Wednesday, August 03, 2016

திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 68)

 ஊருக்குள்ளே ஒரு ஊர்னு சொல்லிக்கலாம். போனமுறை (2012)  வந்துருந்தோம். இந்தளூர்னு  வழி கேட்டதில் 'அப்படி ஒரு ஊர் இல்லவே இல்லை'ன்னு சொல்லுச்சு ஊர் சனம். என்னப்பா....  இப்படிச் சொல்றீங்களேப்பா....  திவ்யதரிசனக் கோவில் ஆச்சே. பரிமள ரங்கநாதர்னு விளக்கியதும் 'ஓ..  திருவிழந்தூர் கோவிலா....  அதோ அங்கே'ன்னு கை காட்டுனதும் அதே சனம்தான்.   திரு இழந்தூரா?  திக்கிச்சுப் போயிட்டேன். திருவை மார்பில் சுமப்பவனுக்கு நேர்ந்த கதியைப் பாருங்க.

இந்தமுறை  நேரா கோவில் வாசலில் போய் இறங்கினோம்.  கூட அபி அப்பா வர்றாரே!  உள்ளூர் பெருமகன்!
போனமுறை என்ன ஆச்சுன்னா....  நாங்களும், திருமங்கையார் போல் கோச்சுக்கிட்டுத்தான் வந்தோம்.  அவருக்குக் கோச்சுக்கிட்டதும் (பத்துப் பாடல் பாடுனப்புறம்தான்)  தரிசனம் கிடைச்சது.  மூடுன சந்நிதிக் கதவு தானே திறந்ததாம்.  நமக்கு அதெல்லாம் நடக்குமா என்ன?  புரட்டாசி தைலக்காப்புன்னு  சாக்கு வேற!

எல்லாக் கோவில்களிலும் முகப்பில் ஒரு தகரக்கூரை போட்டு வச்சுக் கோபுரவாசலின் அழகையே கெடுத்து வச்சுருக்காங்க :-( 
பெருமாளை ஸேவிக்க ஓடோடி வர்றார்.  கோவில் நடை சாத்தியாச்சு.  அன்னைக்குன்னு பார்த்து  வழக்கத்துக்கு மாறா  சீக்கிரமே சாத்தியிருக்காங்க.  அவ்ளோதான்.... வந்துச்சு கோபம்.  பத்து பாசுரங்கள். நிந்தா ஸ்துதி.

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து; அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு,
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்!
வாசி வல்லீர் இந்தளூரீரே! - வாழ்ந்தே போம் நீரே!

நீர் அழகன் என்று  ஊர் சொல்லுதேன்னு   பார்க்க வந்தால்...  ரொம்பத்தான் உமக்கு . அவ்ளோ அழகன்னா....  எங்களுக்குக் காமிக்காத அழகை   நீரே பார்த்துக்கலாம்.   அதுவுமில்லாம ஒவ்வோரு யுகத்திலும் உமக்கு வெவ்வேற நிறமாமே!  இந்தயுகத்தில் எந்த நிறமுன்னு  காமிக்க மாட்டீரோ!

முன்னை வண்ணம் பாலின் வண்ணம், முழுதும் நிலைநின்ற,
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம், வண்ணம் எண்ணுங்கால் 
பொன்னின் வண்ணம், மணியின் வண்ணம் புரையும் திருமேனி,
இன்ன வண்ணம் என்று காட்டீர், இந்தளூரீரே!

நல்லா பார்த்துக்கும் ஓய். நான் பச்சை நிறமுன்னு  காமிச்சுருக்கார், கடைசியில்.

பஞ்ச ரங்க க்ஷேத்ரத்தில் இந்தளூர்,  பரிமளரங்கம்!  

ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)
அப்பாலரங்கம் - திருப்பேர்நகர் என்ற கோவிலடி
மத்தியரங்கம் - ஸ்ரீரங்கம்
சதுர்த்தரங்கம் - சாரங்கபாணி கோவில், கும்பகோணம்
பஞ்சரங்கம் - பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர்

நான்கு கோவில்களில் ரங்கனை தரிசனம் செஞ்சுருக்கோம்.  இன்னும் ஆதிரங்கம்தான் பாக்கி. இது 108 இல் இல்லை என்பதால்  கொஞ்சம் சுணக்கம். ஆனாலும் போகத்தான் வேணும். கிடைக்குமா என்று பார்க்கலாம்.

இவருக்கு  இன்னொரு பெயர்  அழகான  தமிழில்  இருக்கு.  மருவினிய மைந்தன் !
மேலே: சுட்டபடம்.


அரக்கர்கள் திருடிப்போன வேதங்களை மீட்டு வந்தவர். அரக்கர் கைபட்டு அவைகளுக்கு துர்நாற்றம் வந்துருச்சாம்.  அவைகளைப்போக்கி  நறுமணத்துடன் வேதங்களைப் பரிமளிக்கச் செய்ததால்  பரிமள ரங்கன்.  இந்த இடத்தில் ஊரைச் சுத்தி  நறுமணம் வீசும் நந்தவனங்கள் இருந்ததால், இவருக்குப்  புராணப்பெயர் சுகந்தவனநாதர்!

ஏகாதசி விரதத்துக்கும் இந்தக்  கோவில் ரங்கனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கு.  அட! அப்படியான்னு  சொல்றவங்களுக்காக இதோ கதை!  ஏற்கெனவே நம்ம தளத்தில் வந்ததுதான்:-)

அம்பரீக்ஷன் என்னும்  அரசர் ஏகாதசி விரதங்களை ஒழுங்காகக் கடைப்பிடித்து வர்றார். அவருடைய  நியமங்களைப்பார்த்து தேவர்களுக்கும் பயம், எல்லாம் நல்லபடியாச் செஞ்சு எங்கே இந்த மனுஷ்யர்  தேவர்கள் வரிசையில் சேர்ந்துருவாரோன்னு.... இந்த சமயம் அவர் விரதமிருக்கும் நூறாவது ஏகாதசித் திதியும் வருது.  பயந்து போன தேவர்கள் துர்வாசமுனிவரிடம் போய்  விரதபங்கம் செய்யும்படி வேண்டிக்கிறாங்க. அவரும் இதுக்கு சம்மதிச்சு அம்பரீக்ஷனின் அரண்மனைக்குப் போறார்.

முதல்நாள் முழுப்பட்டினியா ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசி திதி முடியுமுன்   உணவு உண்டு  விரதம் முடிக்கணும் என்பதே நியதி. அரசர் உணவு உண்ண தயாராகும் சமயம்  துர்வாசமுனிவர் அங்கே போய்ச் சேர்ந்தார். முனிவரை வரவேற்று உபசரித்த அரசர் கூடவே சாப்பிடணுமுன்னு அழைக்கிறார். சரி, நான் போய் குளிச்சுட்டு வரேன்னு   நதிக்குப்போனவர் சட்னு திரும்பாம  நேரங்கடத்திக்கிட்டே இருக்கார்.

இங்கேயோ மன்னருக்கு துவாதசி திதி எங்கே முடிஞ்சுருமோன்னு கவலையா இருக்கு.  அதன்பிறகு சாப்பிட்டால் விரத பலன் கிடைக்காதேன்னு  வருந்துகிறார்.  அப்ப அவரது ஆலோசகர்களான  மந்திரிகள்  சாப்பாடு சாப்பிட லேட்டானால் பரவாயில்லை.நீங்க  பெருமாள் தீர்த்தம்   உள்ளங்கையால் மூணு  முறை  குடிச்சுட்டால் விரதபலன் கிடைச்சுரும்.  முனிவர் வந்தபின் அவரோடு சேர்ந்தே உணவருந்தலாமுன்னு சொன்னாங்க.  நல்ல ஐடியா. விரதபங்கமில்லைன்னு அப்படியே செஞ்சுட்டார். துவாதசி திதியும் முடிஞ்சுருது.

ஞான திருஷ்டியால்  இதைத் தெரிஞ்சுக்கிட்ட முனிவர், ஆஹா....என்னை சாப்பிடக் கூப்புட்டுட்டு  எப்படி மரியாதை இல்லாமல் நீ  விரதம் முடிக்கப்போச்சுன்னு  கோபத்தோடு சாபமிட  வேகவேகமா அரண்மனைக்கு வந்து சேர்ந்து, பிடி சாபமுன்னு  பனிஷ்மெண்டைச் சொல்றதுக்குள் அரசர்  பரிமளரங்கனை  சரணடைஞ்சு காப்பாத்தணுமுன்னு வேண்டிக்கறார்.  பெருமாளும் முனிவரின் கர்வத்தையும் கோபத்தையும் அடக்கி, அரசருக்கு அருள் புரிந்து, 'பக்தா என்ன வேண்டுமோ கேள் ' என்று சொல்ல.... அம்பரீக்ஷனும்  தனக்காக ஒன்னுமே கேக்காமல், இங்கேயே இருந்து  மக்கள் அனைவருக்கும்  அருள்புரிய வேணுமுன்னு கேட்க, அப்படியே ஆச்சு.




மூலவர் பாம்புப் படுக்கையில்   கிழக்கு நோக்கி, வீரசயனத் திருக்கோலத்தில் இருக்கார். பத்துவித சயனப்போஸில் இந்த சயனம் இங்கே மட்டும்தானோ என்னவோ?  காலடியில் சந்திரனும், தலைமாட்டில் சூரியனும் நின்று  வணங்குகிறார்கள். இதுவே ஒரு தனிச்சிறப்புதான். போதாக்குறைக்கு  இடப்புறம் வலப்புறங்களில் காவேரியும் கங்கையும்! 


இவரும் சுட்டவரே!

எம்பெருமாளை கும்பிட்டுக்கிட்டுக் கோவிலை வலம் வந்தோம்.


பரிமளவல்லித் தாயார் சந்நிதியில் கம்பிக் கதவினூடாக தரிசனம்.

கோவில் முன்மண்டபத்துலே இருக்கும் தூண்களின் அழகையும் அதிலே செதுக்கி இருக்கும் சிற்பங்களின் அழகையும் பார்க்க ரெண்டு கண்ணும் போதாதுதான்.





ஒரு சிற்பத்தில், சட்னு பார்க்கும்போது  முருகனோன்னு சம்சயம் வரத்தான் செஞ்சது. உக்கார்ந்துருக்கும் ஸ்டைல் அப்படி!  கவனிச்சுப் பார்த்தால்  கருடன்!







நல்லா இருட்டிப்போச்சேன்னு  கிளம்பவேண்டியதாப் போச்சு.  இந்த முறையும்  கோவிலுக்கு நேர் எதிரா   சந்நிதித் தெருவில் இருக்கும் ஆஞ்சியைப் போறபோக்கில் கும்பிட்டதோடு சரி.

நமக்கும் காலையில் இருந்து சுத்திக்கிட்டு இருப்பது  களைப்புதான். மாயூரம் வந்துட்டு மயூரநாதரை தரிசிக்காமல் போகலாமான்னு அவசர அடியா, அங்கேயும் போய்  மயூர நாதருக்கும், அவயாம்பாளுக்கும் ஆஜர்  சொல்லிட்டு அபி அப்பா வீட்டுக்குப் போனோம்.

மயூரநாதர் கோவில் போனமுறை எழுதியது இங்கே.

இனிப்பு ஸேமியா,  வாழைக்காய் பஜ்ஜின்னு  தயார் செஞ்சு வச்சுருந்தாங்க அபி அம்மா.  நட்டுவும் விளையாடி முடிச்சுட்டு வந்து , வீட்டுப் பாடம் செஞ்சுட்டார். அபியைத்தான் பார்க்கமுடியலை. சென்னையில் படிப்பு.


'அக்கா' வீட்டு டிஃபனை ஒரு பிடி பிடிச்சுட்டுக் கிளம்பினோம். ராத்ரிக்கு  இருந்து சாப்பிடாமப் போறோமுன்னு   மனவருத்தம்.  இட்லின்னு ஆசை காமிச்சாங்க அபி அம்மாவும் அபி அப்பாவும். :-)

மனசும் நிறைஞ்சுருக்கு.  வயிறும் நிறைஞ்சுருக்கு. வேறென்ன வேணும்?
பிரியாவிடை ....   ஹொட்டேல் பாம்ஸ்க்கு வந்து சேர்ந்தோம்.
பெயருக்கேத்த அலங்கார(மா)ம்!    பனைமரமாம். ஜோடனைகள்!  வைஃபைக்காக  கீழேயே ஒரு மணி நேரம்  வாசம் ஆனது.


தொடரும்.......... :-)




19 comments:

said...

பாசுரம்
பச்சை வண்ணன்,
பஜ்ஜி எல்லாமே
பிரமாதம், நன்றி;

said...

மருவினிய மைந்தன் !

பரிமள ரங்கன்

சுகந்தவனநாதர்!

பரிமளவல்லித் தாயார் ....ஆஹா அழகு...


ஆதிரங்கம் சென்றது உண்டு...பரிமள ரங்கரை இனி தான் சேவிக்கணும்...இன்று உங்கள் தயவால்பரிமள ரங்கன் கணினி சேவை ஆச்சு..

said...

இன்று உங்களால் பரிமள ரங்கன் தரிசனம் ஆச்சு. நீங்கள் எழுதியிருந்ததைப் படித்தபின்பு எனக்கும் வள்ளி தெய்வானையோடு மயிலில் முருகனோ என்று சம்சயம் வந்தது. ஆனால் இது வைணவக் கோயிலாயிற்றே.

எத்தனை எத்தனை சிற்பங்கள், கல் தூண்கள்.. எவ்வளவு உழைப்பு, செலவு, ஆர்வம். இதெல்லாம் அந்தக் காலத்து அரசர்கள் கோவிலுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும் அதன் மூலமாக கலைஞர்களை வாழ்வித்ததையும் காட்டுகிறது. இப்போ.... ம்.

said...

பரிமள ரங்கனின் தரிசனம் கிடைத்தது....

அதென்ன இனிப்பு சேமியா??? டீச்சர் ரெசிப்பி ப்ளீஸ்???

said...

சிற்பங்கள் செதுக்கியிருக்கும் கல் வேற மாதிரி இருக்கு. எண்ணெய் தேய்ச்சிருக்காங்களோ? இல்ல.. அங்க கெடைச்ச கல் அப்படித்தான் போல.

பொதுவா மகாவிஷ்ணுவை இந்த மாதிரி செதுக்குறதில்ல. இங்க மட்டும் தான் இப்படி இருக்கு போல.

எதோவொரு கோயில்ல சனீஸ்வரனைக் குளிப்பாட்டி ரொம்ப நாளாச்சேன்னு.. பல ஆண்டுகளுக்குப் பிறகு நல்லா அழுக்கு பிசுக்கு போகக் கழுவுனாங்களாம். கடைசில பாத்தா அது முருகனாம். மயில் மேல உக்காந்திருக்காரு. மயிலைக் காக்காவாக்கி முருகனுக்கு ஆண்டாண்டு காலமா மக்கள் எள்ளுப் பொட்டலம் போட்டிட்டிருந்திருக்காங்க :)))))))))))

இனிப்பு சேமியாவும் பஜ்ஜியும் பாக்கவே பக்குவமா இருக்கு. அருமை.

அபி அப்பாவுக்கும் வணக்கங்கள்.

said...

கடந்த சில மாதங்களுக்கு முன் கோயில் உலா சென்றபோது இக்கோயிலுக்குச் சென்றோம். அந்நிலையில் பஞ்சரங்கங்கள் அனைத்தையுமே கண்டதில் எனக்கு மகிழ்ச்சியே. தங்களது பதிவு மூலம் மறுபடியும் திருஇந்தளூர் செல்லும் வாய்ப்பு.

said...

அக்கா நானும் சென்ற முரை இந்தளூர் பெருமாள் சேவித்தேன் அழ்ஹு அழ்ஹு தாயார் ரொம்ப அழ்ஹு.பட்டாசாரியார் இராக்கால பூஜைக்கு சில சாமான்கள் வாங்கித்தர் முடியுமா என கேட்டதால் கடைக்கு ஓடி வாங்கி கொடுத்ததால் தூண் சிற்ப்ம் எல்லாம் பாக்கலை. கோவில் மூடும் முன்பு வர வேண்டுமே என அவசரம்.மீண்டும் போக வேண்டும் பெருமாள் அழஈதால்.அபி அப்பா இருப்பது தெரியாது.

said...

வாங்க விஸ்வநாத்.

ப கர வரிசை பிரமாதம்!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ஆஹா.... ஆதி ரங்கம்!

எனக்கு இன்னும் வாய்க்கலையே..........

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

இப்போ........ ஒன்னும்சொல்வதற்கில்லை :-(

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

சேமியா கேஸரி போல இல்லை. ஆனால் இனிப்பாக இருந்தது. அதான் இனிப்பு சேமியான்னு நாமகரணம்:-) செய்முறையை அடுத்த பயணத்தில் அபி அம்மாவிடம் கேட்டால் ஆச்சு:-)

நான் நினைக்கிறேன்..... பாம்பீனோ ஸேமியாவை நெய்விட்டு வறுத்து 1:1 தண்ணீர் சேர்த்து வெந்ததும் இனிப்புக்கு சக்கரை சேர்த்து மானே தேனேன்னு முந்திரி திராக்ஷையால் அலங்கரிச்சால் என்னன்னு.......... செஞ்சுருவோம் :-)

said...

வாங்க ஜிரா.

வார்னிஷ் மாதிரி எதோ பூசி இருக்காங்க போல! எண்ணெய்ப் பிசுக்குமாதிரி தெரியலை.

படங்களில்தான் எப்பவோ விஷ்ணுவை இப்படிப் பார்த்த நினைவு. ஒரு விநாடி, முருகன்னே நினைச்சேன்!

முருகனை இப்படி சனியாக்கிட்டாங்களே..........

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எனக்கு நாலுரங்கம்தான் இதுவரை!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க மீரா பாலாஜி.

பெருமாளுக்கு செய்யவும் பாக்கியம் வேணும்! நல்லா இருங்க !

said...

மூலராவரோடு இருப்பது ஸ்ரீயும் பூவுமா இல்லை கங்கையும் காவேரியுமா ?

said...

பரிமள ரங்கன் தரிசனம் - திவ்யமாய். நன்றி டீச்சர்.

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

தலைமாட்டில் காவிரி, கால் மாட்டில் கங்கை!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

திவ்யதரிசனம் ஆச்சுல்லே! நன்றீஸ்.

said...

ஆதி திருவரங்கம் நடை காலை 7 முதல் இரவு 8 வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்