Wednesday, April 12, 2017

சேஷ்நாராயண் ( நேபாள் பயணப்பதிவு 28 )

பலியில் இருந்து பெண்கள் தப்பிச்சாங்கன்னு  சொல்லிட்டு வண்டியிலேறிய  அடுத்த காமணியில் சேஷ்நாராயண் கோவில் வாசலில் இறங்கினோம்.  இந்த இடம் ஹிந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் ரொம்பவே விசேஷம்!  நேபாளில் நாலு நாராயண்கள்முக்கியமுன்னு சொல்றாங்க பாருங்க... அதில் இந்த  சேஷநாராயணும் இருக்கார்!  கோவிலோன்னு ஒரு சின்ன சம்ஸயம்
கூட வராத  ஒரு இடத்தில் வண்டி நின்னதும்  பவனின் வழிகாட்டுதலில் நடக்கறோம்.
தெள்ளத்தெளிஞ்ச  தண்ணீர், குளம் போலக் கட்டி நிக்க, நடுவில் போகும்  கல் இழைச்ச பாதையில் போறோம்.  ரெண்டு பக்கங்களிலும் இருக்கும் தண்ணீரில் அங்கங்கே சில சிலைகள் !  நீலவண்ண உடலுடன், பெருமாள் ரெண்டு கைகளாலும் ஆசி வழங்குறார் தண்ணீருக்குள் நின்றபடி!

 இந்தப் பகுதியே ஒரு குன்றின்மேல்தான் இருக்கு.  அங்கே  எங்கிருந்தோ வரும் ஊத்துத் தண்ணியைக் குழாய் மூலம் இங்கே கொண்டுவந்து சேர்த்துருக்காங்க. நாலு குளமா அமைஞ்சுருக்கு.  ஸ்ரீ மஹாவிஷ்ணு நிற்கும் குளத்துக்கு  'பாஸுகி குண்ட்'    என்று பெயராம்.  இவுங்களுக்கு  'வ'  பராது கேட்டோ!
இந்தப்பக்கம் இருக்கும் தண்ணீரில் சூரியன், தன்னுடைய ஏழு குதிரைகள் பூட்டிய தேரில்!

இந்தக் குளங்களில் எல்லாம் வண்ண வண்ண மீன்கள்  இங்கேயும் அங்கேயுமா நீந்திப்போவதைப் பார்த்தாலே பரவசம்.


நாலடி எடுத்து வச்சால்  தண்ணீரையொட்டியே இருக்கும் சிவலிங்கங்கள். தெளிந்த தண்ணீரைக் கோரி  அபிஷேகப்ரியருக்கு அபிஷேகம் செஞ்சு வணங்கினேன்  இன்னும் நாலடி எடுத்து வச்சால் மேலேறிப்போகும் படிகள். ஒரு பக்கம் ரிஷபவாகனத்தில்  சிவனும் உமையும்! தண்ணீர் வரும் குழாய்க்குப் பக்கம் பெருமாள், கொஞ்சமா ஒளிஞ்சுருக்கார்:-)




பத்திருவது படிகள் ஏறி மேலே போறோம்.  இடப்பக்கம் இருக்கும் சின்ன சந்நிதிக்கு ரெண்டு பக்கமும் வாசல்.  ஒரு பக்கம் சிவன், லிங்கவடிவில். அடுத்தபக்க வாசலில் எட்டுக் கைகளுடன் துர்கை!  அவரவர் வாகனம் அவரவர் வாசலுக்கெதிரே!



வளாகத்தின் ஒரு பக்கம் பழங்காலக் கட்டடம் ஒன்னு.  பௌத்தமடம்.  இதுதான்    ஃபார்பிங்  என்ற பெயருள்ள இந்த கிராமத்துலே  முதல்முதலில் வந்த மடமாம்.  ஓட்டுக்கூரை மேலே புல்லும் செடிகளுமா முளைச்சுக் கிடக்கு. இதைப்போல கூரைகளைப் பல இடங்களில் பார்த்துக்கிட்டே இருக்கேன். எதோ தானாகவே முளைச்ச மாதிரி தெரியலை.  உள்ளே குளுமையா இருக்க இப்படி புல்விதைகளை போட்டு வச்சுருக்காங்களோ என்னவோ?
நேத்து மாதிரி இன்றைக்கு அவ்வளவா பெரிய  மழை இல்லைன்னாலும்  எங்கே பார்த்தாலும்  தரை முழுக்க ஈரம்தான். ஒரே நசநசப்பு. இப்போ இன்னும் மேலே போகும் படிகளில் போகணும். அங்கங்கே  செடிகொடிகளைச் சுத்திக்கிட்டு  புத்தமதத்தினரின் பிரார்த்தனைக் கொடிகளின் தோரணம், நம்மகூடவே படிகளின் மேலேறிப்போகுது :-)
 

நிறைய படிகள் இங்கே .....  நான் எண்ணலை... ஒரு நாப்பதம்பது வரும். நுழைவு வாசலுக்கு ரெண்டு பக்கமும் சிங்கச்சிலைகள்.

வாசலைக் கடந்து போனால்  மண்டபங்களும் சந்நிதிகளும் கோவில்களும், பெரிய மணிகளுமா  கல்பாவிய தரையுடன் ஒரு  வளாகம்.  மண்டபத்தில் எதோ குடும்ப விழா  நடக்குது போல....  நிறையப்பேர் பூஜை முடிச்சுட்டுப் பிரஸாதம் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க.
குன்றின் அடிவாரத்தையொட்டி தங்கக்கூரை போட்ட  கோவில். முகப்பில் மஹாவிஷ்ணுவின் சிலபல போஸ்கள். கோவில் கதவு சாத்தி இருந்துச்சு. உள்ளே நாராயண் இருக்கார். மூணு வித ரூபத்திலோ? ஒருபக்கம் ந்ருசிங் நாராயணர், இன்னொருபக்கம் சேஷ்நாராயணர்னு எழுதி இருக்கு. அப்போ நடுவில்?

எதிரில் நான் இதுவரை எங்கேயும்    பார்த்தேயிராத  முறையில் பெரிய திருவடியும் சிறிய திருவடியுமா அடுத்தடுத்து கருவறை/ கோவிலுக்கு  முகம் காமிச்சபடி ஒரு பீடத்தில்  உக்கார்ந்துருக்காங்க!



முன்னழகும் பின்னழகும் சூப்பரோ சூப்பர்! அதி சூப்பர்!


பூஜைக்கான   பொருட்களை விற்கும் அம்மணியிடம் போய் கோவில் எப்போ திறப்பாங்கன்னு  கேட்டேன்.  திறந்துருவாங்க..... ஆனால்.... எப்போன்னு தெரியலைன்னு .....   இழுத்தவர் விளக்கு வாங்கி கொளுத்தறீங்களான்னார்.  ஊஹூம் சொன்னேன். இன்னும் சிலர் கோவில் திறக்கக் காத்துருந்தாங்க........

கோவிலுக்கு நேரா தலைக்கு மேலே  குன்றின் ஒரு பகுதி தழைஞ்சு வந்துருக்கு. ஒரு சமயம் பார்த்தால்  பசுவின் மடி போலவும், இன்னொரு சமயம் பார்த்தால் (பவன் சொன்ன பிறகுதான்)  பெரிய பாம்பு ஒன்னு வளைஞ்சு வளைஞ்சு இருக்கறது போலவும் தெரிஞ்சது.  பாம்பாத் தெரியறது சேஷன். நம்ம ஆதிசேஷன்தான். அதுதான் இவர் சேஷ்நாராயண் ஆகி இருக்கார்.
பசுவின் பால்மடி போல இருக்கேன்றதுக்கு இன்னொரு  விளக்கம்  இருக்கு. காமதேனு, அங்கிருந்து கீழே இருக்கும் நாராயணருக்கு பாலைப்பொழிஞ்சு அபிஷேகம் செய்யுதாம். ரொம்ப வருசங்களுக்கு முன் உண்மையாவே பால் சொரிஞ்சதுன்னும் சிலர் சொல்றாங்களாம். அதுக்கேத்தாப்ல இங்கே ஒரு காமதேனு உருவத்தை யாரோ தரையில் பதிச்சு வச்சுருக்காங்க.
இன்னொரு இடத்தில் வெறும் கருப்பு நிற சலவைக்கல். என்னவோ  ஏதோ? ஆனா சனம் இதுக்கும் பூப் போட்டுக் கும்பிட்டுருக்கு!
சந்நிதிக்கு முன்னால் முற்றத்தில்  விளக்கு ஏத்தி வைக்கும் ஸ்டேண்டுகள் அருமை!
அதோ அங்கெ பாருங்க....பாம்பாட்டம் தெரியலை?
தொட்டடுத்தாப்போல இருக்கும் சந்நிதியில்  கரடுமுரடா ஒரு கல் அமைப்பு. சாமுண்டா !  ஸ்வயம்பு!  சாமுண்டா   மேல் நம்ம காதை வச்சுக் கேட்டா தண்ணீர் ஓடும் ஓசை கேக்குமாம்....  ப்ச்...  இந்த சமாச்சாரம் அப்புறமாத்தான் தெரிஞ்சது. நீங்க யாராவது  இங்கே போனால், மறக்காம காதை வச்சுக் கேளுங்க... தகவல் தெரியலைன்னு  இருக்க மாட்டீங்கதானே?
இயற்கையாவே ஒரு கல் பாம்பு உருவத்தில் இருந்தது,  சமீபகாலத்தில் திருட்டுப் போயிருக்கு.....  :-(  ப்ச்....    பாம்புக்குப் பாம்பைப் பார்க்கக் கொடுத்து வைக்கலை  ....
ஒரு மாடத்தில் துளசி. ஹோலி பேஸில் !  துளசி மாடத்தில் துளசிகளுடன் படம் எடுத்துக்க ஒரே போட்டி ஆயிருச்சு :-)
   ஏம்மா...  துளசியா இது?  நல்லா மோந்து பாருங்க.... துளசிதானே?

கோவிலோட வயசுன்னா.... ப்ராச்சீந்தான் பதில். கல்வெட்டு ஒன்னு இருக்கு. ஆனாப் படிச்சுத் தெரிஞ்சுக்க முடியலை......
சேஷ்நாராயண் சந்நிதி மட்டுமில்லாமல் இன்னொரு விசேஷமும் இந்தக் கோவிலில் உண்டு.  பௌத்தர்களுக்கு முக்கியமான இடமுன்னு  ஆரம்பத்துலே சொன்னது நினைவிருக்கோ?

Guru Rimpoche Cave இருப்பது இங்கேதான்.  இவரை  பத்மசம்பவான்னு  சொல்றாங்க.  திபெத்திய பௌத்தமதத்தில்    Nyingma pa  என்ற பிரிவைத் தோற்றுவித்தவர். காலம் எட்டாம் நூற்றாண்டு. இவர் இங்கே ஒரு குகையில் வந்து ஏழு வருசம், ஏழு மாசம், ஏழுநாள் தவம் செய்து ஞானம் கிடைக்கப் பெற்றார்னு சொல்றாங்க. இந்தக் குகையில் தவம் செஞ்சப்ப, இங்கிருந்த நாகர்களையெல்லாம்  கல்நாகங்களா  மாற்றிட்டார்னு கேள்வி.  அப்படி மாறுன சிலைதான் திருட்டுப் போயிருச்சு போல !
அந்தக்குகை இங்கெ குன்றையொட்டியே நம்ம சேஷ்நாராயண் சந்நிதிக்குப் பக்கமே இருக்கு. க்ரில் கதவு போட்டு மூடி இருக்கும் குகையை எட்டிப் பார்த்துட்டு கேமெராக் கண்ணை அனுப்பி  சில க்ளிக்ஸ் ஆச்சு.  குகை ரொம்பச் சின்னதுதானாம்.




இப்ப நாம் நிற்கும் இடம் ரொம்ப உயரத்தில் இருப்பதால்  இங்கிருந்து பார்க்கும்போது நிறைய கட்டடங்களும் காட்சிகளுமா இருந்துச்சு. ரொம்ப தூரத்தில் ஒரு பெரிய சிலை!  புத்தராம். அங்கே ரெண்டு மூணு  பௌத்த மடாலயங்கள் இருக்குன்னும், அந்த சிலையை  சமீபத்துலே (போனவருசம்) கட்டி முடிச்சாங்கன்னும் தகவல் கிடைச்சது.
கேட்டுட்டுச் சும்மா இருக்கமுடியுதா?  நானும் தேடினேன்.  ஆ..... கிடைச்சுருச்சு :-) நல்லா கலர்ஃபுல்லா இருக்கார்.   கிட்டப் போய்ப் பார்க்காமப் போயிட்டேனேன்னு.... இப்ப.... ப்ச்... நூறு அடி உசரமாம்! இவர்தான் பத்மசம்பவர்!
மலைகளும், மரங்களும், செடிகளும் குளங்களுமா  கண்ணுக்கு  குளுமையாத்தான் இருக்கு.   கீழே இறங்கிப்போக வேற வழி தென்பட்டதுன்னு  அதில் இறங்கினால்  நீலநாராயணர் சமீபம் வந்துருச்சு.
ஹிந்துக்கள் திருவிழா சமயம் ஹிந்துக்களும், பௌத்த  திருவிழா சமயத்தில்  பௌத்தர்களுமா வந்து ஒருவருக்கொருவர்  சண்டை சச்சரவில்லாமல் கொண்டாடிக்கறாங்க. மதநல்லிணக்கம் நல்லதுதான், இல்லையோ?

'வாங்க,  இன்னொரு இடத்துக்குக் கூட்டிப் போறேன்'னார் பவன்.

தொடரும்.......:-)



5 comments:

said...

சேஷ நாராயணர் கோவிலும், சிலையும் அருமை. கேள்விப்படாத கோவில். ரொம்ப நல்லா எல்லா இடங்களையும் (கோவிலில்) பதிவில் கொண்டுவந்திருக்கீங்க. லிங்க பூஜையும் அருமை.

படிக்கவே பரவசமாயிருந்தது.

said...

பசுன்னு பாத்தா பசு. பாம்புன்னு பாத்தா பாம்பு. என்னவொரு தத்துவம். ஆனா அது மலையில் கல்லாகத் தொங்கிக்கிட்டிருக்கு.

சிறிய பெரிய திருவடிகள் சிற்பம் மிக அழகு. இதுவரைக்கும் பாக்காத உருவங்கள்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஒருமுறை புஷ்கர் ஏரியில் கரையோரம் இருந்த படிக்கட்டில் உக்கார்ந்துருந்தப்ப, பக்கத்தில் இருந்த சிவலிங்கத்துக்கு அந்த ஏரியின் தண்ணீரை எடுத்து (தற்செயலா) அபிஷேகம் செஞ்சேன். இதைப் பற்றி நண்பர் ஒருவரிடம் சொன்னப்ப.... அவர் 'ரொம்ப நல்லது. உங்களுக்குக் கொடுப்பினை'ன்னு சொன்னார்.

இந்த சிவலிங்கம் பார்த்ததும் அந்த ஞாபகம். அதான் இங்கேயும் அபிஷேகம், மனம் உவந்து :-)

மத்தபடி போகும் இடங்களில் பார்க்கக் கிடைப்பவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் 'நான் பெற்ற இன்பம் ' வகைகள்தான்!

said...

வாங்க ஜிரா.

பாம்பும் பழுதும் நினைவுக்கு வருது :-)

பாம்பு பால் குடிக்கும், இல்லே?


ரெண்டு திருவடிகளும் அக்கம்பக்கமா இருப்பதை நானும் இங்கேதான் முதன்முதலாகப் பார்த்தேன்!!!

said...


சேஷ நாராயணர் கோவில் ரொம்ப குளிர்ச்சியா ...பார்வைக்கு விருந்தா அமைந்து இருக்கு ...


திருவடி படங்கள் அற்புதம் ....ரசுச்சு ரசுச்சு எடுத்துஇருக்கீங்க ...