Friday, January 20, 2017

பஷுபதிநாத் மந்திர் ( நேபாள் பயணப்பதிவு 4 )

லெமன்ட்ரீயில் நமக்காகக் காத்திருந்தார் துர்கா! நமக்கான  தனிப்பட்ட   கைடு.  மறுநாள்  குறிப்பிட்ட வேறொரு ஊரில் நம்மை சந்திப்பதாக ஏற்பாடு. எல்லாம் ப்ரகாஷின் பயணத்திட்டத்தின் படியே!  'இன்றைக்கு மீதி  இருக்கும் நேரத்தில் என்ன செய்ய உத்தேசம்'  என்றார் ப்ரகாஷ். கோவில்னு சொன்னேன்.  பெருமாளை ஸேவிக்கணும்.  'அது கொஞ்ச தூரத்தில் இருக்கு. ஏர்ப்போர்ட் கடந்து போகணும். சிவன் கோவில் போறீங்களா'ன்னார். ஓக்கே!  நம்ம லிஸ்ட்டில் இருக்காரே அவரும்:-)
இன்றைக்குத் திங்கள் கிழமை!  நல்ல நாளில் வந்துருக்கீங்க! சாயங்காலம் ஆறுமணிக்கு  பசுபதிநாத் கோவிலில் ஆரத்திக்குப் போயிட்டு வந்துருங்கன்னு சூர்யா லாமாவிடம் எங்களை  ஒப்படைச்சுட்டார் :-) திங்கள் கிழமைதான் ஆர்த்தி இருக்காம். அப்ப மற்ற நாட்களில்  சாமிக்கு  ஒன்னும் இல்லையா?   இது எப்படின்னு எனக்குப் புரியலை.  அதோடு, பர்ஸ், பெல்ட்ன்னு தோல் பொருட்களுக்கு கோவிலில் அனுமதி இல்லைன்னும் சொன்னார்.  காத்மாண்டுவின் முக்கிய கோவில்களில்  பசுபதிநாத்துக்கே முதலிடம்! இதுவும்  விமானநிலையத்துக்குப் போகும்  வழியிலேயே இருக்கு.  மதியம்  லெமன்ட்ரீ போகும்போது  ஒரு ஆற்றுப் பாலத்தைக் கடந்தப்பப்  பார்த்தோமே.......

கோவில் வரலாறுன்னு பார்த்தால்.... ப்ராச்சீன் என்ற பதில்தான். கைலாயமலையில் இருக்கும் சிவனுக்கு, அங்கேயே இருந்திருந்து போர் அடிக்குது. இடமாற்றம் வேணுமேன்னு கீழே இறங்கி வர்றார்.  மலையடிவாரம்  கடந்து போகும்போது  ஒரு பள்ளத்தாக்கு கண்ணில் பட்டது. நதியும், காடும் மிருகங்களுமா இருக்கும் அந்த இடம் பிடிச்சுப்போச்சு. அங்கிருக்கும் பசுக்களின் நேசனா,  பஷுபதி என்ற பெயருடன்  சுத்தித் திரியறார். எப்படின்னா....  மான் வேஷம் போட்டுக்கிட்டு!

இந்த பெயர் நேபாளிகளிடையே  இருபாலருக்கும் பொது. சென்னையில் நம் வீட்டு வேலைகளில் உதவி செஞ்ச பெண்ணுக்கு இதே பெயர்தான். பஷுபதி! அப்பழுக்கு சொல்லமுடியாத தரத்தில் வேலை செய்வாங்க. இதைப்போல ஒருவர் கிடைப்பது குதிரைக் கொம்பு!  இவுங்க  கணவர் நம்ம அபார்ட்மென்டுக்குக் காவல்காரராக இருந்தார்.  ஆ.... கொம்புன்னதும்.... இப்ப மான் கொம்பைப் பார்க்கலாம்... 

தலைவரைக் காணோமுன்னாத் தேடாம  இருக்கமுடியுமா?  தேவர்கள் தேடிக்கிட்டு  வர்றாங்க. கூட்டத்துலே மஹாவிஷ்ணுவும் மச்சானைத் தேடி....  மானைப் பார்த்ததும்.. ஓடிவந்து கொம்பைப் பிடிக்க,  கொம்பு உடைஞ்சு போயிருது. அதையே லிங்கமா வச்சுக் கும்பிட ஆரம்பிச்சாங்கன்னு  ஒரு கதை.

அதெல்லாம் இல்லை. இவர் ஸ்வயம்பு.  எந்தக் காலமுன்னு சொல்லமுடியாத ஒரு காலத்துலே தானாகவே லிங்க வடிவில் உருவானவர். காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதையுண்டு போச்சு. அந்த மேட்டில் தினமும் ஒரு ஆடு வந்து பால் சொரியும். இதைக் கவனிச்ச ஆட்டுக்காரர்,  அங்கே என்னதான் இருக்குன்னு  தோண்டிப் பார்க்க லிங்கம்  இருந்துருக்கு. அதையே வச்சுக் கோவில் எழுப்புனாங்கன்னு இன்னொரு கதை.

ஒன்னு கவனிக்கணும். இந்த பால் சொரியும் வகைக் கதைகள் நிறைய இடங்களில் கேட்டுருக்கோம். திருப்பதி கோவிலுக்கும் இப்படி ஒன்னு இருக்கு. என்னன்னா.... இதுவரை மாடுன்னு கேட்டது இங்கே ஆடு. அம்புட்டுதான். போகட்டும்... ஒரு எழுத்துதான் வித்தியாசம்:-)

எப்படி இருந்தாலும் நாலாம் நூற்றாண்டில் இங்கே கோவில் எழுந்தது  மட்டும் உண்மை. சுபஸ்பதேவர் என்ற மன்னர் கட்டியதுன்னு  கோவில்குறிப்புகள் சொல்லுது.


  மெயின் ரோடில் இருந்து  இடதுபக்கம் திரும்பி,   இப்பக் கோவில் வாசலுக்குப்பக்கம் போய் இறங்கியது  வேற ஒரு வழி.  இங்கேயும் எல்லா பெரிய நகரங்களையும் போல பார்க்கிங் பிரச்சனை அதிகம். சூர்யா நம்மை இறக்கி விட்டுட்டு தரிசனம் முடிச்சு வந்ததும் செல்லில் கூப்புடுங்கன்னு சொல்லி  அவர் நம்பரைக் கொடுத்துட்டுப் போனார்.  நம்ம  டாடா வண்டிகள்தான் அதிகமா ஓடுது இந்தப் பக்கங்களில்!
வழக்கமில்லாத வழக்கமா கோவிலுக்கு எதிரில் இருந்த  கோவில் சம்பந்தமான பூக்கள், ப்ரஸாதம் விற்கும் பெண்களிடம் கொஞ்சம் பூ வாங்கிக்கிட்டுப் போகலாமுன்னு  நினைச்சது என் தப்பு. வரிசையா   நாலைஞ்சு பேர் உக்கார்ந்துருக்காங்க...  நாங்க ஒரு பெண்மணியிடம் கொஞ்சம் பூ வாங்கினோம். சின்னதா ஒரு இலைக்கூடையில் வச்சுக் கொடுத்தாங்க. நூறு ரூபாய்.  அவுங்களுக்குக் காசு  கொடுத்துக்கிட்டு இருக்கும்போது   அடுத்துருந்த  பூ வியாபாரியம்மா, சட்னு  பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நம்மவர் மேல்  அப்படியே கவுத்துட்டாங்க.  எங்களுக்கு 'திக்'னு ஆகிப்போச்சு:-( பாவம்..  இவர்....   கோபம் முகத்துலே....  விளையாட்டா என்ன?  நானும் கொஞ்சம் கடுமையாத் திட்டினேன். தன்னிடம் வியாபாரம் பண்ணலைன்னு இப்படிச் செஞ்சுட்டாங்களாம் அந்தம்மா. மன்னிச்சுக்கோன்னு  சொல்லிட்டுத் தலையை குனிஞ்சுக்கிட்டாங்க.  நம்மவருக்கு எதோ  முன்ஜென்மத்துலே உறவோ என்னவோ :-)
நல்ல வெய்யில் நாள் என்பதால்  சட்டை உலர்ந்துருமுன்னு சமாதானப்படுத்திக்கிட்டுக் கோவில் வளாகத்துக்குள் போனோம்.  (எதிர்பாராம நம்ம மேல் தண்ணி  விழுந்தா நம்ம கஷ்டம் எல்லாம் தீர்ந்ததுன்னு  வச்சுக்குங்கோ!!  துள்ஸி மாதாவின் அருள்வாக்கு! )  வாசலில் ரெண்டு பக்கமும் சின்னதா சந்நிதிகள். ஒன்னில் புள்ளையார். இன்னொன்னில் சிவனோ?  இல்லெ தன்வந்திரியா?   ஆளுருவத்தில் உக்கார்ந்த நிலையில். ஆனால் கையில் எதோ கலசம் இருக்கே!  அம்ருதமோ?


நல்ல பெரிய வளாகத்தில் மக்கள் அங்கங்கே உக்கார்ந்துருக்காங்க. குரங்குகள்  அதுபாட்டுக்கு அங்கே இங்கேன்னு போகுதுகள்.


புறாக்களுக்காகத் தரையில் கொட்டி வச்சுருக்கும் பொரிகளை அப்படியே தலை சாய்ச்சு நாக்கால் நக்கி எடுத்துத் தின்றாங்க சிலர்! ஒருபக்கம் புத்தர் கோவில்போல பகோடாக்கள் தெரிஞ்சது.
எந்தப்பக்கம் போகணுமுன்னு  முழிச்சுக்கிட்டு இருந்தப்ப, ஒரு சின்னப்பொண் வந்து  வலதுபக்கம் கை காமிச்சு அங்கே செருப்புகளை விட்டுட்டுப்போகணும். கொஞ்ச நேரத்தில் ஆரத்தி ஆரம்பிச்சுருமுன்னு  சொன்னதும்  அதேபோல செருப்புகளை விடப்போனோம்.  ஒரு கம்பத்துலே கிளைகள் போல் கம்பி அடிச்சு வச்சு அதுலே  பைகளாத் தொங்க விட்டுருக்காங்க.
அதுலே ஒரு பையை எடுத்து நம்ம காலணிகளைப் போட்டு, இந்தாண்டை இருக்கும் கவுண்ட்டரில் கொடுத்தால் வாங்கி வச்சுக்கிட்டு டோக்கன் தர்றாங்க.  எந்தவிதமான தோல் பொருட்களுக்கும் (பர்ஸ், ஹேண்ட் பேக்,  பெல்ட் எல்லாம் ) அனுமதி இல்லைன்னு நம்ம ப்ரகாஷ் சொல்லி இருந்ததால் அறையிலே  வச்சுட்டுக் கேமெரா, செல்ஃபோன்  மட்டும் கையிலே வச்சுருந்தோம்.
டோக்கன் வாங்கிக்கிட்டு  சின்ன மேடேறி அந்தப்பக்கமா சுத்திக்கிட்டுக் கோவில் வாசலுக்குப் போறோம்.  இந்த சுத்தல் தேவை இல்லைன்னு அப்புறம் புரிஞ்சது:-)  வலப்பக்கம்   நாலஞ்சு படி இறக்கம். அதையொட்டி தீர்த்தம் வரும் முற்றம். அஞ்சு  தீர்த்தக் குழாய்கள். நம்ம ஹொடேலுக்கு போகும் சந்தின் ஆரம்பத்துலே குழாயடி இருக்குன்னு சொன்னேனே... அதே மாதிரியான குழாய்கள்!  கோவிலுக்குப்போகுமுன்  கைகால்களைக் கழுவிக்கொண்டு போக ஒரு ஏற்பாடு. ஆனால் தண்ணீர் வரலை.

கோவில் வாசலில்  உள்ள தகவல் போர்டு பார்த்ததும்  ஜஸ்ட் க்ளிக்கினேன்.  உள்ளே படம் எடுக்கக்கூடாது  :-(  இந்துக்கள் மட்டும் உள்ளே வரலாம்.

முன்வாசல்கதவு  பெருசா இருக்கு. நம்மூர் கோபுரவாசக் கதவுகள் உயரம் வரும்.  வாசல் முகப்பில்  மேலே மனுஷ்யரூப சிவன்,வலக்கையில் உடுக்கையும், இடக்கையில் சூலாயுதமும் பிடிச்சு நிக்கறார். பின்புலத்தில் பனிமலை!  கைலாயம்!  பக்கத்தில் பெருகி ஓடும் ஆறு கங்கையோ?  'ஸ்ரீபஷுபதிநாத் மந்திர்'னு எழுதி இருக்கு.  ஹிந்தி எழுத்துன்றதால் படிச்சுட்டேன்:-)

வாசலுக்கு ரெண்டு பக்கமும் சாமிகள். நமக்கிடதுபக்கம் புள்ளையார். அவர் தலைக்கு மேல் சந்திரன். வலதுபக்கம் இருக்கும் சாமி யார்னு தெரியலை.... சிவனோ இல்லை சக்தியா?  தலைக்கு மேல் சூரியன் இருக்கே! ரெண்டு பக்கங்களிலும் சிங்கங்களும் உண்டு!
கோவில் ஆடுகள் அங்கங்கே உக்கார்ந்து ஓய்வெடுத்துக்கிட்டு இருக்கு. நேர்ந்து விட்டவைகளாம். தாடியும் மீசையுமா.... சாமியார்கள் போலவே !

மெஷீன் கன் கையில் வைத்திருக்கும்  ராணுவத்தாரைக் கடந்து வாசலுக்கு அந்தாண்டை இருக்கும் படிகளில் இறங்கி கோவிலுக்குள் நுழையறோம்.  லேசா  மசமசன்னு இருட்டு....   கண் எதிரே  மேடையில்  பெரிய நந்தி ஸார்!  சாமியை நோக்கி உக்கார்ந்துருக்கார்.... அவர் பிருஷ்டப்பகுதி கோவில் வளாகத்தில் இருந்தே தெரியுமளவுக்கு  ப்ரமாண்டம்!  அவருடைய முகத்துக்குக் கீழே ஒரு சின்ன  பீடத்தில் சுமாரான சைஸில் இன்னொரு நந்தியும் இருக்கார்.  சைஸ் பெருசா இருக்கே தவிர, நம்மூர்ப்பக்கம் இருக்கும் நந்தியின் முக அழகு  இதில் இல்லை :-(  இது மாடு. அம்புட்டுதான்....  அலங்காரம், நகைநட்டு கூட அதிகம் இல்லை....  ப்ச்....

கையில் பிரஸாதத்தட்டுகளுடன் பக்தர்கள் நிற்கும் வரிசையில் போய் நின்னோம்.

வலையில் சுட்ட படம். கூகுளாருக்கு நம் நன்றிகள்.

கருவறை  வாசலுக்கெதிரா இருக்கும் நந்திக்கும்,   உயரமா இருக்கும்  கருவறை   வாசக் கதவுக்கும் இடைப்பட்ட இடத்தில்  ஒரு மரமேடை. ஏழெட்டுப் படி ஏறிப்போகணும்.  அங்கே நின்னுபார்த்தால் உள்ளே சிவன் இருக்கார். லிங்க ரூபம்!  தீபஆரத்தி இப்பதான்  முடிஞ்சதாம்.  மேடையில் இருந்து  எதிர்ப்பக்கமா இறங்கிப் போயிடலாம்.  மேடையில் இருந்தே ரெண்டு படி இறங்கினால் கருவறைக் கதவுக்கருகில் போக முடியும்.  காவல்துறை அம்மணி  அங்கே நிக்கறாங்க. என்னவோ புதுமுகமா இருக்கேன்னு, நம்மை  அந்தக் கதவருகில் போய் நிற்கச்சொல்லி வழி விட்டாங்க. கேரளா ஸ்டைல் போல கீழ்பாதிக் கதவு  மூடியும் மேல்பாதிக் கதவு திறந்தும் இருக்கு.
உள்பக்கமா நின்ன  பட்டர்  நம்ம கையில் இருக்கும் பூக்கள் உள்ள இலைப்பொதியை வாங்கி  உள்பக்கம் சிவன் கண்ணில் இங்கிருந்தே காமிச்சுத் திருப்பி தந்துட்டு,  அவருக்குப் பக்கம் இருந்த  உண்டியல் பொட்டியைக் கை காமிச்சார். நம்மவர் ஒரு நூறு எடுத்து அதில் போட்டதும்  கொஞ்சூண்டு சந்தனத்தை எங்கள் நெத்தியில் தீத்தி விட்டார். ஆச்சு தர்ஷன்!

பெரிய சிவலிங்கம்தான்.  அரைக்கதவினூடே  பார்த்தால் கொஞ்ச தூரத்தில்தான் இருக்கு. ஏராளமான பூக்களை மலைபோல் சார்த்தி இருக்காங்க!  ஐந்து முகங்கள் இருக்காம். நாலு திசைக்கும் ஒவ்வொன்னு, அஞ்சாவது முகம்  மேலே ஆகாசத்தைப் பார்த்து!  இஷான் என்று பெயர் அந்த முகத்துக்கு!  மற்ற நான்கு முகங்களுக்கும் தத்புருஷா, சத்யோஜதா, வாமதேவா, அஹோரா என்று பெயர்களாம்!

காவல்துறை அம்மணிக்கு நன்றி சொல்லிட்டு, ஆர்த்தி எப்போன்னால்  ஏழுமணிக்குன்னாங்க. இன்னும் கொஞ்ச நேரம்தான்  இருக்கு. ஒரு இருவது நிமிட். அதுவரைக் கோவிலைச் சுத்திப் பார்க்கலாமுன்னு  வலம் போறோம்.
ரெண்டு  தட்டுக் கோவில் இது.  சதுரமான  மரக்கூரைகளுடன் கட்டிடம்.  நாலு பக்கமும்  கதவுகள்.  எல்லாம் வெள்ளி!  சுவர்களில் பித்தளைகவசம் போட்டுருக்கு. அதிலே பித்தளையில் சிலைகள். ரொம்பத்திருத்தமான முகத்தோடு ஒவ்வொன்னும்   அழகோ அழகு.  படம் எடுக்க முடியலையேன்னு மனசு பதறுனது உண்மை....  கோவில் கூரைகளின்மேல் மரத்துக்குச் செப்புத்தகடு போர்த்தி இருக்காங்க. அதுக்குமேலே தங்கமுலாம்.  உச்சாணியில் இருக்கும் கலசம் முழுத் தங்கமாம்! வளாகத்துலே மெயின் கோவில் இதுதான்.
காலை அஞ்சு மணிக்கும் மாலை ஆறுமணிக்கும் ஆரத்தி எடுக்கும்போது நாலு வாசல்களையும் திறந்து வச்சு  நாலு பட்டர்கள்  ஒரே சமயத்தில் ஆரத்தி எடுப்பாங்களாம்! இது முடிஞ்சதும் மேற்கு வாசலைத்தவிர மத்த மூணு வாசல்களையும் மூடிருவாங்க. நாம் உள்ளே போனப்ப ஆரத்தி முடிஞ்சுருந்ததால் மூடுன கதவுகளைத்தான் பார்த்தோம். விளக்கு வெளிச்சம் மஞ்சளா இருப்பதால்  எல்லாமே தங்கம்போல் தகதகன்னு மின்னுது!

இந்த மெயின் கோவிலைத்தவிர  அங்கங்கே சந்நிதிகள்  ஏராளம்.  நாங்களும் சில சந்நிதிகளுக்குள் போய்க் கும்பிட்டுக்கிட்டு வந்தோம். கொஞ்சம் இருட்டாக்கூட  இருந்துச்சு.  தட்டுத்தடுமாறி  சிவனைச் சுற்றி வந்தாச்சு:-)  இதுதவிர தரையில் எல்லாம் சிலைகளைப் பதிச்சுருக்காங்க. கவனமா நாம்தான் பார்த்து நடக்கணும். எல்லா இடங்களிலும் சின்னதும் பெருசுமா சிவலிங்கங்கள்!  வரிசைவரிசையா  மாடங்களில் கூட!  மாடம் போலிருந்த   ஒரு சின்ன சந்நிதியில்  உள்ளே உக்கார்ந்துருந்த  பட்டர் சிரிச்சமுகத்தோடு பளிச்ன்னு இருந்தார்.  சந்நிதிக்குள்  புள்ளையார்!  பட்டர், கர்நாடக மாநிலமாம்!  அவரிடம் ஆரத்தி எப்போன்னதுக்கு  'இன்னும் கொஞ்ச நேரத்துலே.... ஆரம்பிச்சுரும். இந்த வழியாப் போங்க'ன்னு கை காட்டினார்.

தொடரும்.......:-)

12 comments:

said...

அழகு...

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நன்றி.

said...

உங்க தயவால பஷுபதிநாத் தரிசனம் ஆச்சி.
அற்புதம். நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

தக்ஷிணை இந்தப் பக்கத்துத் தட்டில் போடுங்க:-)

said...

தட்சிணை எதிர்பார்க்காத பட்டரே இல்லையோ

said...

இதுதான் பசுபதிநாதர் கோயிலா? இதெல்லாமும் போய்ப் பாக்கனும்.

மேல தண்ணி சிந்தினா மட்டும் இல்ல, சாப்பாடு, சந்தனம், குங்குமம், திருநீறு இதெல்லாம் சிந்தினாலும் நல்லதுதான்.

அந்தம்மாவுக்கு அன்னைக்குன்னு எதுவும் விக்காம இருந்திருக்கும். ஏற்கனவே இருந்த மனவுளைச்சல்ல அப்படிச் செஞ்சிட்டாங்க போல. நானாயிருந்திருந்தாலும் மொதல்ல கோவம் தான் வந்திருக்கும். ஆனா படிக்கிறப்போ பரிதாபமா இருக்கு. ஒரு சாண் வயிறு என்னவெல்லாம் படுத்துது. ஆண்டவா....

இந்தப் பக்கம் பிள்ளையாரு. அந்தப் பக்கம் கார்த்திகேயரா இருப்பாரோ? கைல எதோ ஆயுதம் வெச்சிருக்காரே. கார்த்திகேயரு பிரம்மச்சாரியாம்.

நந்தி நல்ல திமுதிமுன்னு இருக்கு. ஆனா நீங்க சொன்ன மாதிரி மாடு மாதிரிதான் இருக்கு. தென்னிந்திய சிற்பக்கலை ஏன் உள்ளது உள்ளபடியான சிற்பக்கலை இல்லைங்குறதுக்குப் பின்னாடி பெரிய நுட்பமே இருக்கு. அதை விளக்க இந்தப் பின்னூட்டம் போதாது.

said...

மிக அருமையான கோயில்.... பார்க்கப் பார்க்க ஆசை தூண்டப்படுது போகோணும் என.

said...

'நல்லா எழுதியிருக்கீங்க.. பயண விவரங்களும் அருமை. கூடவே பயணிப்பதுபோல் இருக்கிறது.

said...

அற்புதம்

said...

பால் சொரியும் கதை வேளாங்கண்ணிக்கும் உண்டு இல்லையா?

படங்கள் அழகு.

சிவன் கோவிலில் எப்படி பட்டர்கள்?

said...

அழகிய கோவில்.... உங்கள் தயவால் எனக்கும் தரிசனம்....

நன்றி டீச்சர்.

said...

ஒர வஞ்சனையான பதிவுஇது.விஸ்னு பக்தர்களினால் சிவனை அவமதிக்கும் செயல் இது.25 வருடங்களின் முன் நான் இத் தலத்தை தரிசித்து இருக்கின்றேன்.