிளம்புமுன் ஒரு பார்வை பார்த்துட்டு வந்தால் மனசுக்கு ஆறுதலாக இருக்கும்தானே?

வரவேற்பில் கேட்டபோது, ஐஸியூவில் இருக்கார்ன்னும், நமக்குப்போய்ப் பார்க்க ச்சான்ஸ் இல்லைன்னும்,  கூட இருக்கும்  குடும்ப அங்கம் வந்து கூட்டிப்போனால் ஒருவேளை பார்க்க அனுமதி கிடைக்குமுன்னும் சொன்னாங்க. நண்பரை செல்லில் கூப்பிட்டதும் கீழே வந்தார். இக்கட்டான நிலையில்  மௌனமா இருப்பதே பெரிய ஆறுதல் இல்லையா?  எல்லோருமே  ஒன்னும் பேசத்தோணாமல் நின்னோம். கோபால் ஒரு மாதிரி சமாளிச்சுக்கிட்டு, மகன் எப்படி இருக்கார்னு கேட்டார். டாக்டர்ஸ் கவனமாப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. குணமாக நாள் செல்லுமுன்னு சொல்றாங்கன்னார். நாள் போகட்டும், எப்படியாவது நல்லபடியா குணமானால் சரி என்னும் நிலைமையில் நாம் இருக்கோமே!

அதுக்குள்ளே  மேலே அறையில் இருந்து  கூப்பிட்டாங்க. டாக்டர்ஸ் வந்து பார்த்துக்கிட்டு இருக்காங்களாம். சிகிச்சை பற்றிப் பேசணுமுன்னு இவரைத் தேடறாங்க. உடனே நீங்க போய்  என்னன்னு பாருங்க. எங்க பிரார்த்தனைகள் எப்பவும் உண்டுன்னு சொல்லி நண்பரை அனுப்பிட்டு,  கொஞ்சம் கனத்த மனசோடுதான் பெருமாளுக்கு விண்ணப்பித்துவிட்டுக்  கிளம்பினோம். நல்லபடி குணமாகணும் சாமி.....

நண்பர் உங்களுக்கெல்லாம் தெரிஞ்சவர்தான். நமக்கு நண்பரின்  அப்பாவும் கூட  நண்பரா ஆகிப் பலகாலமாச்சு. அவுங்க  நம்ம ஆசிஃப் மீரானும், அப்துல் ஜபார் ஐயாவும்தான்.

இப்ப நேராத் தி நகர்தான். சின்ன வேலை ஒன்னு இருக்கு நம்ம  ஸ்ரீநிவாஸ ஆச்சாரியிடம்.  ரொம்பவே நம்பகமான நபர். தன்மையான மனிதர். வேலைத்தரமும் நம் மனசுக்கேத்தபடி நல்லாவே இருக்கு.



இங்கே நியூஸியில் ரிப்பேர் வேலைக்கெல்லாம் ரொம்ப மெனெக்கெடணும். ஹை கேரட் கோல்ட்ன்னு முதலில்  ரிப்பேருக்கு எடுத்துக்கவே மாட்டாங்க. தப்பித்தவறி  எதாவது செஞ்சு கொடுத்தாலும்  அதுக்குண்டான கூலி அதிகம். அதனால் எதாவது செஞ்சுக்கணுமுன்னா சென்னைப் பயணத்துலேதான்.

'இதுவா நீ கேட்டுக்கிட்டு இருக்கே'ன்னார் நம்மவர்.

ஊஹூம்... இதே போலத்தான். ஆனால்  வேற ஒரு  மெட்டல் என்றேன்.  ஆள்... கப் சுப் :-))))

கொஞ்சம் காத்திருந்து போன வேலையை முடிச்சுக்கிட்டு,  தெருமுனையில் இருக்கும்  ஜி ஆர் டிக்குள் நுழையாமல் அறைக்கு வந்து சேர்ந்தோம். இன்றைக்கான சுத்தல் முடிஞ்சதுன்னு நம்ம சீனிவாசனை வீட்டுக்கு அனுப்பிட்டோம். ராத்ரி  இங்கேயே எதாவது வாங்கினால் ஆச்சு.  நம்மவருக்கு வழக்கமான ஊத்தப்பம் இருக்கவே  இருக்கு:-)

கொஞ்ச  நேரத்தில் இன்ப அதிர்ச்சி ஒன்னு  செல் வழியா வந்தது!   அடுத்து இன்னொரு கால், இதே விஷயத்தைச் சுமந்து வந்தப்ப மனசுக்கு  மகிழ்ச்சியா இருந்தது உண்மை.

உடனே நம்ம  ட்ரைவர் சீனிவாசனிடம், காலை ஒன்பதுக்கு  வரச் சொன்னோம்.

தொடரும்...........:-)


18 comments:

said...

தொடர்கிறேன் அம்மா...

said...

ப்பா என்ன ஒரு நினைவாற்றல் உங்களுக்கு...சதம் அடிக்க வாழ்த்துகள்..

said...

அந்த நல்ல விஷயம் நான் நினைக்கும் அந்த நல்ல விஷயமாவே இருக்கனும்னு வேண்டிக்கிறேன்.

said...

உங்கள் நண்பர் மகன் சீக்கிரம் குணமாக ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

said...

உங்கள் நண்பர் மகன் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள். சந்திப்புகள் பயணங்கள் தொடரட்டும். அப்பதானே பதிவுகளும் வரும் நாங்களும் நிறைய இடங்கள் பார்க்கலாம் போட்டோ பார்க்கலாம்...அதான்...எல்லாம் சுயநலம்தான்...ஹஹ்

தொடர்கின்றோம். நடுநடுல விட்டுப் போகுது...

said...

நெடு நாட்களாகத் தொடராததால் பலவிஷயங்களை விட்டு இருக்கிறேன். ஆஸீஃப் மகன் நல்லபடியாகக் குணமாக் வேண்டும்..

said...

/இக்கட்டான நிலையில் மௌனமா இருப்பதே பெரிய ஆறுதல் இல்லையா?/

பதிவின் திரு-வாசகம் இதான் டீச்சர்!
ஆசிப் மீரானின் செல்வ மகன், நலமுடன் குணம் பெற வேண்டுதல்கள்!

அந்த மாமியார்-மருமகள் குடும்ப ஒற்றுமை அழகு! வாழி:)

நல்ல விஷயம்-ன்னு ஏதோ இறுதியில் சொல்லி இருக்கீகளே?:)
அந்த நல்ல விஷயமா?:)
எதுன்னாலும், ஈடேற வாழ்த்துக்கள்

என்னது வத்சலா, தொத்சலா -ன்னுக்கிட்டு?:)
திரு நின்ற ஊரில்.. இறைவன்= பத்தராவிப் பெருமாள்!

பக்தர் + ஆவி + பெருமாள்
பக்தர்களை, தன்னோட ஆவி போல வச்சிக் காப்பாத்திக்கறாராம்:)
ஒருத்தன், எந்த இக்கட்டான நிலை வந்தாலும், முதலில் தன் உயிரை/ஆவியைக் காப்பாத்திக்க நினைப்பது தானே, அனிச்சைச் செயல்?

அதே போல், பக்தர்களைக் காப்பாத்தும் அனிச்சைச் செயலாம் பெருமாளுக்கு:)
அதான் ஆழ்வார் பாடிய ஈரத் தமிழ்= பத்தர்+ஆவிப் பெருமாள்!

(திருநின்றவூர் மட்டுமல்ல, திருக்கண்ணமங்கையிலும்)

said...

இப்போது அவர் எப்படி இருக்கிறார்? நீங்கள் எழுதியிருப்பது சுமார் ஒருவருடத்திற்கு முந்தைய செய்தி அல்லவா? நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்தனைகள்.

said...

சந்திப்புகள் தொடரட்டும்..... நானும் தொடர்கிறேன்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.


தொடர்வது மகிழ்ச்சியே!

said...

வாங்க சரிதா.


சதம் அடிக்க முடியலையே. 97 அவுட்! நடந்தது நடந்தபடி என்பதால் எதையும் நீட்டவோ குறுக்கவோ மனசு வரலை. கோபால் வேற சொல்லிட்டே இருந்தார் 100 எழுதி இருக்கலாமேன்னு! அதுக்காக ? குட்டிக்குட்டிப் பதிவாப் பிரிச்சுப் போட்டுருந்தால் 300 ஆகி இருக்குமேன்னேன்!

said...

வாங்க ஜிரா.

எதிர்பார்க்கும் நல்ல விஷயத்தை செல்லில் சொல்ல ரொம்பவே அலட்டிக்கிறானே அவன்! இல்லையோ?

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.


அடி பலம் என்பதால் இன்னும் நாள் செல்லுமாம். நாங்களும் தினமும் பிரார்த்தனை செய்கிறோம்.

said...

வாங்க துளசிதரன்.

வலையில் ஒரு வசதி, எப்ப வேணுமுன்னால் எடுத்துப் பார்க்கலாம். நேரம் கிடைக்கணும் என்பது மட்டுமே சிரமம். நானும் பாருங்க, ஒரு பத்துப் பதினைஞ்சு பதிவுகளுக்குப் பின்னூட்ட பதில்கள் சொல்லாமல் இருந்துட்டு, இப்ப ஒரேடியாச் சொல்லிக்கிட்டு இருக்கேன். அப்புறம்னு விட்டால் நாட்கள் ஓடிப்போயிருது. இப்பவேன்னால் நேரக் குறைவு. இந்த யுகத்துக்கு 24 மணி போதலை:-)

said...

வாங்க வல்லி.

பிரச்சனை இல்லை. எப்போ நேரம் கிடைக்குதோ, எப்போ ஞாபகம் வருதோ, அப்போ:-)

said...

வாங்க கே ஆர் எஸ்.

என் தோழி வத்ஸலா, நீங்க சொல்லும் தொத்ஸலாவைப் பார்த்தால் மனம் வருந்துவாள்.
பக்தர்களை ஒரு வாத்ஸல்யத்தோடு நேசிக்கிறவன் பக்தவத்ஸலனாகவும் இருக்கட்டுமே! அவனுக்கு இருக்கும் கோடிக்கணக்கான பெயர்களில் இதுவும் ஒன்னு!

நாம் எதிர்பார்க்கும் நல்ல விஷயத்துக்கு இன்னும்வேளை வரலை :-(

said...

வாங்க ரஞ்சனி.


இப்போ எவ்வளவோ தேவலை என்றாலும் இன்னும் பூரணகுணம் ஆகலை.

ஒரு பயணம் ஆரம்பிச்சு அதை எழுதி முடிக்க நாந்தான் ஒரு வருசம் எடுத்துக்கிட்டேன். இப்போ பின்னூடத்துக்குப் பதில் சொல்லவும் ஒரு மாசம் :-( சோம்பேறிப்பா !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வது மகிழ்ச்சியே!