Sunday, June 11, 2017

ஞாயிறு விருந்துக்கு வாங்க.... கூப்புட்டாப் போகவேணாமா?

போன வருசத்தோடு அம்பது ஆண்டுகள் முடிஞ்சுருக்கு, இயக்கம் தோன்றி! பொன்விழாவைக்  கொண்டாடலாமுன்னா........   இடம்?  எங்கூர் இஸ்கான் கோவிலைப் பத்திச் சொல்றேன்....   நிலநடுக்கத்தில்  ( ஐயோ..... எங்கே  எதுன்னு  சொல்ல ஆரம்பிச்சதும்.... இந்த நிலநடுக்கம் வந்து இடம் பிடிச்சுருது பாருங்க....) கோவில் இடிஞ்சு போச்சு.  ஊருலே இருக்கும் ஒரு சர்ச்சையும் விட்டு வைக்கலை.  சாமிகளுக்குள் பேதம் வேணாமுன்னோ என்னவோ இருந்த ஒரு ஹிந்துக் கோவிலையும் இடிச்சுத் தள்ளிட்டுப்போச்சு  நிலநடுக்கம்.

அதுக்குப்பிறகு இன்ஷூரன்ஸ்  காசு வர்றவரைக்கும் காத்திருந்து  புதுக்கோவிலுக்குப் ப்ளான் எல்லாம் போட்டு, அதுக்கான மீட்டிங் எல்லாம் வச்சுன்னு....  ரெண்டு வருசத்துக்கு முன்னால் தை மாசம்,  பூமி பூஜா இருக்குன்னு அழைப்பு.  புதுக்கோவில் கட்ட அஸ்திவாரம் தோண்டப்  போறாங்க.  அதுக்குப்போய் வந்து எழுதுனது இங்கே!


அப்பப் பார்க்காதவங்க ஒரு எட்டு எட்டிப்போய் பார்த்துக்கிட்டீங்கன்னா....  இப்பக் கதை சுருக் எழுத வேண்டி இருக்காது :-)

போன ஜூனில் இன்னொரு  மீட்டிங் வரச்சொல்லிப் போனோம்.  எப்போ கோவிலைத் திறக்கலாமுன்னு   பஞ்சாங்கம் பார்க்கறதுக்குத்தான். அதைச் சொல்லாம விட்டுருப்பேனா, என்ன?  அப்பப் பார்க்கலைன்னா இப்பப் பாருங்க.:-)



மூணு மாசத்துக்கு முன்னால்  ஏற்கெனவே குறிப்பிட்ட நாளில் கோவிலைத் தொறந்தாங்க. அப்பப் பார்த்து, நாங்க அண்டைநாட்டுக்குப் போயிருந்தோம். ஆனால் கோவிலைத் திறந்தது அன்றைக்கு ஒரே நாள் சில மணிகளுக்கு மட்டும்.  கட்டடம் முழுசும் கட்டி முடிக்கலை.   எல்லாம் முடிஞ்சு சிட்டிக் கவுன்ஸில்  கட்டடங்களுக்கான பிரிவு வந்து முழுசும் பரிசோதிச்சு முடிச்சு  எல்லாஞ்சரின்னு  சொன்னால்தான்  பயன்படுத்த முடியும்.

வீடு கட்டவும் இப்படித்தான்.  ஒவ்வொரு நிலையிலும் பரிசோதனை உண்டு. அஸ்திவாரத்துலே இருந்து ஆரம்பிக்கும். ஒவ்வொரு நிலை முடிஞ்சபிறகும்  சரியா வேலை நடந்துருக்குன்னு  ஸர்ட்டிஃபிகேட் வந்த பிறகுதான் அடுத்த வேலையை ஆரம்பிக்கணும். இப்படி அஞ்சு  தரம்  பரிசோதனைகள் உண்டு. லஞ்சலாவண்யம் எல்லாம் இங்கே இல்லை என்பதால் எல்லாம் சட்டவிதிகளின் படி நடக்கும்.

'இப்படிச் சொன்னால் எப்படி.... வெளிநாடுகளில் இருந்தெல்லாம் திறப்பு விழாவுக்கு   வர்றாங்க. எல்லா ஏற்பாடுகளும் விஸாக்களும் ஏற்பாடு செஞ்சுட்டோமே'ன்னு கெஞ்சிக்கேட்டதுக்கு,  சிலமணி நேரம் மட்டும்  இருந்து உங்க பூஜைகளை முடிச்சுக்குங்கன்னு அனுமதி கிடைச்சதாம். இங்கே நாமெல்லாம் வேற்று மதக்காரர்கள் என்பதால் சிறுபான்மைக்கான சலுகைகள் கொஞ்சம்போல உண்டு:-)
ஒருவழியா எல்லாமும் சரியானபிறகு  கோவிலை, பொதுமக்களுக்காகத் திறந்துக்கோன்னு  போனவாரம் சொல்லிட்டாங்க. அப்பதான் நாமும் நம்ம 43 க்காக கோவில்வரை போயிட்டு வந்தோம். வர்ற ஞாயிறுமுதல்   'ஞாயித்துக்கிழமை விருந்து'  ஆரம்பிக்குதுன்னு சேதியும் சொன்னாங்க.



அடுக்களை வசதிகள் எப்படின்னு கூட்டிப்போய்  காமிச்சார் இப்போதைய தலைவர்.  ஞாயிறு விருந்துகளுக்கு  நாங்க போய் அடுக்களை வேலைகளில் உதவி செய்வது  வழக்கம்தான்.  நம்மவர், பொதுவா உருளைக்கிழங்கு தோல் சீவுவார். இப்ப அவருக்கு வேலை  போயிருச்சு ! அதுக்கு ஒரு மெஷீன் வந்துருச்சு :-)
பிரமாண்டமான ரைஸ் குக்கர்,  அடுக்கடுக்கா அடுப்புகள்,  எண்ணெய்சட்டிக்குன்னே தனிரக அடுப்பு செட் ,  கேக்  போன்றவைகளைச் செய்ய  கமர்ஸியல்  அவன் மாதிரி ஒன்னு,  ஒரு மணி நேரத்தில் 50 கிலோ காய்களை ஸாலட் செஞ்சுக்க வெட்டிக்கொடுக்கும் மெஷின் இப்படி  அடுக்களை ஜோர்!

2009 ஜூன் நம்ம 35 வது திருமணநாளை இங்கே கொண்டாடிட்டு, எல்லோருக்கும் நம்ம வகையில் விருந்து கொடுத்துட்டு, நாட்டை விட்டுக் கிளம்பியிருந்தோம்.  ரெண்டரை வருசம் இந்தியாவில் ஒரு ப்ராஜெக்ட் நம்மவருக்கு. திரும்பி வந்து பார்த்தால்  கோவிலே இல்லை  :-( இடிஞ்சு கிடந்துச்சு.

அடடா....  போனவாரம் தெரிஞ்சுருந்தால் இங்கேயே கொண்டாடி இருக்கலாமேன்னு  நினைச்சேன். போகட்டும்.... "தானே தானே பர் லிக்கா ஹை கானே வாலேக்கா நாம்"  உண்மைதான்.

இஸ்கான் தொடங்கி  இப்ப 51 வது வருசம். பொன்விழாவைக்கூடக் கொண்டாட முடியாமல் போச்சு. ப்ச்....
அழைப்பு வந்ததுன்னு  கோவிலுக்குப்போய்ச் சேர்ந்தோம். பிரசங்கம், ஆரத்தி, பஜனை எல்லாம் ஆச்சு.  எட்டு வருசத்துக்கு முன்னால் எப்படியோ அதே போல. என்ன ஒன்னு...  நமக்குத் தெரிஞ்ச முகங்களுக்கெல்லாம் எட்டு வயசு கூடி இருக்கு. அப்போ பார்த்த இளையவர்கள், இப்போ இளந்தாய்மாரா ஆகி இருக்காங்க.  ஸ்ரீ ப்ரபுபாதா மட்டும்  அப்படிக்கப்படியே  புது இடத்தில் உக்கார்ந்துருக்கார்.  மத்தபடி ஆல்டர், சாமி சிலைகள் எல்லாம் புதுசு.  கருவறைக் கம்பிகேட் மட்டும் பழைய சந்நிதியில் இருந்ததுதான்.



சாதம், பருப்பு, ஆலு பனீர் கறி, பஜ்ஜியா, கேக் ப்ளூபெர்ரி கேஸரின்னு  ஆர்ப்பாட்டமில்லாம  நிறைவான சாப்பாடு.

நல்ல கூட்டம்தான். சுமார் 120 இருக்கலாம்.  கோவில் திரும்ப வந்ததுலே எல்லோருக்கும்  மகிழ்ச்சி.
இப்ப எங்கூர்லெ ரெண்டு கோவில்கள் இருக்கு தெரியுமோ?   இன்னொன்னு ஸ்வாமிநாராயண் கோவில்.
ஹரேக்ருஸ்னா ஹரேக்ருஸ்னா க்ருஸ்னா க்ருஸ்னா  ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே....



9 comments:

said...

கோவில் சிலைகளும் பக்த பிரபுபாதாவும் அருமை. ஆமாம், கேக் புளூபெர்ரி கேக்கா அல்லது கேசரி புளூபெர்ரி போட்டுச் செய்ததா? நிறமே கருமையா (நீலம்) இருக்கே... கிருஷ்ணர் கலர் என்பதாலா?

said...

தரிசித்தோம்
படங்களுடன் பதிந்த் சென்ற விதம்
மனம் கவர்ந்தது
வாழ்த்துக்களுடன்...

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

கேஸரிதான் ப்ளூபெர்ரி சேர்த்துச் செஞ்சது. நம்மூரில் பைனாப்பிள் கேஸரி போல இங்கே அப்பப்ப சீஸனில் கிடைக்கும் பழங்களைச் சேர்ப்பதுண்டு. நான் மாம்பழக்கேஸரி செய்வேன் :-)

said...

வாங்க ரமணி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

படங்கள் அருமை. 43 க்கு மறுபடியும் வாழ்த்துகள். உருளைக்கிழங்கு தோலுரிக்க எல்லாம் மெஷினா? அட! இந்த பூண்டு தோல் உரிக்க மெஷின் இல்லையா!!! (மூடிய பாத்திரத்தில் போட்டுக் குலுக்கும் முறை அவ்வளவாகப் பயனளிப்பதில்லை!!)

said...

வாங்க ஸ்ரீராம்.

ஹா.... இதுக்குத்தான் துளசிதளத்தின் ரெகுலர் வாசகரா ஆகணும் என்பது :-)

பூண்டு உரிக்க இங்கே போங்க!

http://thulasidhalam.blogspot.com/2008/07/2_22.html

said...

இனி கண்ணன் தரிசனம் வேண்டி இந்தியா வரவேண்டாம்யாரையாவது திவ்வியப்பிரபந்தம் பாடச் சொல்லி ஆழ்வார்கள் பாடும் ஸ்டேடஸ் கொடுக்கலாம்

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கண்ணன் தரிசனம் எனக்கு வீட்டுலேயே கிடைக்குது. இதெல்லாம் கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்ற முதுமொழியை மதிக்கத்தான். அந்த ஸ்டேடஸ் எல்லாம் கொடுக்க பூலோக மனிதர்கள் யாருக்குமே உரிமை இல்லை. எல்லாம் 'அவன்' செய்யணும் !

said...

அழகான படங்கள். சுவையான தகவலும்....