Friday, June 09, 2017

ஔலியில் இருந்து கருடப் பார்வை (இந்திய மண்ணில் பயணம் 15 )

பேருக்கு ஏத்தாப்போல் த்ரோணகிரி மலையைப் பார்த்தபடி இருக்கு இந்த ஹொட்டேல்.  இதுவும் ஊருக்கு வெளியில்தான். போற பாதையிலேயே வந்துருது.  அவ்வளவா கூட்டமில்லாத மாதிரி இருந்தது.  விஜே என்னும்  இளைஞர்தான்  நமக்கு  உதவியாக பொட்டிகளை அறைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.  லிஃப்ட் இருக்குன்னாலும்  பவர் இல்லை.    மாடி அறைக்குப் பொட்டி தூக்கி வர்றதும்  சிரமம்தான்....  லிஃப்ட் கூட எல்லா மாடிக்கும் வர்றதில்லை.  நடுவில் ஒரு இடத்தில் இருந்து  படிகள் ஏறித்தான் அறைகளுக்குப் போகணும்.


கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு உடனே  வெளியே கிளம்பிட்டோம். இந்த ஊர்தான் ஜோஷிமத் / ஜ்யோதிர்மட் !   இப்ப மட்ட மத்யானம், கோவில் மூடி இருக்கும்.  சாயங்காலமாத்தான் போகணும்.  அதுவரை நேரத்தை வீணாக்கலாமோ?  தங்கறதும் ஒரு நாள்  என்றதால்  கூடியவரை  சுத்திப் பார்த்துக்கணும்.
நம்மவருக்கு உயரங்களில்   ஒரு ஆசைன்னு சொல்லி இருக்கேனோ?  கருடனாட்டம் பறந்து பறந்து பார்க்கணும் அவருக்கு.  'அடுத்தாப்லே இருக்கும் ஔலி  போயிட்டு வந்துறலாமே'ன்னார்.  அஞ்சே நிமிசத்துலே  ரோப்வே  கிளம்பும் இடத்துக்குப் போயிட்டோம். ரொம்பப்பக்கம்!
லஞ்சு டைம் இப்போ. அடுத்த ட்ரிப் 1.25க்குத்தான்.  மேலே போய் வர ஆளுக்கு 750 ரூ கட்டணம்.  டிக்கெட் வாங்கிக்கலாமுன்னா...    ஆள் சாப்பிடப்    போயிருக்கார்னு சொன்னாங்க. சரி... அப்ப நாமும்போய் எதாவது சாப்பிட்டுக்கலாமுன்னு போனோம். அங்கேயே  ஒரு கடை இருக்குன்னாலும் ஜூஸ் மட்டும்தான் இருக்காம். ஸோவினீர் ஷாப்தான்.


கீழே இறங்கிப்போனா கடைவீதி. அங்கே எதிரில் கண்ணில்பட்ட மார்வாடி  ரெஸ்ட்டாரண்டுக்குள் போய் பகல் சாப்பாடு ஆச்சு. தால் ரோட்டி.  ரெண்டு துண்டு இனிப்பு.

திரும்பி வந்து டிக்கெட் வாங்கினோம். முகேஷ் வரலைன்னுட்டார்.  ஏற்கெனவே போயிருக்காராம். ட்ரிப்   #  13, 1.25க்குக் கிளம்பணும். ஆனால் ரன்னிங் லேட் :-)  மேலே இருந்து இன்னும்  கேபிள்கார் கீழே வரலை.


வெயிட்டிங் ஏரியாவில் உக்கார்ந்துருந்தப்பதான் இதோட 'சரித்திரம்' கொஞ்சம் தெரிஞ்சது.  1983   ஜூலை 20 ஆம்தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.  ஜோஷிமத்தில்  இருந்து  ஔலி  என்ற இடத்துக்கு போகும் கேபிள்கார் இது. மேலே மலைக்குப் போக  வழியில் பத்து இரும்புத்தூண்கள் நட்டு அதன் வழியா இரும்புக்கயிறு இழுத்துருக்காங்க. நாலு கிலோ மீட்டர் பயணம்.  அதிகபட்சமா 25 நிமிசம் ஆகும்.
 

ஒரு பொட்டியில்   25 நபர்கள்வரை பயணிக்கலாம்.  நின்னுக்கிட்டுதான் போகணும். உக்கார இருக்கைகள் இல்லை. ஆமாம்.... சுத்தி வர இருக்கும் அழகைப் பார்க்காம  உக்கார்ந்துக்கிட்டுப் போயிருவோமாக்கும்?

பொட்டி கீழே வந்ததும்  உள்ளே போனோம். வெயிட்டிங் ஏரியாவில் இருந்த ரெண்டுமூணு பஞ்சாபிகளும் வந்தாங்க.... அப்பதான் எங்கிருந்து வந்துச்சோன்னு  திமுதிமுன்னு ஒரு கூட்டம் பயணிகள் அடிச்சுப்புடிச்சு வந்து பொட்டியை நிறைச்சுட்டாங்க.  இன்னும் பலருக்கு இடமில்லை... அடுத்த வண்டியிலே வாங்கன்னுட்டார்  ட்ரைவர்.  எல்லோரும் பஞ்சாப் மாநிலத்துப் பயணிகள்.  ஹிமகிரியில் ஹேம்குண்ட் சாஹிப் என்னும் குருத்வாரா, சீக்கியர்களுக்கு ரொம்பவே விசேஷமான  புண்ணியத்தலம்.  அங்கே போய்வரத்தான் கூட்டங்கூட்டமா வர்றாங்க.  நம்ம 108 போலவே அவுங்களுக்கும்  வேறெதாவது ஒன்னு இருக்காதா என்ன?

ட்ரைவர் சொல்லும் கமென்ட்ரியைக் கேக்கவிடாம.... சத்தமாப் பேசிக்கிட்டே இங்கேயும் அங்கேயுமா  பாய்ஞ்சு பாய்ஞ்சு படம் எடுக்கறதும்,  இடிச்சுத் தள்றதுமா இருந்தாங்க.  ஜன்னல்பக்கமெல்லாம் அவுங்க இடம் பிடிச்சு அடைச்சு நின்னதில் எனக்குத்தான் சரியா க்ளிக்ஸ் வரலை. நான் வேற உயரம் கம்மியாச்சா....   எடுத்த படங்களில்  'சிக் டர்பன்தான்'  இருக்கு!


கீழே தெரியும் காட்சிகளைக் குனிஞ்சு க்ளிக்கிட்டே வந்தேன்.  ஔலி ஸ்டேஷன் வந்ததும்  வெளியே வந்தோம்.   நிறைய பயணிகள் இங்கிருந்து  மலைக்கு மேல் ட்ரெக்கிங் போறாங்களாம். குதிரையில் கூடக் கொண்டு போறாங்களாம். அங்கங்கே சிலபல குதிரைகள் மேய்ஞ்சுக்கிட்டு இருக்குதுகள்.
வெளியே  திறந்தவெளியில்  ஒரு ஏழெட்டு மேஜையும்  அதுக்கான நாற்காலிகளுமாப் போட்டு வச்சுருக்காங்க. அதுக்கு எதிரில் ஒரு பெரிய டென்ட் கொட்டாய். சின்னதா ஒரு  ரெஸ்ட்டாரண்ட்டாம்!  டீக்கடைதான் வேறென்ன?
பஞ்சாப்  பயணிகள் எல்லா இடங்களையும் பிடிச்சுக்கிட்டு  உக்கார்ந்ததும், பெரிய பெரிய  பொதிகளைத் திறந்து சமோஸா, இன்னபிற தீனிகள் பேப்பர் ப்ளேடில் வச்சு விளம்பினாங்க.  தொட்டுக்க டொமாட்டோ சாஸ் வேற ஒரு பெரிய டப்பாவில்!   எல்லாம் பக்காவா ப்ளான் பண்ணி....       ஃபுல்லி லோடட்தான்!
நம்மவர்  போய் டீக்கடையில் என்ன இருக்குன்னு பார்த்துட்டு, ரெண்டு டீ சொல்லிட்டு வந்தார்.  எல்லா சாமான்களும் கீழே இருந்து  வரணும். ஆனாலும்  ஒரு டீ பத்தே ரூபாய்தான்!   நாங்க  இங்கே அங்கேன்னு நடந்து கொஞ்சம் க்ளிக்கிட்டு இருந்தப்ப, நம்ம கேபிள்கார் ஆபரேட்டர்  வந்து  'உங்க ரெண்டுபேரையும் நான் படம் எடுக்கவா' ன்னு கேட்டார். கேமெரா கை மாறுச்சு :-)



மத்ராஸியான்னு  கேட்டதுக்கு  எஸ்ஸுன்னதும், அவருக்கு நம்மைப் பார்த்து ரொம்பவே மகிழ்ச்சியாம். அவர் பெயர் குஷ்பானந்த் டிமிரி.  கேரளா பூர்வீகம். ஆனால் இங்கே வந்து இவர் நாலாவது தலைமுறை. மலையாளம் பேச வராது. புரியவும் புரியாது.  இவர்  தென்னாட்டுக்கே போனதில்லையாம். இங்கேயே உள்ளுரிலே கல்யாணங்காட்சின்னு  மூணு தலைமுறை ஓடிருச்சுன்னார். பத்து வருசமா கேபிள் ஆபரேட்டர் வேலை.  புள்ளைங்க சின்னப்பசங்க.



நமக்கு கண் முன்னே தெரியும் மலைச்சிகரங்கள் என்னென்னன்னு  சொன்னார். த்ரோணகிரி, நந்தாதேவி, ஹாதி பர்வத், சஞ்சிவ்னி ஷிகார்னு கைநீட்டி அங்கே இங்கேன்னு காமிக்கும்போது  சட் சட்னு க்ளிக்கிக்கிட்டேன்.  கீழே போகும்போது  இன்னும் நல்லாத்தெரியுமாம்.
ஹாதி பர்வத் காமிச்சப்ப ஒரே மேகம் மறைச்சுருந்துச்சு :-(  இங்கே மத்யான வெயில்  மூணு மணி.  அங்கே  மேகம் மறைக்கும் சிகரங்கள்.  அதுக்குள்ளே நம்ம டீ வந்துச்சு.  ஒரு டீயை அவருக்குக் கொடுத்துட்டோம்.  இன்னொன்னு  எங்களுக்கு.


டைம் டேபிள் போட்டுருந்தாலும்,  கீழே  வண்டி தேவையா இருந்தால்  கூப்பிடுவாங்களாம்.   காலை எட்டுமணிக்கு முதல் ட்ரிப். சாயங்காலம்  அஞ்சரைக்குக் கடைசி ட்ரிப்.  ஔலியில்  தங்கப் போறவங்களுக்கு  அதுக்கப்புறம் கூட்டத்தை அனுசரிச்சு  ரெண்டு ட்ரிப் இருக்குமாம். ஆனால் அது  ஸ்கி சீஸன் சமயத்துலேதான்.  இப்ப நாம் பார்க்கிற மொத்த இடமும் பள்ளத்தாக்கும் பனிமூடிக் கிடக்கும் என்றார்.  உண்மையில்  அதுதான் ரொம்பவே அழகு!
கீழே ஸ்கி ஃபீல்டுக்குப்  போக  வழியில் ஒரு ஸ்டாப்பிங் கூட இருக்காம்!  பேசிக்கிட்டு இருக்கும்போதே  அவருக்கு  செல்லில் கால் வந்துச்சு. கீழே போகணும். யாரெல்லாம் வர்றீங்கன்னு ஒரு குரல் கொடுக்கச் சொன்னார், டீக்கடைக்காரரை.   நாமும் மணி மூணரை ஆகுதேன்னு கிளம்பிட்டோம்.
பொட்டிக்குள் நுழைஞ்சதும் நேரா இருக்கும் ஜன்னல்கிட்டே போய் நின்னோம்.  பின்னால் திதிமுன்னு  பஞ்சாப் பயணிகளும் வந்துட்டாங்க. ஆனா பாருங்க ...   புறப்பட்ட ஆறாம்  நிமிட்லே  வண்டி அந்தரத்தில் நின்னது. எட்டிப் பார்த்தால் ஒரு  தூணையொட்டி ப்ளாட்ஃபாரம் ! எல்லா பஞ்சாபிகளும் திமுதிமுன்னு இறங்கிட்டாங்க. கீழே இருக்கும் ரிஸார்ட்டில் நைட் ஸ்டேவாம்!

இப்ப நாங்க ரெண்டு பேரும்தான் பொட்டிக்குள்ளே!  மழைபேய்ஞ்சு  ஓய்ஞ்சமாதிரி இருந்தது :-)

நாளைக்கு   நீங்க  போகும் பயணம் இந்த வழியாகத்தான்னு  காமிச்சார் டிம்ரி.     இவ்ளோ வளைவா ..........



குஷ்பானந்தும்,  மலைகளைக் காட்டி விவரம் சொல்லிக்கிட்டே வந்தார். கீழே வந்து இறங்கியதும் அவருக்கு நன்றி சொல்லிட்டு வந்தோம். ரோப்கார் நிற்குமிடத்தில் ஒரு சின்ன சந்நிதி!  விஸ்வகர்மாவுக்கு!  தொழில்களுக்குக் கடவுள் அவர்தானே? ஆபத்தில்லாமல்  ஔலி  பயணம் நடக்கணுமேன்னு  வச்சுருக்காங்க போல!  நாமும் கும்பிட்டுக்கிட்டு கட்டடத்தை விட்டு படிகள் இறங்க வந்தால் பக்கத்துக் கட்டடத்தில் இருந்து  சின்னப்பசங்க கை ஆட்டுனாங்க. நானும் கையாட்டிட்டு ஒரு க்ளிக் :-)
Valley of the flowers என்ற ஒரு இடமும் இருக்கு.  இங்கிருந்து ஒரு 22 கிமீ காரில் போய் கோவிந்த் காட் என்னுமிடத்தில் இறங்கி அங்கிருந்து  மலைப்பாதையில் ஒரு கிமீ தூரம் நடக்கணும். ஆகாத காரியமுன்னு  விட்டுட்டோம். அதுவுமில்லாமல் இப்ப சீஸன் முடியும் சமயம்.  ஜூலை ஆகஸ்ட் போனால் நல்லா இருக்குமாம்.


தொடரும்.....:-)


PIN குறிப்பு:  இன்னும்  கொஞ்சம் படங்களை ஒரு ஃபேஸ்புக் ஆல்பத்துலே போட்டுருக்கேன். விருப்பம் இருப்பவர்கள் பார்க்கலாம். எல்லாமே அனெடிட்டட் :-)

13 comments:

said...

அற்புதம் அற்புதம்
நீங்கள் இருவரும் பதிவர் சார்பாக
நாங்கள் செல்லாத இடங்களுக்கெல்லாம்
சென்று எங்களுக்காகப் பதிவிடுவது
என்பதுபோன ஜென்மத்தில் நாங்கள்
செய்த புண்ணியம் எனத்தான் நினைக்க
வேண்டியிருக்கிறது

உங்கள் இருவருக்கும் பதிவர்கள்
சார்பாக மனமார்ந்த நன்றியும்
நல்வாழ்த்துக்களும்..

said...

உள்ளேயிருந்து படம் எடுக்கக் கூடாது என்று அறிவிப்பு இருக்கிறதே.. கீழே இருக்கும் வளைபாதைகள் அழகு.

said...

இடங்களின் பேரைக் கேட்கும்போது எப்போது போக சமயம் வாய்க்கும் என்று தோன்றுகிறது. மலர்களின் பள்ளத்தாக்கு- இது காஷ்மீர் அருகில் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஜோஷிமட் மற்ற இடங்களுக்கும் செல்லணும். தொடர்கிறேன்

said...

வாங்க ரமணி.

இதெல்லாம் 'நான் பெற்ற இன்பம்' வகை!

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்.

நானும் அதைப் பார்த்துட்டுத்தான் அதையே படம் எடுத்தேன். எதுக்காக அப்படிப் போட்டுவச்சுருக்காங்கன்னு தெரியலை. ஒருவேளை பாம்புகளுக்கான விதியோ என்னவோ?

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அந்தந்த மாநிலப் பள்ளத்தாக்குகள் இருக்கலாம். வலையில் இருக்கு. பாருங்க.

இங்கே எங்கூரிலும் இப்படி இருக்கு. ஆல்ப்பைன் ப்ளான்ட்ஸ். நம்ம வீட்டில் ரெண்டு வகை வாங்கி வந்து வச்சுருக்கேன் :-)

ஜோஷிமத் போய் புதுக்கோவிலைப் பார்த்துட்டு வாங்க. கட்டிக்கிட்டு இருக்காங்க.

said...

செம படங்கள்.

said...

அருமை நன்றி

said...

பயணத்தின் போது கேபிள் காரில் இருந்து புகைப்படம் எடுப்பது தடை என்று எழுதி இருக்கிறதே மீறுவதற்குத்தானோ விதிகள்

said...

வாங்க குமார்.

மலைப்பகுதிகளில் அந்த மேகக்கூட்டங்கள் இல்லைன்னா இன்னும் அருமையா வந்துருக்கும்!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அந்த அறிவிப்பு, கீழே கட்டடத்தின் சுவரில் இருந்தது. கேபிள்கார் பயணத்தில் படம் எடுப்பதைப் பற்றி ஆபரேட்டர் ஒன்னும் சொல்லலை. மேலும் செல்ஃபோன் கேமெரா வந்தபின், எல்லோருமே ஃபொட்டாக்ராஃபரால்லே ஆகி இருக்காங்க :-)

ஒருவேளை அந்த அறிவிப்பு கொஞ்சம் பழையதாக இருக்கலாம். அதுதான் அதையே படம் பிடிச்சு இங்கே போட்டேன்.

படம் எடுக்கறேன்னு எட்டிப்பார்த்து யாராவது விழுந்துருவாங்களோன்னு கூட பயந்து அந்தக் குறிப்பைப் போட்டுருப்பாங்களோ என்னவோ....

said...

ஔலியில் எப்போதுமே பயணிகள் வருகை அதிகம். நம் ஊர் பயணிகள் எப்போதுமே செய்யக்கூடாது என்பதை நிச்சயம் செய்பவர்களாயிற்றே! :) அழகான இடங்கள். Valley of Flowers நன்றாகவே இருக்கும். சீசன் சமயத்தில் நல்ல கும்பல் இருக்கும்.

தொடர்கிறேன்.