Saturday, June 24, 2017

சனிக்கிழமை ஸ்பெஷல்.... வாழைப்பூ பொரியல்

குளிர்காலம் வந்துட்டாலே  தினமும்  சமையல் கொஞ்சம் கஷ்டமாத்தான் போகுது. என்ன காய் என்ன காய்ன்னு  நினைச்சுக்கிட்டே  இருக்கணும். முட்டைக்கோசு காலிஃப்ளவர்  வகைகளைத்தான் கண் நிறையப் பார்க்க முடியுதே தவிர....   நம்ம பக்கத்து  கத்தரிக்காய் கூட   இப்ப காணோம்.  ஃபிஜியில் சைக்ளோன் வந்து  எல்லாம் போச்சாம். தென்னை மரத்துலே தேள்கொட்டுனா.....   கதைதான்.... போங்க.

இருக்கவே இருக்கு ஏஷியன் ஸ்டோர்ஸ்ன்னு  போனா கண்ணில் ஆப்ட்டது வாழைப்பூ!  டின்தான்.   வெளியே படம் சூப்பர்!    தாய்லாந்து  சமாச்சாரம்.


எப்படி இருக்குமோ என்ற ஆர்வத்தில் திறந்து பார்த்தால்....  போனமுறை என்ன செய்யறதுன்னு தெரியாமல் தூக்கிப்போட கூம்பு. அது ஆச்சே ஆறேழு வருசம்!  இன்னுமா இருக்கு?

நல்லா தண்ணீரில் அலசி எடுத்து, நறுக்க முடியலையேன்னு  சின்னத் துண்டுகளா வெட்டினேன்.


பொரியல் செய்யலாமா  இல்லே கூட்டா?  டாஸ் போட்டதில் ஜெயிச்சது பொரியல்தான்.

எடு... கொஞ்சம் துவரம் பருப்பை.  குக்கரில் ஜஸ்ட் ரெண்டே விஸில்.  ஊதி முடிச்சதும்  ஸ்டீம் போகக் காத்திருக்காமல் கொஞ்ச நேரத்துலே குண்டைத் தூக்கி  நீராவியை வெளியேத்திடலாம். இல்லைன்னா.... மசியலுக்குத்தான் அந்தப் பருப்பு.  குக்கரில் இருந்து வெளியே எடுத்த பருப்பில் இருக்கும் தண்ணீரை  ரசத்துக்கு வச்சுக்குங்க. வடிகட்டினால் ஆச்சு.
சொல்ல மறந்துட்டேன்.... இங்கே ஒரு அஸ்ட்ராலியன் கடையில்  சின்ன சைஸில் காய் வடிகட்டி,  குட்டியா ஒரு கடாய்,  சின்னதா   பாத்திரம் (ஒரே ஒரு டிஸைன்தான்) ரெண்டு டாலர்னு கிடைச்சுக்கிட்டு இருக்கு. நம்மூர் விலையில் நூறு ரூ. நல்ல தரமாவும் இருக்கு.  நம்மூரில் நூறுக்குக் கிடைக்காதுன்றது நிச்சயம்.  இதுலே சிறப்பம்சம் என்னன்னா... இது சீனத் தயாரிப்பு இல்லை!   மேட் இன் இண்டியா!!!!!! 

சரி....  இப்பத் தேவையான பொருட்களைப் பார்க்கலாம்.....

வாழைப்பூ  1 டின்

வெங்காயம்   1 மீடியம் சைஸ்.    பொடியா நறுக்கிக்கணும்.  நான் சிகப்பு வெங்காயம் எடுத்துக்கிட்டேன். கொஞ்சம் கலர் இருக்கட்டுமேன்னு.
காய்ஞ்ச  மிளகாய் நாலு. சின்னச்சின்னத் துண்டுகளா ஒடிச்சு வச்சுக்கணும்.
சமையல் எண்ணெய்  மூணு டேபிள் ஸ்பூன்

சீரகம்  அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள்  ஒரு  கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள்  ஒரு கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை  கொஞ்சம்

உப்பு  முக்கால் டீஸ்பூன்

துவரம் பருப்பு  ஒரு  கால் கப்

தேங்காய்த் துருவல்   கால் கப்.

செய்முறை:

நல்ல கனம் உள்ள  கடாயை  அடுப்பில் ஏத்துங்க. தீ மிதமாக எரியட்டும். எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் சீரகம் பெருங்காயம் தாளிக்கணும். (இப்பெல்லாம் கடுகு  அவ்வளவாப் பயன் படுத்துவதில்லை. சீரகத்துக்கு மாறிட்டேன். சீர் + அகம்!  )


படபடன்னு பொரிஞ்சதும்  காய்ஞ்ச மிளகாய் சேர்த்துக் கொஞ்சம் வறுபட்டதும் வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்துட்டுக் கூடவே உப்பும் மஞ்சள் தூளையும் போட்டுருங்க.  வெங்காயம் பாதி வெந்து நிறம் மாறும்போது  வாழைப்பூ துண்டுகள் சேர்த்துக்கணும். தண்ணீர் தேவைப்படாது. ஏற்கெனவே  உப்புத்தண்ணியில் எத்தனை மாசம் ஊறிக்கிடந்ததோ....  பாவம்....   இளந்தீயில் வேகட்டும்.


நல்லா வெந்துருச்சுன்னு தெரிஞ்சதும் எடுத்து வச்சுருக்கும் அரைவாசி வெந்த பருப்பு  (இதுக்குக் கிள்ளுப்பதம்னு ஒரு பெயர் இருக்கு)  சேர்த்துட்டுக் கூடவே தேங்காய்த் துருவலையும் சேர்த்து அஞ்சு நிமிட் அடுப்பிலே வதங்கட்டும்.  ஆச்சு நம்ம பொரியல்!
இப்படியெல்லாம் இருக்க வேண்டியது இப்போ இப்படி ஆகிப்போச்சே....


 நோகாம நோம்பு கும்பிட்டேன்.  கள்ளனையும் காணோம், போலீஸையும் காணோம். கண்ணாடியையும் காணோம்.

இந்த சமையல் குறிப்பு வரப்போகும் ஈஸிபீஸி இண்டியன் ரெஸிபியில் இடம் பெறுகிறது!


Friday, June 23, 2017

வாங்க நம்ம பத்ரியை தரிசிக்கலாம்.... (இந்திய மண்ணில் பயணம் 21)

வாசலைக் கடந்து ப்ரகாரத்துக்குள் நுழையறோம்.  ஒரே ஒரு ப்ரகாரம்தான்.  நேரா   கருவறை.  அவ்ளோ பெரிய கோவில்னு சொல்ல முடியாது. இடப்பக்கச் சுவரில் ப்ரம்மா, ஆதிசேஷனோடு விஷ்ணு, சிவன், கண்பதி, ஆஞ்சின்னு வரிசையா சின்ன புடைப்புச் சிற்பங்கள்.  தனியா ஒரு புள்ளையார் சந்நிதி.   வலதுபக்கம் திரும்பினால் தனியா,  தாயார் சந்நிதி.  மஹாலக்ஷ்மி!  அரவிந்தவல்லித் தாயார்!
புள்ளையாருக்கும் தாயாருக்கும் இடையில் தேவஸ்தான ஆபீஸ் & டிக்கெட் கவுண்ட்டர். பூஜைக்கான கட்டணங்களுக்குப் பட்டியல் அச்சடிச்சு வச்சுருக்காங்க. அதுலே ஒன்னு எடுத்துக்கிட்டேன்.  கண்ணை ஓட்டுனா.... இருபத்தேழாயிரத்தில்  இருந்து  முப்பத்தியொரு ரூ வரையில் பலதரப்பட்டவை.  இருக்கட்டும், நிதானமாப் பார்க்கலாம்....   இப்படி எடுத்தவுடனே ஷாக் கொடுக்காம சின்னதுலே ஆரம்பிச்சு இருக்கப்டாதோ?
முதல்லே மூலவரை தரிசனம் பண்ணிக்கலாமேன்னு  கருவறையை வலம் வந்து வேகமாப் போனோம்.  மூலவர் சேவிக்கும் வரிசையில் நாலைஞ்சு பேர்தான் இருந்தாங்க. பிரகார தேவதைகளை  அப்புறமா தரிசனம் செஞ்சாலாச்சு.

இங்கே ஸ்பெஷல் தரிசனம் என்ற ஒன்னு இல்லை.  மூலவர் தரிசனம் எல்லோருக்கும் ஒன்னேதான்.  பக்கவாட்டு வாசல் வழியா உள்ளே போகணும்.  கருவறைக்குப் போக மூணு வாசல் இருக்கு.  கோவிலின் ப்ரதான வாசலை நோக்கி ஒரு கதவு. சில சமயம் தவிர   இதை எப்பவும் மூடியே வச்சுருக்காங்க. மூலவருக்கு வலப்பக்கம், இடப்பக்கம்னு  ரெண்டு பக்கத்தில் இரண்டு வாசல்கள்.  இப்ப நாம் நுழைஞ்சது  மூலவருக்கு இடப்பக்கம் இருக்கும் வாசல்.
உள்ளே மூணு பகுதிகளா  இருக்கு. கருவறை, தரிசன மண்டபம், சபா மண்டபம். முன்னாடி இருக்கும் தரிசன மண்டபத்துலே கருவறையை ஒட்டி சின்னதா ஒரு பெஞ்சு போல இருக்கையில் ஒரு  காவி உடுத்திய  பண்டிட் உக்கார்ந்துருக்கார். கையில் ஒரு மைக் வேற!  அவருக்கு முன் இருக்கும் இடத்தில்  கருவறையை நோக்கி ஒரு கும்பலா மக்கள் உக்கார்ந்துருந்தாங்க.
நாம்  சபா மண்டபத்தில் இருந்து பெருமாளை ஸேவிக்கிறோம். நமக்கும் உக்கார்ந்துருக்கும் மக்களுக்குமிடையில் ஒரு கம்பித் தடுப்பு இடுப்புயரத்தில். வெள்ளி நிலைவாசல் கருவறைக்கு.
அதுலே பாதிக்குமேல் இடம்பிடிச்சு உக்கார்ந்துருக்கும்  கண்ணாடிப்பொட்டி உண்டியல். நல்லவேளை மூலவரும் அவரோடு மற்ற கடவுளர்களும் சின்ன மேடைபோல் கொஞ்சம் உயரத்தில் இருப்பதால் நமக்கு மறைக்கலை. வெள்ளி வாசலுக்கு ரெண்டு பக்கமும் ஜயவிஜயர்கள்.  கொஞ்சம் நம்ம ஊர் ஸ்டைலில்.

 மூலவர் பத்ரிநாத், கருப்பு  பளிங்குக் கல் சிலை . இல்லை சாளக்ராமோ? நான்கு கைகளுடன் பத்மாசனத்தில் இருக்காராம். முகத்தைத் தவிர  ஒன்னும்தெரியலை. ஜிலுஜிலுன்னு போர்த்திவிட்டுருக்காங்க.  பூக்களால் ஒரு  அலங்காரம்!   கூடவே நகைநட்டுகள் வேற ! வெள்ளி  பீடத்தில்  உக்கார்ந்துருக்கார். தலைக்கு மேல் தங்கக்குடை!  தலையில் தங்கக்ரீடம்.  தலைக்கு ரெண்டு பக்கமும்  மயிலிறகு விசிறி. நம்ம குருவாயூர் க்ருஷ்ணருக்கு இருக்குமே  அப்படி!  நெத்தியில் திருமண்  தகதகன்னு  ஜொலிக்குது. வைரம்தான்! சந்நிதி மேடையில் குபேரன் (முகம் மட்டும் பெருசாத் தெரியுது ) பெரிய திருவடி கருட்ஜி கை கூப்பி நிக்கறார்.  நாரதரும் உத்தவரும். இந்தப் பக்கம் நரநாராயணர்கள்னு  ரெண்டு சிலைகள், உக்கார்ந்து இருக்காங்க.
யாரும் ஜருகு சொல்லலைன்னாலும்  சாமியைக் கைகூப்பி வணங்கிட்டு  சில நிமிசம் நின்னு பார்த்துட்டு  நகர்ந்து போறோம்.   நமக்குப் பின்னால்  இருக்கும் கதவு  அரைக்கதவா கீழ் பாதி  மூடி இருக்கு. அங்கே நின்னும் பக்தர்கள் ஸேவிக்கறாங்க.  நாம் மறைச்சுக்கிட்டு இருக்கோமேன்னு  நாமாய்த்தான் நகர்ந்து போறோம்.

கம்பித்தடுப்பையொட்டி ஒரு  பெஞ்சு, அதுலே பிரஸாதம். எல்லாம் சக்கரை மிட்டாய்தான்.  பக்தர்கள் கொண்டு வரும் தாம்பாளத்துலே இருந்து  கொஞ்சம் எடுத்து ஒரு   சின்ன அண்டா/அடுக்கில் போட்டுக்கிட்டு  மீதிப் பிரஸாதத்தை தட்டோடு பக்தருக்கே கொடுத்துடறாங்க. அப்புறம் அண்டாவில் இருப்பதை வாரி வாரி  வரிசையில் நகரும் நமக்கெல்லாம் தர்றாங்க.
பெருமாள் 'தானே ' ஸ்வயம்புவா தோன்றிய  க்ஷேத்ரங்கள் எட்டுன்னு சொல்வாங்க.  ஸ்ரீரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம், பத்ரிநாத், நாங்குநேரி,  முக்திநாத்,  நைமிசாரண்யம், புஷ்கர்னு....   இது எட்டு இல்லை...பத்துன்னு  சொல்றதும் உண்டு.  மற்ற ரெண்டு,  காஞ்சிபுரமும் மேல்கோட்டையும்.
இந்தக்  கோவிலில் மீண்டும் பத்ரிநாதரைக் கொண்டு வந்து வச்சவர் யாருன்னா...   ஸ்டாப்...ஸ்டாப்.... அதென்ன மீண்டும்? அவர்தான் ஸ்வயம்புவாச்சே!

ஆமாம். தானே தோன்றியவர்தான்.  ஆனால் புத்தமதத்தினர்   இந்தக் கோவிலைப் பிடிச்சுக்கிட்டு, பத்ரியைத் தூக்கி  கடாசிட்டாங்க.   இவர் போய் விழுந்தது, அந்த நாரத் குண்ட் என்னும்  நாரதர் குளத்துலே!  இங்கே இருக்கற குளிருக்கு, வெந்நீர் ஊத்துலே நிம்மதியா  இருந்துருப்பார்.
அப்போ ஒரு சமயம் நம்ம ஆதிசங்கரர், காலடியில் இருந்து  காலடியாவே நடந்து பாரதத்தை கிழக்கும் மேற்கும், வடக்கும்  தெற்குமா  அளந்துக்கிட்டு இருக்கார்.  சின்ன வயசு.  மனச்சோர்வு இல்லை.  இங்கே வந்து சேர்ந்து, வெந்நீர் குளத்துலே குளிக்கும்போது  சிலை கிடைச்சுருக்கு!
அதை வெளியில் எடுத்தவர், மீண்டும்  கோவிலில் பிரதிஷ்டை செஞ்சுருக்கார். அப்போ இங்கே ஆட்சி செஞ்சுக்கிட்டு இருந்த மன்னர்  கோவில் கட்ட உதவி இருக்கார்.

நல்ல தரிசனம்தான். தாயார் சந்நிதிக்கு எதிரில் இருக்கும் வாசல் வழியே வெளியே வந்ததும்,  தாயாருக்கு இன்னொரு கும்பிடு போட்டுட்டுக் கோவிலை வலம் வர்றோம்.  நேரே இடது பக்க மூலையில்  ஆதிசங்கரருக்கு ஒரு சந்நிதி.  நேரெதிரா   வெராந்தா மாதிரி இருக்குமிடத்தில் பக்தர்கள் உக்கார்ந்துக்கலாம்.  வலப்பக்க ஓரத்தில் கம்பியழி போட்ட வெராந்தாப் பகுதி. உள்ளே  எதோ  குருவோடு யாத்திரை வந்த குழு. அடைச்சு உக்கார்ந்து பஜனை பாடிக்கிட்டு இருந்தாங்க.

கருவறையை ஒட்டியே சுவத்தில் காமதேனு , தர்மஷிலான்னு ஒரு  பெரிய கல் உருவம் இருக்கு. அப்படியே கும்பிட்டுக்கிட்டுப் போறோம். மூலையில் வலம் திரும்பியதும்  வரிசையா நாலைஞ்சு சந்நிதிகள்.  கண்டகர்ணா சந்நிதி. இவர் க்ஷேத்ரபாலராம்.  அடுத்து செந்தூரமினுக்கில் நம்ம ஆஞ்சி!  கொஞ்சம் பெரிய உருவம்தான்.

அடுத்த சந்நிதியைப் பார்த்து நான் அங்கேயே நின்னுட்டேன். நரநாராயணர்ன்னு!  நாராயணன் தவக் கோலத்தில்  ஒரு பீடத்தில் பத்மாசனம் போட்டு உக்கார்ந்துருக்கார்.  அவருக்குப் பக்கத்தில்  அர்ஜுன்.  நம்ம அர்ஜுன்தாங்க. வலது காலை மடக்கி அந்தப் பாதம் இடது காலின் முழங்காலில் முட்டுக்கொடுத்துருக்க, இடது பாதம் தரையில் நல்லா ஊன்றிக்கிட்டு நிக்கறார்.  இடது கையில் காண்டீபம்.  என்ன ஒரு அழகான முகங்கறீங்க?  இளவயதுக்காரன் இல்லை. குறைஞ்சது அம்பது வயசுக்காரனா இருக்கணும்.  முகத்துலே முதிர்ச்சி தெரியுது!   கம்பீரமான பெரிய மீசை வேற!  மெய் மறந்து நின்னேன்!   வெள்ளி விக்ரஹங்கள்!  நல்ல பெரிய சைஸ்தான். ரெண்டரை அடி உயரம்  இருக்கலாம். கிண்னுன்னு  ஸாலிடா  இருக்கு. பெருமாளுக்கு முன்னால்  இவுங்க உயரத்துக்கும் பருமனுக்கும் சம்பந்தமே இல்லாம துக்கினியூண்டு மரப்பாச்சி மாதிரி   ரெண்டு சிலைகள். யாருன்னே தெரியலை.

பெருமாளுக்கும், அர்ஜுனனுக்கும்  ஜிலுஜிலுன்னு    நார்த் இண்டியன் பாவாடை (அதான் விக்ரகங்களுக்கு விஜயா ஸ்டோரில் விக்குதே, அதைப்போல) கட்டி விட்டுருக்காங்க. நாந்தான் கால் எப்படி வச்சுருக்கார்னு  பெருமாள் பாவாடையை விலக்கிப் பார்த்தேன். உண்மையில் பத்தும் பத்தாமையுமா முதுகாண்டை  ஓப்பனாக் கிடந்துச்சே.  அப்பத்தான்  தெரிஞ்சது....   உக்கார்ந்துருக்கார், ஆனால் உயரமான ஒரு பீடத்துக்கு மேலேன்னு!  அப்படியே அர்ஜுனன் உடுப்பை விலக்கினால் கால்  'எல்'  மாதிரி  அடுத்தகாலைத் தொட்டுக்கிட்டு இருக்கு!

ச்சும்மாச் சொல்லக்கூடாது,   இதை  வடிவமைச்சு வார்த்தவர்  உண்மையில் கலைஞர்! ரசனை மிக்கவரா இருக்கணும்.

போலாமா, போலாமான்னு நம்மவர் கேட்டுக்கிட்டே இருக்கார். எனக்குத்தான் போக மனசே இல்லையே.....

அடுத்து ஒரு  திறந்த மண்டபம் போல ஒன்னு. அதுலே யாகம் செய்யும் குண்டம் ஒன்னு.  யாரோ சிலர் தீ வளர்த்துக்கிட்டு இருக்காங்க. அங்கேயும் ஒரு   பண்டிட் இருக்கார்.

கோவில் வாசலுக்குப் போகும்போது இடதுபக்கச் சுவரில் சூரியன்! அதென்ன கணக்கோ எட்டுக்குதிரை பூட்டிய சாரட்டில்!

மணி பார்த்தால் பதினொன்னேகால். சரியா ஒரு மணி நேரம் கோவிலுக்குள்ளே இருந்துருக்கோம். அதுலே அரை மணி அர்ஜுன் பக்கத்துலே :-)

சிம்மவாசல் படிக்கட்டில்  நம்மவர்  உக்கார்ந்தார். விடலாமோ? க்ளிக் க்ளிக். :-)
வெளியே நல்ல கூட்டம்.  எல்லா மாநில மக்களுமாய் கலந்து கட்டி. அப்பதான் ஒரு பெரியவர் தன்னுடைய செல்லை நீட்டி படம் எடுத்துத் தரச்சொன்னார்.  சென்னைவாசி. நம்ம சிந்தாதிரிப்பேட்டை விஸ்வநாதன்!
இன்னொரு பத்துப்பேர் குழு அவுங்க செல்லை நீட்டுனாங்க. சமூகசேவைதான்!  நாமும் அவுங்க சேவையைக் கேட்டு வாங்கிக்கிட்டோம்.

 சரியா  செல்ஃபி  எடுக்க வர்றதில்லைபா......   செல்ஃபி ஸ்டிக் ஒன்னு   வாங்கி வச்சு  இதுவரை அதைப் பயன்படுத்தவே இல்லை.  ஏன் கொண்டுவரலைன்னு சண்டை    போடலாமான்னு நினைச்சு, பிறகு மனசை மாத்திக்கிட்டேன்.  பாவம்  பெருமாள்.... இங்கேயுமான்னு நினைச்சுக்கப் போறார்!
கருவறையில் பார்த்த கடவுளர்களை  திரும்ப மனக்கண்ணால் தரிசனம் செஞ்சுக்கிட்டு இருந்தேன். அப்பதான் சட்னு ஒரு தோணல். உத்தவர் ஏன் இங்கே இருக்கார்?  அவரும் சாமி ஆயிட்டாரா?   விசாரிக்கணும்.  அப்புறம் விவரம் கிடைச்சது.

க்ருஷ்ணாவதாரம் முடிஞ்சு பலராமன், வெள்ளைப் பாம்புருவில் பிலத்துக்குள் போயிட்டார்.  க்ருஷ்ணனும், ஜாராவின் அம்பு காலில் துளைச்சதால்  அவதாரத்தை முடிச்சுட்டுக்கிளம்ப ரெடியாகிட்டான்.  (குஜராத் பயணத்தில்  வெராவல் கோவிலில்  பார்த்துருக்கோம். ) அப்பதான் க்ருஷ்ணனுக்கு ரொம்பவே ப்ரியமான உத்தவர்  (இவர்தான் கோகுலத்தில் இருந்த க்ருஷ்ணனை,  மதுரா மன்னன் கம்சனிடம் கூட்டிவரப் போனவர்.  அவனும் பாருங்க.... தன்னுடைய  சாவுக்காகவே இவனைக் கூட்டிவான்னு அவரை அனுப்பி இருக்கான்.  இப்படி சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிட்டானே) தானும் கூடவே வரேன்னு  சொல்றார்.  'உம் ஆயுசு முடியலை. அதுவரை நீர் ஜீவிக்கத்தான் வேணுமு'ன்னு  க்ருஷ் சொன்னதைக் கேக்காமல்   கூட வந்தே தீருவேன்னு அடம் பிடிக்கறார்.  அப்பதான் க்ருஷ் சொல்றான்....  ' நீர் பத்ரியில் போய்  எனக்காகக் காத்திரும். அங்கே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்'  அதனால்தான்  இவர் இவ்ளோதூரம் வந்து  இங்கேயே அவனுக்காகக் காத்திருந்தார்.  அதுக்காகத்தான் அவர் சிலையும் இந்தக் கூட்டத்தில் இருக்கு!

நம்ம புராணங்களில் பாருங்க....   எப்படியெப்படியோ பல சம்பவங்களும் கதைகளும் ஒன்னுக்குள் ஒன்னாகப் பின்னிப் பிணைஞ்சு கிடக்கு என்றதை யோசிச்சால்..... ஹைய்யோன்னு இருக்கும்.   கதைன்னே வச்சுக்கிட்டாலும்....  எப்படி இப்படி? லாஜிக்காலேயே  அடிச்சுட்டாங்க   அந்த 'புனைவாசிரியர்கள்' இல்லே? 

கோவில் பனிரெண்டரைக்கு  மூடிருவாங்களாம்.  கருவறை இருக்கும் கட்டடம் மட்டும்தான். பிரகாரத்துக்குப் போய்வரலாம்.  பிரச்சனையே இல்லை. அதான் சனம் கூட்டங்கூட்டமா போறதும் வாரதுமாத்தானே  இருக்காங்க.


வேடிக்கை பார்த்துக்கிட்டே மெள்ள படிகள் இறங்கிப் பாலம் வழியாவே  நடந்து  கடைவீதிச் சந்தும் தாண்டி கார்பார்க் வரை நடந்தோம்.  ரோட்ஸைட் ஸலூன் இருக்கு!

அங்கே இன்னொரு குருஜி, தன்னோடு வந்த பக்தர்களுக்கு எதோ சாமி கதை சொல்லிக்கிட்டு நிக்கறார். இப்பெல்லாம் குருஜிக்கள் இப்படி எக்ஸ்கர்ஷன் கூட்டிப்போவது  அதிகமாகி வருது, இல்லையோ?
கார்பார்க்கில் இருந்து  பளிச்ன்னு தெரியுது நீல்கந்தா சிகரம்!  பனி மூடி, வெள்ளை வெளேர்னு அழகு!
நம்ம வண்டியைக் காணோமேன்னு  சுத்திக்கிட்டு இருக்கோம், முகேஷ் வேறெங்கிருந்தோ ஓடி வர்றார்.  பக்கத்து சந்துலே பார்க் பண்ணிட்டாராம். காரணம்?  இலவச இடம்:-)
பாதையில் அங்கங்கே  சேர் போட்டு உக்காந்து  மக்களைக் கவனிச்சுக்கிட்டு இருக்கு 'புலீஸ்'.  யாரையும் உபத்திரம் செய்யலை.  நாங்க அறைக்கு வந்துட்டோம்.  உச்சி நேரத்துக்கு சுத்த வேணாமேன்னுதான்.  கொஞ்சம் ஓய்வுக்குப்பின் பகல் சாப்பாட்டுக்குப் போனால் ஆச்சு.

பொதுவா பத்ரியில் இணையத்தொடர்பு  அநேகமா இல்லைன்னு சொல்லலாம். ஹொட்டேலில் நோ வைஃபை.  ஒருவிதத்தில் அப்பாடான்னு நிம்மதியா இருந்ததும் உண்மை!

கொஞ்ச நேர ஓய்வுக்குப்பின் சாப்பிடப்போகலாமேன்னு சொல்லிக்கிட்டு இருந்த நம்மவர் ஒரு தூக்கம் போட்டார். எனக்குப் பொழுது போக்க ரெண்டு பொம்மைகள் மட்டும்தான்.  கெமெராக்கள்.  ஒரே ஸீனை  மாத்தி மாத்தி அந்த ரெண்டு கெமெராவில் க்ளிக்கிட்டு இருந்தேன்.
ஊரைச் சுத்தியும் மலைகளே மலைகள். கோவில்கூட நரன் நாராயணன் என்ற மலைக்குக் கீழேதான் இருக்கு!  இங்கேதான்   மஹாவிஷ்ணு தவம் செஞ்சாராம்.  'ஐயோ..   புருஷனுக்கு  வெயில் ஆகாதே'ன்னு  அந்த மஹாலக்ஷ்மியே  இங்கே  மரமா நின்னு  நிழல் கொடுத்தாளாம்.  அதுவும் என்ன மரம்? நல்ல பெரிய பெரிய இலைகள் குடைபிடிக்கும் மரமா இல்லாம  வதரி மரம். வடக்கீஸ்களுக்கு  வ வராதுன்னு  ஏற்கெனவே சொல்லி இருக்கேனே ...  ஞாபகம் இருக்கோ?   அதனால் இந்த வதரி, இங்கே  பதரி  ஆகிப்போச்சு.  வதரிகாஷ்ரம். பதரிகாஷ்ரம்.   மெள்ள மெள்ள பதரி,  பத்ரியும் ஆச்சு.

வதரிப் பழம் அநேகமா எல்லோருமே தின்னுருப்போம்.  இல்லைங்கறீங்களா?  ஊஹூம்ம்....  தின்னது உண்மை. வேற ஒன்னுமில்லை. இலந்தப் பழம்தான் இது. இந்த இலந்தைப் பழத்துக்கும், சாமிக்கும் எதோ சம்பந்தம் இருக்குதான் போல.  பொற்கோவில் பயணத்துலே  அந்த அம்ரித் ஸரோவர் கரையிலே கூட இலந்தை மரங்கள்தான் இருக்கு.  மூணும்  ரொம்ப வயசான மரங்கள். 600 வயசுன்னு சொல்றாங்க. அப்போ  தங்கக்கோவிலுக்கு நம்ம  கூட வராதவங்க, இப்பப்போய் எட்டிப் பாருங்க நேரம் இருந்தால்..தொடரும்.........  :-)

PINகுறிப்பு:   கருவறைப்   படங்கள் அனைத்தும் சுட்டவைகளே.....    ஆண்டவருக்கு அருளியவர்களுக்கு நன்றி.
படங்களைத் தேடுனபோது....  இது ஜெயின் கோவிலாக இருக்கணுமுன்னு  ஒரு  இடத்தில் இருக்கு.  ..... உண்மையா இருக்குமோ?  ஙே....

Wednesday, June 21, 2017

ஜெய் பத்ரி விஷால்....... (இந்திய மண்ணில் பயணம் 20)

அடுத்த பனிரெண்டு கிமீ பயணம் கொஞ்சம் ஆபத்தான பாதையில்தான். ஒரு பக்கம் மலை, அடுத்த பக்கம் பாதாளம். சாலையில் பாதுகாப்புக்கான கட்டைச்சுவர்கள் இல்லை.
கீழே அலக்நந்தா அவ பாட்டுக்கு ஓடிக்கிட்டு இருக்காள்.
ஃபைபர் ஆப்டிக் கேபிள் போடும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு. போட்டு முடிச்சுட்டால்  இணையத்துக்கு வேகம் வந்துரும்.
மலையில் இருந்து இறங்கிவரும் சின்னச்சின்ன நீர்வீழ்ச்சிகள் அங்கங்கே!         சனம்  அங்கங்கே  குளிக்குது.  ஆத்தை அசிங்கப்படுத்தாமல் இருக்கணுமே  பெருமாளே.....

உயரம் அதிகமாறதை உணர முடியுது.   சில இடங்களில் மட்டும்  மலைச்சரிவு பாதுகாப்பா அங்கங்கே ரீடெய்ன் வால் கட்டியிருக்காங்க.  இந்த பதினொரு கிமீ தூரம் வர்றதுக்கே 43 நிமிசம் எடுத்துருக்கு.  இதோ பத்ரிநாத் வந்தே வந்துட்டோம். ஊருக்கு முன்னாலேயே நாம் தங்கும் ஹொட்டேல் 'ஸரோவர் போர்ட்டிக்கோ' வந்துருது.

வண்டி விட்டு இறங்குனதும் இந்தாண்டை நீல்கந்தா மலைச்சிகரம், வெண்பனிப் போர்வையில்!  இந்த நீல்கந்தா மட்டும் ஊருக்குள்ளே எங்கே போனாலும் நம்மை விடாமல் பார்த்துக்கிட்டே நிக்குது.  அதுக்குத் தெரியாமல் நம்மால் ஒன்னுமே செய்ய முடியாது :-)
ஹொட்டேலுக்குள் நுழைஞ்சதும் சகுனம் ரொம்பச்சரி.  ரெண்டு பெரிய யானைகள் வரவேற்க, புள்ளையாரும் நாராயணனும்மா நின்ற கோலத்தில் ! நடுவில் சிம்மவாஹினி சந்தோஷி மாதா! நம்ம பக்கத்து ஸ்டைல் குத்துவிளக்கொன்னு  நின்னு நிதானமா முத்துச்சுடரோடு!
அறைக்குப்போன அஞ்சாவது நிமிட்டில் கிளம்பிட்டோம். பெருமாளே.... இதோ வந்தேன்.....
சரியா ஒரு கிமீ தூரத்துலே இருக்கார் பத்ரிநாத்.  கிளம்பிப்போய் கடைகள் நெரியும் ஒரு முட்டில்  வண்டியில் இருந்து இறங்கிக்கணும்.  வலதுபக்கம் கார் பார்க்கிங் ஏரியா.  இடது புறம்   சந்துலெ இருக்கும் கடைகளுக்கு நடுவில் நீந்திப்போனால்  கடைசியில் ஒரு பாலம். பாலத்துக்கு அந்தாண்டை கோவில்.

பாலத்துக்குக்கீழே அலக்நந்தா கொந்தளிச்சுக்கிட்டுச் சுழிச்சு ஓடறாள், படு வேகமா! கோவில் கொஞ்சம் மேடானபகுதியில் இருப்பதால் சந்துக்குள் இறங்கினதும்  பார்வைக்குத் தெரிஞ்சுருது!
மொட்டைமாடி போல ஒரு இடத்துலே நின்னு,   'ஹைய்யோ.... கிடைக்குமா'ன்னு ஏங்கிக்கிடந்த  கோவிலைப் பார்த்ததும்  கண்ணுக்குள்  கரகரன்னு  தண்ணீர்  சேர்ந்தது உண்மை.

கோவிலையொட்டியே மலைச்சரிவில் நெருக்கமா ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் ஜேஜேன்னு இருந்தும்கூட... கோவிலின் அலங்காரமும் மிடுக்கும் அழகும் தனியாத்தான் தெரியுது!
பாலத்துக்கு  ஒரு அலங்கார நுழைவு வாசல்! ருத்ராக்ஷ சரங்களைத் தொங்கவிட்டுருக்காங்க.

பாலத்துக்கு அந்தாண்டைப் பக்கமும் ஒரு அலங்காரவளைவு. அங்கிருந்து படிகள்!

தலையை உயர்த்தி அண்ணாந்து கோவிலைக்  கும்பிட்டப்போ  வானத்தில்  வட்டமிடும்  ரெண்டு கருடர்கள்!  சகுனம் ஓக்கே! மேலே ஏறாமல்  கீழ்ப்புறம் இறங்கிப்போறோம்.  தப்த் குண்ட் இங்கேதான்!
மக்கள் வெள்ளம்தான் எங்கேயும்!   இந்த வெந்நீர் குளத்துக்கு,  நீர் வரும் சின்ன  வழியில் கைநீட்டி  தண்ணீர் எடுத்துத் தலையில் தெளிச்சதோடு சகல பாபங்களும் போயே போச்!


இந்தத் தண்ணீரை ரெண்டு  குளங்களில் பாயும்படி செஞ்சுருக்காங்க. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனி இடங்கள். ஆண்கள் பகுதியில்  கூட்டம் அதிகம். பெண்கள் பகுதியில்  காலின்னு சொல்லலாம். ஒரு அம்மா மட்டும் கரையில் உக்கார்ந்து  உள்ளே இறங்கலாமா வேணாமான்னு பார்த்துக்கிட்டு இருந்தாங்க.


பெரியக்காவின் நாத்தனார், அந்தக் காலத்துலேயே பத்ரிநாத் பயணம் போய் வந்துருந்தாங்க. அது இருக்கும் ஒரு அம்பத்தியஞ்சு வருசத்துக்கு முன்னால்.... எப்பவாவது பேச்சு பயணத்தைப்பற்றித் திரும்பும்போது கதைகதையாச் சொல்வாங்க. சின்னப்புள்ளைங்களா, நாங்கெல்லாம் கூட உக்கார்ந்து 'ஆ'ன்னு கேட்டுக்கிட்டு இருப்போம். (அதானே... அப்பெல்லாம் ப்ளொகா, இல்லை ஃபேஸ்புக்கா? ... எல்லாத்தையும் எழுதிப்போட்டுவிட? )

அப்போ இந்த சுடுதண்ணி ஊத்து பத்திச் சொன்னப்ப...  ஒரு துணியில் அரிசியை கொஞ்சம் லூஸா மூட்டை கட்டி, ஒரு குச்சி முனையில் தொங்கவிட்டு, அந்த சுடுதண்ணிக்குள்ளே முக்கி வச்சுருப்பாங்களாம்.  கொஞ்ச நேரத்துலே அது  சோறா வெந்துருக்குமாம். இப்படித்தான் உருளைக்கிழங்கு, சிலகாய்கறிகள்னு   வேகவச்சு சாப்புட்டாங்களாம் அந்தப் பயணத்தில்.   எல்லாம் ஒருத்தரைப்பார்த்து ஒருத்தர்  சமைக்கிறதுதான்:-)

இப்ப அந்த அளவு சூடெல்லாம் இல்லை.  வேறெங்கிருந்தோ  தண்ணீரை விளாவி பைப் லைனில் வருதுன்னு நினைக்கிறேன். நல்ல குளிக்கும் பதத்தில்  இருக்கும் சூடுதான்.  மெள்ளக் காலை நனைச்சுப் பார்த்தேன். இதம்.  ஆனால்.... குளிக்கலை.
நம்மவரைக் குளிக்கிறீங்களான்னு கேட்டதுக்கு தலையை ஆட்டுனார் 'நோ'ன்னு:-)  முழு பாரத தேசமும் இங்கே சங்கமம்தான். எத்தனை விதம், எத்தனை மொழி, எத்தனை வகைன்னு.....   இப்படிப் பார்க்கறதே பெரிய புண்ணியம்தான்.
அலக்நந்தா கரையில் பித்ரு தர்ப்பணம் கொடுக்கறது  ரொம்பவே விசேஷமுன்னு  பண்டிட்கள் மக்களுக்கு  அறிவுரை சொல்லிக்கிட்டு இருக்காங்க. நாரத் குண்ட், ப்ரம்ம கபாலம் இங்கே மட்டும் தர்ப்பணம் கொடுத்துட்டீங்க.... இனி  வேறெங்கும், எப்பவுமே கொடுக்க வேணாமாம்..... காசியில் ஆயிரம் முறை தர்ப்பணம் செய்த பலன் இங்கே ஒருவாட்டி செஞ்சாலே கிடைச்சுருமாம்! ( அதனால்  எல்லாக் காசையும் இங்கேயே கொடுத்துப்போயிருங்க. அதுதான் புண்ணியங்களில் பெரியது!)

 அடடா.... இதுக்கெல்லாம் ஆயுத்தமா வரலைன்ற கவலையே வேணாம். கை நிறையக் காசு  வச்சுக்கிட்டு,  சரின்னு தலை ஆட்டுனாப் போதும். சகல ஏற்பாடும் நொடிகளில்! கிடைச்ச இண்டு இடுக்குகளில் சட்னுஒரு  துணியை விரிச்சுப்போட்டு பூஜை ஆரம்பிச்சுடறாங்க.

இப்படி ஒருத்தருக்கு  புது பாக்கெட்டைத் திறந்து பஞ்சகச்சம் கட்டி விட்டுக்கிட்டு இருந்தார் ஒரு பண்டிட்.  அவர் பெயர் ஜோஷி. கட்டிவிடப்பட்டவர் பெயர் தோஷி.  அடடா என்ன இப்படி ஒரு பெயர்ப்பொருத்தமுன்னு  அனுமதி வாங்கிக்கிட்டு க்ளிக்கினேன். ரொம்ப மகிழ்ச்சியா போஸ் கொடுத்தாங்க  ஜோஷி அண்ட் தோஷிஸ்.
பூஜைக்கான பொருட்களை விற்கும் கடைகளும் வியாபாரிகளும் சகல இடங்களிலும்!  எப்போ யாருக்குத் தேவை இருக்குமோ என்ற எண்ணம்தான் :-)
தாம்பாளம் போல தட்டுலே  உலர்ந்த பழவகைகள், பாதாம் முந்திரின்னு  நட்ஸ் வகைகளை அழகா அடுக்கி அதுக்கொரு மஞ்சள் கண்ணாடிப் பேப்பர் போட்டு அடுக்கி வச்சுருக்காங்க.  நம்ம பர்ஸின் கனத்துக்குத் தக்கபடி வாங்கிக்கிட்டு பத்ரிநாதரை தரிசிக்கக் கோவிலுக்குள் போகலாம்.
மாடிக்குப்போக ரெண்டு பக்கமும் படிகள் கட்டி இருப்பாங்க பாருங்க அப்படி ஒரு டிஸைன்.  எதாவது ஒரு பக்கத்தில் ஏறி லேண்டிங் பகுதியில் நின்னு  கண்ணெதிரே இருக்கும்   பத்துப்பனிரெண்டு படி வரிசையில் ஏறிப் போகணும்.  இந்தப் பகுதிதான் இங்கத்து  ஃபோட்டோ ஸ்பாட்!  இங்கே நின்னு படம் எடுத்துக்கலைன்னா பத்ரி யாத்திரை பூர்த்தி ஆகாது !  தெய்வக்குத்தம் வேணாமேன்னு நாமும் சிலபல க்ளிக்ஸ் :-)
நல்ல கலர்ஃபுல்லான  வாசல்!    ரெண்டு பக்கமும் சிங்கம்!  சிங்க வாசல். ராஜஸ்தான் ஸ்டைல்!  சிம்ஹத்வார்!  மேலேறுனதும் ரெண்டு பக்கமும் கருட்ஜி!  கொஞ்சம் கிழமுகத்தோடு இருக்கார்!


படிகள் முடியும் இடத்தில் பக்கத்துக்கு  பாஞ்ச் யானை வரிசை.  மூலை  என்றதால்   பாஞ்ச் பாஞ்ச் தஸ்ன்னு!   சகுனம் டபுள் ஓக்கே!   வாசலில் தலைக்கு மேலே ஒரு பெரிய காண்டாமணி!  கைக்கு எட்டலைன்னாலும் ஒரு  ஹைஜம்ப் பண்ணி  அதை அடிச்சாத்தான் திருப்தி :-)டங்..... எட்டூருக்குக் கேக்கும் ஒலி!
 பயங்கர போக்குவரத்து. ஆளில்லாத கோவில் படியை க்ளிக்குனா  ஒரு பவுன் இனாம்!  ஊஹூம்ம்ம்ம்   முடியவே முடியாது. ஒரு தலையாவது எட்டிப் பார்த்துரும்:-)

இதுக்கப்புறம் கோவிலுக்குள் படம் எடுக்கத் தடை !

தொடரும்...........  :-)