Wednesday, June 01, 2016

67 வகைகள்...... அது என்ன கணக்கு ... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 41)

நாம் ஒன்று நினைக்க....  தெய்வம் ஒன்று நினைக்கும்  என்பது ரொம்பச் சரி!
சீக்கிரமா எழுந்துக்கணுமுன்னு நினைச்சதுக்கு எதிர்மாறா அமைஞ்சு போச்சு.  காலையில்  கீஸர் ஸ்விட்ச் எங்கே இருக்குன்னு  தேடித்தேடியே கொஞ்சநேரம் வீணாப்போச்சு.  சரி. இன்னும் நேரம் பாழாக்கவேணாமுன்னு  'பச்சைத் தண்ணி' குளியல் போட்டுட்டுக் கிளம்பினோம்.  முதல்லே  வூட்டாண்டை இருக்கும் புள்ளையார் தரிசனம்.

 அடுத்து   ஸ்ரீபுரம் துர்கை கோவில் வழியா பெரிய கோவில். லார்ட்'ஸ் இன் விட்டு வெளியே வந்தால்  தெருவில் ஆள் அனக்கமில்லை!  அமைதி உறைஞ்சு கிடக்கு!  துர்கை சந்நிதியில்  எதிர்பாராத  இன்ப அதிர்ச்சி!  கவசத்தைக் கழட்டிப் போட்டுட்டு, நேத்து நாம்  வேண்டுதலா சமர்ப்பிச்சப் புடவையைக் கட்டிண்டு, 'துள்ஸி, பார்த்துக்கோ. நல்லா இருக்கா'ன்னு கேக்கறாள்!  'அபாரம்'னு சொல்லும்போதே கண்ணில் குளம் கட்டி....   ச்சே....  இது ஒன்னு  கால நேரமில்லாமல்....   நெஞ்சுக்குள்ளே  மகிழ்ச்சியா, இல்லை அவள் கருணையை நினைச்சு ஏற்பட்ட தாபமா....  தெரியலை ஏதோ...ஒன்னு....

அப்புறம்தான் தெரிஞ்சது.... இப்படி வெளியூர் மக்கள்ஸ் சமர்ப்பிக்கும் உடைகளை  அவர்கள் அங்கே  தங்கி இருக்கும் பட்சத்தில் அடுத்தநாளே  கடவுளர்களுக்கு  சார்த்திடறாங்கன்னு! அப்பதானே  அவர்களும்  கண்ணால் கண்டு  திருப்திப் படமுடியும்?   ஓ    க்ரேட்!

பார்த்த முகம் பார்த்தபடி  இருக்கேனே தவிர வேறொன்னும்  செய்யத் தோணவே இல்லை!  கையில் இருக்கும் கேமெராகூட இப்படி தேமேன்னு  இருக்குமா என்ன?  நம்மவர்  உணர்ந்த நிலையில்  சரசரன்னு தன் செல்லில்  க்ளிக்கி இருக்கார்!

ட்ரான்ஸ்லே இருந்தேன் போல!  போற வழியில் கேன்டீன்லே, எஞ்சினுக்கு  காஃபி ஊத்திக்கணுமுன்னு நினைச்சது கூட  அப்படியே நினைவிலிருந்து  கழண்டு போயிருச்சு.
பெரியகோவில் வளாகத்தை நெருங்கும்போது  நம்மாள்  ஆசையாக் கூப்பிட்டார் தும்பிக்கையைத் தூக்கி!  இவரைப் பார்த்த விநாடி நனவுலகு திரும்பிட்டேன்.  பூரணப்ரம்மம்  வளாகத்துக்குள் எல்லோரும் பரபரன்னு படுபிஸி!  ஒரு மேஜையில்  புத்தகங்கள் காட்சிக்கு வச்சுருக்காங்க. வேணுமுன்னா  இங்கே இருக்கும் கிஃப்ட் & புக்‌ஷாப்பில்  வாங்கிக்கலாம்.
நண்பர் எழுதுன புத்தகங்கள் இருக்கு. இவர் இதுவரை நாலு புத்தகங்கள்  பாபாவோடு பயணம் செஞ்ச அனுபவங்களைப் பற்றி எழுதி இருக்கார். வாங்கிக்கறயா?ன்னு கேட்டார் நம்மவர்.  எதுக்கு? எழுத்தாளரிடம் இருந்தே வாங்கினால் ஆச்சுன்னேன். வழக்கம்போல் எனக்கொரு ஓசி காப்பி கிடைக்கும்தானே:-) கிடைச்சுருச்சு கேட்டோ!  தேங்க்ஸ்  Nila !
ஒவ்வொன்னாப் பார்த்துக்கிட்டு  பிரகாரம் உள்ளே நுழைஞ்சால் உணவு  வகைகளைக்கொண்டு வந்து அடுக்கிக்கிட்டு இருக்காங்க. இன்றைக்கு இங்கே அன்னக்கொட்டு.  அன்னக்கூட் னுதான் எனக்குத் தெரியும். ஒருவேளை இதைத் தமிழ்ப்படுத்தினா இப்படி வரும்போல!
அறுபத்தி ஏழு வகைகள்!  அதென்ன கணக்கு? வேறொன்னுமில்லை. பாபாவுக்கு  இன்று அறுபத்தி ஏழாவது பிறந்தநாள்!  ஜனவரி 28, 1949 இல் பிறந்தவர்!
இன்றைக்குப் பூரணப்ரம்மம்  பெருமாள் கோலத்தில்!  பதினெட்டுப் படிகளில் பாம்பு ஊர்ந்து போக,   பிறை சூடிய லிங்கமா, படமெடுக்கும் அஞ்சு தலையார் குடை பிடிக்க ,  உக்கார்ந்துருந்தது ஒரு  இளவன் ! (வெள்ளைப்பூசணி)

ஒரு லட்டு லிங்கம்கூட இருந்தது!  அடுத்துப் படிகளில்  தலைவாழை இலைகளில் தேங்காய் மூடிகள், விளக்குன்னு ஒரு அலங்காரம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பக்தர்கள் படிகளேறிப்போய் சாமி தரிசனம் பண்ணிக்க இடம் விட்டு வச்சுருக்காங்க.
தினசரி வழக்கம்போல் காலை ஆறரைக்கு  யாகம், அபிஷேகம் அலங்காரம் எல்லாம் நடந்து முடிஞ்சுருக்கு!  நாம்தான் கோட்டை விட்டுருக்கோம் :-(
காலை ஏழரைமுதல் நேற்று இரவு  வாசிச்ச  அதே நாதஸ்வர கோஷ்டி (பாலக்கோடு) வந்து வாசிச்சுக்கிட்டு இருக்காங்க.  வளாகமே கலகலன்னு இருக்கு!


பாபா ஏற்கெனவே வந்து  உக்கார்ந்துருந்தார்! ஹேப்பி பர்த் டே சொல்லிட்டு, 'நம்ம  இடத்தில்' போய் உக்கார்ந்தோம்.  கொஞ்சம் கொஞ்சமா சின்ன அண்ட்  பெரிய அண்டாக்களில் எல்லா வகைகளும்  அன்னபூரணியின் அடுக்களையில் இருந்து வந்ததும் அவைகளைத் தரையில்  அடுக்கி வச்சு சுத்திவர பூச்சரங்களால் அலங்கரிச்சாங்க. ரொம்பக் கலர்ஃபுல்லா சூப்பரா இருந்துச்சு !
இதே பிரஸாதங்களைச் சின்ன அளவில் பாத்திரங்களில் கொண்டுவந்து   படிகளில் இருந்த தலைவாழை இலைகளிலும் வரிசையா அடுக்கி வச்சாங்க.
முதலில் பெருமாளுக்கு  தீபாராதனை முடிச்சு ,  அன்னமயமான  அன்னபூரணியை மனசில் தியானிச்சு  உணவு வகைகளுக்கும்  தீபாராதனை நடந்து பெருமாளுக்கு  நைவேத்யம் ஸமர்ப்பியாமி ஆச்சு. அப்புறம் பாபாவுக்கு மாலை மரியாதைகள்.

திருப்பதி தேவஸ்தானத்து அதிகாரிகளும் பட்டர் ஸ்வாமிகளும் கோவில்  முறையில் வந்து வேதம் , பிரபந்தம் சொல்லி  மாலைகளை  அணிவிச்சாங்க. இன்னொரு மகளிர் குழுவும் இவர்களோடு வந்தாங்களா, இல்லை தனிக்குழுவான்னு தெரியலை.  அக்கம்பக்க பக்தர்களிடம் விசாரிச்சதுக்குத் தெரியலைன்னு பதில் கிடைச்சது!
பாபாவும் பதில் மரியாதைகளைச் செய்தார். அப்புறம்  பக்தர்களையும் விருந்தினர்களையும்  வரவேற்று வாழ்த்திப் பேசினார்.  விழாவை நேரில் வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகளையும் ஆசிகளையும் வழங்கினார். எல்லோரும் இருந்து  சாப்பிட்டுவிட்டுத்தான் போகணும் என்றார். சரின்னுட்டோம் உடனே :-)
இதுக்கிடையில்  மக்களுக்கு பழங்களும், பிஸ்கெட்டுகளுமா  கொண்டுவந்து கொடுத்துக்கிட்டு இருக்காங்க. திராக்ஷைத் தட்டை ஏந்திவந்தவர் , என்னைப் பார்த்துட்டு, துளசி கோபால்? னு கேட்டாங்க!  ஆமாம்னு சொல்லித் திகைக்கு முன் 'நான் மிஸஸ் ச்சூடா' ன்னதும்  எனக்கும்  மகிழ்ச்சியா இருந்தது.  ஃபேஸ்புக்கில்  இவருடைய கணவரைத் தெரியுமே தவிர நேரில் இதுவரை பார்த்ததில்லை.  இவர்தான் இங்கே பெரிய கோவிலில் நடக்கும் எல்லா விசேஷங்களையும் படமாகவும் வீடியோவாகவும் ஃபேஸ்புக்கில் நம்மோடு பகிர்ந்து கொண்டு இருக்கார்.  நேத்து  மாலையும் இவரைத் தேடினேன். ஆனால்  கண்டுபிடிக்க முடியலை!

இங்கே கருவறையைச் சுத்தி இருக்கும் பிரகாரங்களுக்கு மேல்கூரை இல்லை. திண்ணைகள் ஓடும் பிரகாரத் திண்ணைகளுக்கு மேல் இன்னொரு தளம் எழும்பி இருக்கு.  அதனால் எப்பவும் நல்ல காற்றோட்டமாவும் இயற்கை வெளிச்சமாவும்தான் பளிச்னு இருக்கு! ராத்திரி ஆனால்  பிரகாசமான விளக்கு அலங்காரங்கள். இவை முழுசும் ஸோலார் பவர் என்பதால்   சூரியனே  வந்து உதவுறமாதிரிதான் :-)

பஞ்சபூத ஸ்தல்முன்னு இந்தப் பெரிய கோவிலைச் சொல்லலாம்.  நடுவில் ஒரு சின்னத்தோட்டத்தில் உள்ள மண்மீதுதான்கருவறை கட்டப்பட்டுருக்கு.  திறந்தவெளி பிரகாரத்தின் மேலே ஆகாயம், இயற்கைக் காற்று,  கருவறைக்கு நேர் எதிரில் தினமும் நடக்கும்  யாகம்/ அக்னி,  பிரகாரத்தில் தண்ணீர் ஓடும் பாதை இப்படி!

பிரகாரத் திண்ணையில் வந்து  நாதஸ்வர கோஷ்டிக்குப் பக்கத்தில் வந்து பாபா  உட்கார்ந்ததும், பக்தர்கள் அனைவரும்  பூரணப்ரம்மத்தை தரிசிக்க வரிசையில் போனாங்க. நாங்களும் ஜோதியில் கலந்தோம்.  நம்மவர் வரிசையில்  நிற்க, நான் மட்டும் அப்பப்ப வரிசையில் இருந்து விலகி வந்து நிகழ்ச்சிகளை க்ளிக் செஞ்சுக்கிட்டு இருந்தப்பதான் நம்ம 'கோபால் ச்சூடா'வைப் பார்த்தேன்! சரியா நாங்க உட்கார்ந்திருந்த படிகளுக்கு அந்தப்பக்கம் யாக மண்டபத்தில் ஸ்டேண்ட் போட்ட கேமெராவும் கையுமா இருந்தார் :-)
சின்னப்பாத்திர பிரசாதங்களில் இருந்து  ஒவ்வொரு  டீஸ்பூன் அளவு  எடுத்துக் கொடுக்கக் கைநீட்டி வாங்கி வாயில் போட்டுக்கிட்டார் பாபா. இத்தனை பெரிய  நிறுவனத்துக்குத் தலைவர் என்ற கெத்து ஒன்னும் இல்லாமல் சின்னப் பையனாட்டம்  ஆர்வத்தோடு கைநீட்டி வாங்குன  குழந்தைத்தன்மை கூட எனக்குப் பிடிச்சு இருந்தது:-)
ஸ்வாமி நமஸ்காரம் செஞ்சுட்டு நாங்க, பெரிய சிவலிங்கத்தைத் தேடிப் போனோம்.  அடுத்து  சாப்பாடுதான் என்பதால்  உணவு அண்டாக்களை இங்கிருந்து எடுத்துப்போய்  பிரஸாத விநியோகம் செய்ய ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருந்துச்சு.

பிரமாண்டமான சிவலிங்கத்தின் நெற்றிக் கண்வழியா புள்ளையார் தரிசனம் ஆச்சு.  திரும்ப வளாகத்துக்குள் வந்து நம்ம கோபால் ச்சூடா அவர்களைப் பார்த்துக் கொஞ்சம் பேசிக்கிட்டு இருந்தோம்.
கோபால் அண்ட் கோபால் :-)

பஜனைப்பாடல்கள் பாடிக்கிட்டு இருந்தாங்க சில பக்தர்கள்.
நமக்கு ஏற்கெனவே ராமராஜ்யத்தில் அறிமுகமாகி இருந்த  சிலரையும் சந்திச்சு நாலு வார்த்தை பேசிக்க முடிஞ்சது.  நேற்று இரவு நடனமாடிய சின்னப் பெண்ணோடு  சில க்ளிக்ஸ். இடது பக்கம், பெண்களூரில் இருந்து வந்த பக்தர்.

தட்டு நிறைச்சு பிரஸாத வகைகள்....   ஒரு கை பார்த்தோம்னு தனியாச் சொல்லணுமா:-)
சாப்பாடு ஆனதும்  நம்மவர் சீனிவாசனை  செல்லில் கூப்பிட்டு வரச் சொல்லிட்டார்.   மத்தியானம்  இன்னும் நிகழ்ச்சிகள் இருக்குன்னாலும்  களைப்பா இருக்கு, போகலாமுன்னு  சொன்னதால் சரின்னுட்டேன்.
 ஜானகி மேடத்திடம்  நலம் விசாரிச்சுட்டு,  கொஞ்ச நேரத்தில் கிளம்ப இருப்பதாகச் சொல்லி, சாவியை எங்கே கொடுப்பதுன்னு கேட்டதுக்குக் கதவிலேயே விட்டுருங்கன்னாங்க. இன்றைக்கு எல்லோரும் இங்கே கோவில் வளாகத்தில்தான் என்பதால்  ஆஸ்ரமம் முழுசும்  ஆளே இல்லாத மாதிரிதான்!

இதுக்குள்ளே யாகமண்டபத்தில் பள்ளிக்கூடப் பிள்ளைகளோடு  பாபா பேசிக்கிட்டு இருந்தார்.

So, do not simply end by saying 'I like Siva Shankar Baba'. You should scale up to saying 'I am like Siva Shankar Baba'.
I will be more proud, really proud, if you say 'I am better than Siva Shankar Baba'.
That is what I want.  

இப்படித்தான்  சொல்றார் எப்பவும்.  நான் சொல்றேன்னு எதையும் நம்பிடாதே! நல்லா யோசிச்சு முடிவெடு. அதுக்கான  சக்தியும் , புத்தியும், திறமையும் உனக்குள்ளே இருக்கும் இறைவன் அளிக்கிறார்.

டெலிபதியில் போய் வருகிறேன்னு  சேதி அனுப்பினேன்.

வாசல் கேட்டில்   நம்ம வண்டி வந்ததும் உள்ளே அனுப்பச் சொல்லிட்டு அப்படியே அறைக்குத் திரும்ப  வரும் வழியில் மீண்டும் துர்கையைப் பார்த்து போயிட்டு வரேன்னு சொல்லிக்கிட்டேன்.  எதிர் சாரியில் புதுசா எழும்பும்  கட்டடம்  கல்யாண மண்டபமும், ஹொட்டேலுமா ஆகப்போகுது!  பீஹார் மக்கள்ஸ்தான்  வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

பையில் சாமான்களை அடுக்கிட்டு, எதாவது விட்டுப்போச்சோன்னு அறையை மீண்டும் செக் பண்ணும்போது கீஸர் ஸ்விட்ச்  கோபாலின் கண்ணில் பட்டது !

வந்தாச்சுன்னு  செல்லில் கூப்புட்டுச் சொன்னார் சீனிவாசன்.  கேட் கீப்பரிடம் சொல்லி வச்சுருக்கோமுன்னதும்,  விவரம் சொல்லிட்டு  லார்ட்'ஸ் இன் வாசலுக்கு வண்டியைக்  கொண்டுவந்து  நிறுத்தினார்.

ராமராஜ்யத்தில் இன்னும் பார்க்க வேண்டிய இடங்களை பாக்கி வச்சுட்டுத்தான் கிளம்பி இருக்கோம்.  மீதியை அடுத்த பயணத்தில் பார்த்துக்கணும். அதுக்குள்ளே புதுசு புதுசா இன்னும் வந்துரும்!  அழகுக்கும், அன்புக்கும் குறைவே இல்லாத இடம்! நீங்களும் ஒருமுறை  மேலே க்ளிக்கிப் பார்க்கலாம் :-)


ஒரு பிரமாண்டமான கொண்டாட்டத்தைப் பார்த்த நிம்மதியோடு கிளம்பி நம்ம லோட்டஸை  நோக்கி வந்துக்கிட்டு  இருக்கோம்.

தொடரும்.........:-)



12 comments:

said...

அட... நீங்க கொடுத்த சேலையை அடுத்தநாளே கட்டிக்கிட்டாளா.. அம்மன் அருள். இப்பிடித்தான் அப்பப்போ எதையாவது விளையாடி நம்மளைக் கட்டிப் போட்டுருவா.

சமைச்சு வெச்சிருக்குறதெல்லாம் பாத்தா சாப்பிட வாயூறுது.

said...

சூப்பர், பிரசாத வகைகளை கவனித்தேன்😀

said...

67 பிரசாதங்கள்... கேட்கும்போதே சாப்பிட்ட உணர்வு....

தொடர்கிறேன்.

said...

படங்கள் அழகு. அம்மன் நீங்கள் கொடுத்த சேலையில் அழகு.
உணவு வகைகள் மிக அழகாய் இருக்கிறது. சுவையாக இருந்து இருக்கும்.

said...

அருமையான படங்களும் தெய்வங்களும் மனிதர்களும்.

said...

துர்கை அம்மன் அழகு .நல்ல படங்கள்.

said...

வாங்க ஜிரா.

எனக்கும் பார்த்ததும் வாயடைஞ்சுதான் போச்சு. ஹைய்யோ! என்ன அழகு!

சாப்பாட்டை அருமையாகத்தான் சமைச்சுருந்தாங்க.

ஆனால் எனக்கு இவ்ளோ வகைகளைக் கலந்துகட்டிச் சாப்பிடுவது அவ்வளவாகப் பிடிக்காது. தனித்தனியா ருசிச்சு சாப்பிடத்தான் விரும்புவேன்.

said...

வாங்க மதுரையம்பதி.

சூப்பரோ சூப்பர்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கெமராக் கண்ணால் ஒன்னுவிடாமல் தின்னுட்டேன்:-)

said...

வாங்க கோமதி அரசு.

சுவைக்கு என்ன? அடுக்களையில் அன்னபூரணியே இருக்காளே!!!

said...

வாங்க வல்லி.

ரொம்பச் சரி!

said...

வாங்க மீரா!

உண்மையில் அழகோ அழகுதான்ப்பா!