Saturday, August 05, 2017

சனிக்கிழமை ஸ்பெஷல்: நூல்கோல் / நூக்கல்/ Kohlrabi

இங்கே  நியூஸிக்கு  வந்த  புதுசுலே (ஆச்சு முப்பது வருசம்) இதையெல்லாம் கண்ணுலே பார்த்ததே இல்லை.   சீனர்கள் ஏராளமாக வரத்தொடங்கிய பிறகு  மார்கெட்லே  புதுசு புதுசா காய்கறிகள்  கண்ணுலே பட்டுக்கிட்டே இருந்துச்சு.  பரிச்சயம் இல்லாதவைகளை   வாங்க ஒரு தயக்கம் இருக்கத்தானே செய்யுது, இல்லையோ?
இப்ப ஒரு  ஒன்பது வருசத்துக்கு முன்னே மலேசியன் கடையில் நூல்கோல்  பார்த்ததும்  வாங்கியாந்து ஆக்கித் தின்னதுமில்லாம  துளசிதளத்தில் பதிவு போட்டு ஊர் உலகத்துக்குச் சொல்லியாச் :-)

அப்போ பார்க்கலைன்னா    இப்போ... :-)



சமீபகாலமா (ரெண்டு மூணு வருசம்)பக்கத்து ஊர்லே பண்ணை வச்சுருக்கும் பஞ்சாபிகள் , முட்டைக்கோசு, கேரட், காலிஃப்ளவர் இத்தியாதிகளைக் கொண்டு வந்து நம்ம வூட்டாண்டை இருக்கும் சண்டே மார்கெட்டில் விக்க ஆரம்பிச்சுருக்காங்க.  பொதுவாக் காய்கறிக் கடைகளில் கிடைப்பதை விட இது இன்னும் ஃப்ரெஷ்!  அதிகாலையில் பறிச்செடுத்துக் கொண்டு வர்றாங்களாம்.

அங்கே  ஒருநாள் நூக்கலைப் பார்த்தேன். ஒன்னு  வாங்குனா  ரெண்டு டாலர்.  மூணுக்கு அஞ்சு.  ஒன்னையே முழுசாத் திங்க ஆளில்லை. இதுலே மூணு வேணுமாக்கும்? க்கும்.........

ரொம்ப முத்தலா இருக்குமோன்னு  சந்தேகம் இருந்தாலும்.... கிள்ளிப் பார்த்து வாங்கலை....

  வழக்கம்போல் நாலைஞ்சு நாள்  ஃப்ரிட்ஜ்லே உக்கார வச்ச பிறகு, ஒருநாள்    சமைக்கலாமுன்னு வெளியே எடுத்தேன்.  இவ்ளோ குண்டு எவ்ளோ எடைன்னு  பார்க்கணும். (நம்ம கிட்டேதான் பேலியோவுக்காக வாங்குன டிஜிட்டல்  கிச்சன் ஸ்கேல்  இருக்கே!)
1786 கிராம் காமிக்குது!  ஒன்னேமுக்கால் கிலோவுக்கும் மேலே!   ஹைய்யோடா....

எடுத்தேன் ஒரு  ஸ்பெஷல் கத்தியை!  ( இது ஒரு மதர்ஸ் டே கிஃப்ட் ஃப்ரம் மகள்)

அறுக்கமாட்டாதவளுக்கு அம்பத்தெட்டு அரிவாள்ன்றதைப்போல  கத்தி வாங்கறது  ஒரு கடமையாப் போயிருக்குன்னு ஒருநாள் அடுக்களை இழுப்பறையைச் சுத்தம் செஞ்சப்பக்  கண்டுபிடிச்சேன்.

இது இல்லாம செட் செட்டா இன்னும் நாலைஞ்சு கிடக்கு.  ஒருநாள் எல்லாத்தையும் எடுத்து அடுக்கணும்.  ஒரு  கொலுவுக்குக் கூட வச்சுடலாம் இல்லே?    கத்தி தீம்  :-)

கத்தி (ப்) பார்த்ததும்     நம்மவர்  உதவிக்கு வந்துட்டார்.  சமைக்கக் கத்துக்கப் போறாருன்னு சொல்லி இருந்தேனே....  நினைவு இருக்கோ?  முதல்படி கறிகாய் நறுக்கக்  கத்துக்கறதுதானே?  வெங்காயம்  படிச்சாச்சு. இப்ப  மற்ற காய்கள் ஒவ்வொன்னா...



 தோலைச் சீவி எடுக்க சுலபமான வழியை ஒரு துண்டுலே டெமோ காமிச்சேன்.  துண்டுகள் கொஞ்சம் பெருசாவே  இருக்கட்டும். எல்லாத்தையும் துண்டு போட்டதும் எடை  1400 கிராம்.
ரெண்டு பேருக்கு இது அதிகம்.  பாதி அளவை எடுத்து  கொஞ்சம் சின்ன அளவில் வெட்டி, ஏற்கெனவே அடுப்பில் வச்ச  கொதிக்கும் தண்ணீரில் போட்டு ரெண்டு கொதி  ஆனதும்  முக்கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து இன்னொரு முறை கொதிக்க ஆரம்பிச்சதும் தண்ணீரை வடிகட்டி முக்கால் வாசி வெந்த  காயை  எடுத்து  வச்சேன்.

இப்ப ஒரு பொரியல்/கறி பண்ணிக்கணும்.

எடுங்க... அந்த வாணலியை. அடுப்பிலே ஏத்துங்க.  ஸ்டவ் பத்த வச்சாச் :-)

 நாலு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அது  சூடானதும்   அரை டீஸ்பூன் ஜீரகம், அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்,  அரை டீஸ்பூன் உப்பு (ஏற்கெனவே காய் வேகும்போது உப்பு போட்டது நினைவிருக்கட்டும்!)  அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி, அரை டீஸ்பூன் மிளகாய்ப்பொடி (நான் ஹாட் சில்லிப் பவுடர்) போட்டேன்.  இங்கே  மூணுவிதமா மிளகாய்ப்பொடி கிடைக்குது.  ரொம்பக்காரம், காரம்,  காஷ்மீர் சில்லி (கலருக்காக) இப்படி)மிளகாய் நெடி போனதும்    வேகவச்சு எடுத்து வச்ச நூக்கலைச் சேர்த்து   கிளறிக்கணும். அப்படியே ஒரு மூணு நிமிட்டுக்கும் குறைவா அடுப்பிலே இருக்கட்டும். அப்பப்ப ஒரு கிளறு. ஆச்சு நம்ம கறி !
இப்ப பாக்கி இருக்கும்  நூக்கலைப் பார்க்கலாம்.  கொஞ்சம் சின்னத் துண்டுகளா நறுக்கிட்டு,   அடுப்பில் கொதிக்கும் தண்ணீரில் போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து  வேகவிடணும்.  ரொம்பத் தண்ணீர் வேண்டாம்.  ரெண்டு  கொதியில் ஜஸ்ட் வெந்துரும். அப்படியே எடுத்து வச்சுக்  கொஞ்சம் ஆறினதும்  காயில் இருக்கும் தண்ணீரோடு சேர்த்தே ஒரு கண்டெய்னரில் போட்டு ஃப்ரீஸ் செஞ்சுக்கலாம். இன்னொரு நாள் சமையலுக்கு ஆச்சு.

சமைக்கும் நாளில்  கன்டெய்னரை  ஃப்ரீஸரில் இருந்து  எடுத்து  வெளியில் வச்சுட்டு, ரெண்டு மூணு  தக்காளி, ஒரு பெரிய வெங்காயம்  எடுத்து எல்லாத்தையும் பொடியா நறுக்கிக்கணும்.

ஏற்கெனவே ஃப்ரீஸ் செஞ்சு வச்சுருக்கும் குடமிளகாய்த் துண்டுகள் இருக்கும்  பொதிகளில் ஒன்னும் எடுத்து வச்சுக்கணும்.
அடுப்பில் வாணலி/ ஃப்ரையிங் பான்  வச்சு  நாலு டீஸ்பூன் எண்ணெய்  சேர்த்து சூடானதும்  அரை டீஸ்பூன் கடுகு, ஒரு நுள்ளு சீரகம் போட்டு வெடிக்க விட்டு,  அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சேர்த்து வாசனை வரும் வரை வறுபட்டதும் நறுக்கி வச்ச வெங்காயம் சேர்த்து வதக்கணும். கூடவே கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்துக்கலாம்.

வெங்காயம் நிறம் மாறியதும்,  குழம்புப்பொடி ரெண்டு டீஸ்பூன், மஞ்சள் பொடி அரை டீஸ்பூன் சேர்த்து   வறுபட்டதும் தக்காளித் துண்டுகளையும் சேர்த்து வதக்கினதும்,  குடமிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிட் கிளறிட்டு,  இதுக்குள்ளே டீஃப்ராஸ்ட் ஆகி இருக்கும்  நூக்கல் துண்டுகளை அப்படியே வாணலியில் சேர்த்துடலாம்.

டீஃப்ராஸ்ட் ஆகலைன்னா  கவலை வேணாம். மைக்ரோவேவ் எதுக்கு இருக்கு?  அதுலே ரெண்டு நிமிட்  ஃபுல் பவரில்  வச்சு எடுத்தால் ஆச்சு :-)

கொஞ்சம் கூடுதல் புளிப்புச் சுவை பிடிக்குமுன்னால்  அரை டீஸ்பூன் புளி கான்சன்ட்ரேட்  சேர்த்துக்கலாம்.

இதோ இப்படி இருக்கும் அந்தக் குழம்பு :-)

ஸ்டெப் பை ஸ்டெப்  படம் எடுக்க விட்டுப் போச்சு....

இந்தக் காயில் இப்போ பர்ப்பிள் வகை கூட வருது!   வெளிவேஷம் தான் அப்படி. உள்ளே அதே  க்ரீம்வெள்ளை நிறம்தான் :-)



இந்த சமையல் குறிப்பு வரப்போகும் ஈஸிபீஸி இண்டியன் ரெஸிபியில் இடம் பெறுகிறது!


18 comments:

said...

நல்ல குறிப்பு. ஏனோ நூல்கோல் வாங்குவதே இல்லை! :)

said...

நூல்கோல் பிடிச்ச காய்

said...

இன்னிக்கு சனி ப்ரதோஷம், உபவாசம் இருக்கலாம்னு நினைச்சிண்டிருக்கே. முடியாது போலிருக்கே;

said...

Thanks for the recipe.. நான் சப்பாத்தி க்கு நூக்கல்குருமா செய்வேன்.

said...

நூல்கோல் இங்கயும் புதிதா டிசம்பர்-ஏப்ரல் வரை கிடைக்கும். இவ்வளவு பெரிசில்ல. ஆரஞ்சு சைசுல. புடலை, மற்ற எல்லாக் காயையும் பண்றமாதிரி விதவித கூட்டு செய்வோம். நாங்க இதுக்கு சீரகம் சேர்க்கறதில்லை. சேர்த்தாலும் நல்லதுதான்.

said...

என்னமாதிரி சமைத்தாலும்நான் சொல்வது அந்தக் காயின் தனித்தன்மை போகக் கூடாது என்று தான்

said...

நூல்கோல் ஒருமுறை சாப்பிட்டிருக்கிறேன். முள்ளங்கி ஃபேமிலி என்று நினைக்கிறேன்!

said...

ஒரு நூல்கல் ஒன்னே முக்கால் கிலோவா... ஆத்தாடி அம்மாடியோவ். எவ்ளோ பெருசு.

நூல்கல் பிரியாணிக்கும் குருமாவுக்கும் ரொம்பப் பொருத்தமான காய். அல்லது கிழங்கு.

சைனாக்காரங்க எங்க போனாலும் சைனாவையும் கொண்டு போயிருவாங்கன்னு விளையாட்டாச் சொல்வாங்க. அது உண்மைதான் போல.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தில்லியில்தான் இளசா சின்னச் சின்னதாக் கிடைக்குதே! ஒன்னு மட்டும் வாங்கிப் பாருங்க! முள்ளங்கி வகைன்னாலும்.... முள்ளங்கி மணம் இல்லை இதுக்கு:-)

said...

வாங்க ராஜி.

எங்களுக்கும் இப்போ பிடிச்சே போச்சு :-)

said...

வாங்க விஸ்வநாத்.

முழு உபவாசமா? இல்லை ஒரு பொழுதா?

said...

வாங்க உமா.

சப்பாத்தி குருமாவா? பேஷ் பேஷ்!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

கூட்டு இதுவரை செஞ்சு பார்க்கலை.... செஞ்சுருவோம் :-)

கொஞ்சநாளா எனக்கு சீரகப்பித்து பிடிச்சுருக்கு :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

உண்மை. அதனதன் ருசி விட்டுப்போகுமா என்ன? :-)

said...

வாங்க ஸ்ரீராம்.

இனிமேல் அடிக்கடி சாப்பிடுங்க. உடல்நலத்துக்கு ரொம்பவே நல்லதாம் !!!

said...

வாங்க ஜிரா.

தமிழன் எங்கே போனாலும் முருகனைக் கொண்டு போறது போல!!!

எப்படியோ அவுங்க புண்ணியத்தில்தான் கொஞ்சம் நம்ம காய்கறிகள் கிடைக்குதுன்னு சொல்லணும்.

said...

நூல்கோலை இலங்கையில் பார்த்தது. இவ்வளவு பெரிய நூல்கோலை என் வாழ்க்கைல இப்போதான் பார்க்கிறேன். எங்க ஊர்ல எல்லாம் உருளைக்கிழங்கு அளவுலதான் பார்த்திருக்கேன். நிறைய மருத்துவக் குணம் கொண்டதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஒரு நாள் சமைச்சுப் பார்க்கணும் டீச்சர்.

said...

இங்கு வெள்ளை நிற காய்கள் தாராளமா கிடைக்கும். எங்கள் வீட்டில் பொரியல்பிடிக்கும்.