Monday, November 06, 2017

பதிவர் குடும்ப சந்திப்புகள் !!(இந்திய மண்ணில் பயணம் 72)

எனக்குத் தெரிஞ்சு (!) மூணு பதிவர்கள் அதுவும் ஸ்ரீரங்கத்தில் ஒரே வீட்டுலே இருக்காங்கன்னா....  இவுங்களாத்தான் இருக்கும்! ஏற்கெனவே வரவைத் தெரிவிச்சதால் அவுங்களும் நம்மை எதிர்பார்த்திருந்தாங்க.
ஏற்கெனவே போன இடம் என்பதால் நம்ம சீனிவாசன்  பிரச்சனை இல்லாம அங்கே கொண்டுபோய் சேர்த்தார்.

குட்டிப்பதிவர் ஓடி வந்து ஒரு புன்னகையுடன்  வரவேற்று மாடிக்குக் கூட்டிப்போனாங்க.

வாசலில் நின்னுக்கிட்டு இருக்காங்க  ரோஷ்ணியம்மா !  வீடு பளிச்ன்னு மின்னுது!  புது வீடுதான்னாலும் அதை புதுக்கருக்கழியாமல்  வச்சுருக்கும் பாங்கு.... பாராட்டத்தான் வேணும்.

கொஞ்சநாளைக்கு முன்னால்தான் களையெடுத்தாங்களாம். அது இருக்கும் ஒரு மூணு நாலு மாசத்துக்கு முந்தி :-)  வேண்டாமுன்னு தீர்மானிச்சவைகளை உள்ளூரில் தானம் பண்ணப்போறாங்கன்னு  அப்போ தெரிஞ்சதும்,  நாம் வர்ற விவரம் சொல்லி அப்படியே எடுத்து வையுங்க. நான் வந்து அள்ளிக்கிட்டுப் போறேன்னு சொல்லி வச்சுருந்தேன்.

எங்க ஊர் லைப்ரரியில் கூட  அப்பப்ப வீடிங்க் என்ற களையெடுப்பு நடக்கும்.  இங்கே என்ன கணக்குன்னா....  ரெண்டு வருசம் வெளியே போகாமல் ஷெல்ஃபிங்  உக்கார்ந்துக்கிட்டு இருந்தால்..... தூக்கிடணும்!   எனக்குத்தான் மனசே ஆகாது. சில பல புத்தகங்கள் புதுக் கருக்கு அழியாமல் அப்படிக்கப்படியே இருக்கும். பிள்ளைகளுக்கு  அப்பீல் ஆகாத எதோ ஒன்னு  இதுலே இருக்கு.... அட்டைப்படமோ, இல்லை உள்ளே இருக்கும் சமாச்சாரமோ  ஏதோ ஒன்னு!  எதுன்னு கவனமாப்பார்த்து  மூளையில் முடிச்சுப்போட்டுக்குவேன். அடுத்த முறை  லைப்ரரிக்குப் புத்தகம் வாங்கும்போது  இதையெல்லாம் கவனத்தில் வச்சுக்கணும்.

ஆமாம்.... சொல்லி இருக்கேனோ.... இங்கத்து குழந்தைகளுக்கான நூலகத்தில் நான் பதிமூணு வருசம் வேலை செஞ்சுருக்கேன்னு!  இதுக்கான புத்தகம் வாங்கும் குழுன்னு  மூணு பேர். நானும் அதில் ஒன்னு :-)பிறந்த முதல் நாள் தொடங்கி பதினாறு வயசு வரை  இருக்கும் பிள்ளைகளுக்கான  நூலகம் இது!  தனியார் ஆரம்பிச்சது.  வேலை செய்யும்  அனைவருமே தன்னார்வலர்கள்தான்.

ஒருகட்டத்தில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தவர்கள் எல்லோருமே மூப்பின் காரணம் விலக முடிவு செஞ்சு, நூலகமே மூடப்போகும் நிலை வந்தப்ப, நாங்க ஒரு  பத்துப்பேர் முன்வந்து இதை ஏத்து  நடத்தினோம். இதுக்குன்னு ஒரு ட்ரஸ்ட். நானும் ஒரு ட்ரஸ்ட் மெம்பர்தான் :-)

இந்தப் பதிமூணு வருசத்தில் பலவகையான பொறுப்புகளும் அனுபவங்களும்  கிடைச்சது!  எல்லாம் போனஸ்!

புண்ணியவான் எழுதி வச்ச சொத்துகளில் கிடைக்கும் வருமானம்தான் புதுப்புத்தகம், கட்டடப் பராமரிப்புன்னு  பலவகை செலவுகளுக்கு  ஈடு கொடுத்துக்கிட்டு இருந்தது.  உள்ளூர் நகர சபையும் போனாப்போகுதுன்னு  கொஞ்சூண்டு காசு கொடுத்தாங்க. எல்லாம்  நாம் கட்டும் வீட்டுவரிகளில் இருந்துதான்.

 பதிமூணு வருசம் குப்பை கொட்டுனபிறகு, எங்களுக்கும்  விதி முடிஞ்சது :-)  'ரொம்பக் கிட்டக்க  , ஐநூறு மீட்டருக்குள்  நகரசபையின் நூலகம் வருது.  இனி உங்களுக்குன்னு செய்யும் தர்மத்தை (!) நிறுத்தப்போறோம். ' இடியைப்போட்டுட்டு  நிம்மதியா இருக்கு  நகரசபை.

அழாதீங்கன்னு சொல்லி  நமக்கு விசேஷ அழைப்பு வேற !


இப்ப இருக்கும் புத்தகங்கள், மற்ற கையிருப்பு காசு எல்லாம் என்ன ஆகும்?
நல்லா யோசிச்சு, ஆராய்ஞ்சு  நாங்களும் முடிவெடுத்தோம்.  பொம்மை பொம்மை ....  விளையாட்டுப்பொம்மை. 



அடடா.... என்னவோ சொல்ல வந்து   என்னவோ சொல்லிக்கிட்டு இருக்கேனே.....  இந்த செயின் ஆஃப் தாட்ஸ் இப்படித்தான்  போயிருது.....  இருக்கட்டும்.

ஒரு அடுக்குப் புத்தகங்களைக் கொண்டுவந்து  கண்முன்னே வச்சாங்க  ரோஷ்ணியம்மா என்னும் திருமதி வெங்கட். (கோவை டு தில்லி பதிவாளர்)


இந்த முறை களையெடுப்பு பா கு வின் புத்தகங்களுக்கு! நம்ம கலெக்‌ஷனுக்கு ஆச்சுன்னு பேராசையோடு பார்த்தேன்:-)  பக்கத்தில் இருந்த நம்மவரின்  மிரட்டல் மனசுக்குள்ளே கேக்குது. ....  எல்லாம் எடைப் பிரச்சனைதான்.

ஒரு நோட்டம் விட்டுட்டு,  ஏற்கெனவே படிச்சவைகளை  வேணான்னு தீர்மானிச்சு, தலைப்பு அவ்வளவா விருப்பம் இல்லாததை  ஒதுக்கிட்டு ரெண்டே ரெண்டு எடுத்துக்கிட்டேன்:-)
ரோஷ்ணியம்மாவுக்கு,  களையெடுப்பு பிரச்சனையில்  வச்சுக்கவா, இல்லை வேணாமா  என்பதுதான் முக்கியம். வேணாமுன்னு தள்ளினாலும், திரும்ப வேணுமுன்னா  உள்ளூர் நூலகத்திலோ, இல்லை கடையில் புதுசாவோ கூட வாங்கிக்கலாம்.  எனக்கு?

என்னுடைய காலத்துக்குப்பின் படிக்க ஆள் இல்லைன்றது ஒரு சோகம், அதைவிட வேணாமுன்னு களைஞ்சுட்டு, வேணுமுன்னா  இங்கே எங்கே போய் வாங்கன்னு இன்னொரு சோகம். அதனால்  தமிழ்ப் புத்தகங்களை மட்டும் வீட்டைவிட்டு வெளியேத்தவே மாட்டேன்:-)

இதுக்கு நடுவில்  பயணம்,  அது இதுன்னு பேசித் தீர்த்தோம். வீட்டின் மூத்த பதிவாளர், தலைநகரத்தில் இருக்கார். தீபாவளிப் பண்டிகை வருதே..... வர்றாரான்னு  கேட்டதுக்குத் தெரியலை, இன்னும் தகவல் ஒன்னும் இல்லைன்னாங்க.

எங்களுக்கு நூத்தியெட்டில் பாக்கி இருக்கும்  ஒரு கோவிலைப் பத்திப் பேச்சு வந்தப்ப,  அவுங்க கட்டடத்திலேயே  ஒரு மூத்த தம்பதிகள்  சமீபத்துலே அங்கே போயிட்டு வந்துருக்காங்க.  அவுங்ககிட்டே விசாரிச்சால் கூடுதல் தகவல்கள்  கிடைக்கும். நமக்கும்  உதவியாக இருக்குமுன்னு  சொன்னதால் அவுங்களை சந்திக்கலாமுன்னு கிளம்பறோம்.

நமக்கு  மஞ்சள் குங்குமம் மற்றும் மங்கலப்பொருட்கள் இருக்கும் அலங்காரப்பையை 'வச்சு' க்கொடுத்தாங்க. நவராத்ரி ஸ்பெஷல்!  வரவு முக்கியம் :-)

அவுங்க சொன்ன  தம்பதிகளைப் பார்த்துக் கொஞ்சம் விவரம் சேர்த்துக்கிட்டு,  போயிட்டு வரோமுன்னு  ரோஷ்ணியம்மாவிடம் சொல்லிட்டுப் போகலாமுன்னு  போறோம். வழியில் மாடிப்படி! அதில் படபடன்னு ஏறி வர்றது யாருன்னு பார்த்தால்  நம்ம ரோஷ்ணியப்பா,  வெங்கட் நாகராஜ்!

எல்லாருக்குமே சர்ப்ரைஸ் கொடுத்துட்டார் !  இப்போ மொத்தக் குடும்பத்துடன் பேசி மகிழ்ந்தோம் :-) நேரம்தான் பறக்குது!

அங்கிருந்து கிளம்பி நேரா கீதாம்மா வீடு :-)  கயிலை ரிட்டர்ன்டு!  காண்பதே புண்ணியம்!  வர்றோமுன்னு  ஏற்கெனவே  தகவல் சொல்லி  இருந்ததால்  அவுங்களும் நம்மை எதிர்பார்த்துருந்தாங்க.

பதிவர் குடும்பமுன்னு நான் எப்பவும் சொல்றது  சரின்றது போல  குடும்ப நண்பர்கள் சந்திப்பாத்தான்  இருக்கு எல்லாமே! 
ஸ்ரீரங்கம் போனால்  அங்கேயும் நமக்கு ரெண்டு குடும்பம் இருக்கு  :-) கூடியவரை  சந்திக்காமல் வர்றதே இல்லை என்பது உண்மை ! இவுங்க காட்டும் அன்புதான் திரும்பத்திரும்ப சந்திக்க வைக்குது என்பதும்   உண்மை !
பேச்சு, காஃபி டிஃபன், வச்சுக்கொடுக்கும் சம்ப்ரதாயம் எல்லாம் ஆச்சு:-)

இன்றைக்கு இன்னும் ஒரு சந்திப்பு பாக்கி!


வாங்க போகலாம்.....  :-)

தொடரும்...  :-)

PINகுறிப்பு : படங்கள் எடுத்தாலும் நம்ம வெங்கட் குடும்பத்திடம் அனுமதி வாங்காததால் இங்கே போடலை.


16 comments:

said...

​இந்த முறை நீங்கள் சந்தித்த பதிவர்கள் எனக்கும் தெரிந்தவர்கள் என்பதில் ஒரு மகிழ்ச்சி! புத்தகங்களைக் களையெடுக்க வேண்டும்தான் என்றாலும் மனசே வருவதில்லை.​

said...

ஆஹா நம்ம அதிரடி சந்திப்பு வந்தாச்சா.... இடையில் விடுபட்ட பதிவுகள் படிக்கணும்... படிச்சுடுவேன்!

உங்களை மீண்டும் ஒரு முறை சந்தித்ததில் மகிழ்ச்சி...

said...

பதிவர்களை உங்கள் மூலமாகக் கண்டதில் மகிழ்ச்சி. இல்ல நூலகத்தில் உள்ள சில நூல்களை அருகில் உள்ள நூலகத்தில் சேர்ப்பது நல்லது. இன்னும் கூடுதல் எண்ணிக்கையில் வாசகர்கள் படிக்க உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில், எங்கள் இல்ல நூலகத்திலிருந்து இதுவரை சுமார் 700 நூல்களை தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்திற்கு அன்பளிப்பாகத் தந்துள்ளேன்.

said...

பதிவர்கள் சந்திப்பு எப்போதும்போல் அருமை. 'புகைப்படம் வெளியிடுவதில்' உங்களின் நயத்தகு நாகரிகத்தைப் பாராட்டுகிறேன். 'விட்டுப்போன கோவில்' எது என்பதில் எனக்கு இப்போது ஒரே குழப்பம். தொடர்கிறேன்.

said...

நான் ஸ்ரீரங்கத்துக்கு போனபோது வெங்கட் அண்ணா ஊரில்தான் இருந்திருக்கார். எனக்கு இது தெரியாது. தெரிஞ்சிருந்தா கோவிலுக்கே அண்ணனையும் அண்ணியும் வரச்சொல்லி பார்த்துட்டு வந்திருப்பேன்.

said...

அருமை நன்றி

said...

நம்ம சந்திப்பு பற்றி அழகா சொல்லியிருக்கீங்க டீச்சர்..எப்ப ஸ்ரீரங்கம் வந்தாலும் கட்டாயமா வீட்டுக்கு வரணும் டீச்சர்...:) அப்புறம் அடுத்த தடவையாவது சாப்பாட்டுக்கு வரணும்..பயப்படாதீங்க டீச்சர்.. சாப்பிடற மாதிரி தான் இருக்கும். :)) பதினாறு வருடமா சாப்பிட்டு ஒருத்தர் தொப்பையும் தொந்தியுமா ஆகியிருக்காரே..:))

களையெடுத்த புத்தகங்களை நூலகத்தில் கொடுத்துட்டேன்.

said...

களை எடுக்கும் வீட்டில் கலை எடுத்த தலைவியே வாழ்க. ஏடு தந்தானடி தில்லையிலேன்னுதான் பாட்டு இருக்கு. நீங்க ஏடு தந்தாரடி அரங்கத்திலேன்னு பாட்டு பாடலாம். :)

said...

வாங்க ஸ்ரீராம்.

எனக்கும் களையெடுப்பு வீட்டில் கஷ்டம்தான் :-)

நம்மூரிலாவது யாருக்காவது வாசிக்கக்கொடுக்கலாம். இங்கே ரப்பிஷ் டம்ப்க்குத்தான் போகும் :-(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அன்றைக்கு எதிர்பாராத சந்திப்புதான். ஒரு அஞ்சு நிமிசம் முன்னாலே கிளம்பி இருந்தால் சந்திக்க முடியாமலே போயிருக்கும்.

அங்கே பெரியவர்களுடன் கோவில் பற்றி விசாரிக்கப்போனது பாக்கியம் ! இல்லேன்னா போயே இருப்போம்!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பதிவர் சந்திப்பு எப்போதும் மகிழ்ச்சியேதான் !!!

ரோஷ்ணியம்மா நூலகத்துக்குக் கொடுத்துடறாங்க. நாங்கதான் இங்கே ... என்ன செய்வதுன்னு தெரியாம முழிக்கிறோம். மேலும் இங்கே உள்ளூர் நூலகத்தில் அப்படிக் கொடுத்தாலும் வாங்கிக்க மாட்டாங்க. யார் எடுத்து வாசிக்கப்போறாங்க?

சென்னையில் நம்ம முக்தா சீனிவாசன் அவர்கள் நடத்தும் வீட்டு நூலகத்துலேகூட கொடுக்கலாம். ஒரே ஒரு கண்டிஷந்தான். அவர் சும்மா வாங்கிக்க மாட்டார்..... அரை விலை போட்டு நமக்குத் தந்துருவார். அவரிடம் ஒரு முறை இதைப் பற்றிப் பேசி இருக்கேன்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

வளரும் பெண் குழந்தைகள் இருக்கும் படங்களை, அவர்களைக் கேக்காமல் வெளியிடக்கூடாதுதானே?

நான் பொதுவா வெளியாட்களைப் படம் எடுத்தால் வெளியிடப்போறேன், சம்மதமான்னு கேட்டுக்குவேன்.

அந்த ஒரு கோவில்...... எல்லாம் நம்ம ஷோளிங்கர்தான் !! சஸ்பென்ஸுலே வச்சுட்டேனோ :-)

said...

வாங்க ராஜி.

வெங்கட் எப்போ வர்றாருன்னு அன்றைக்கு அவர் மனைவிக்கே தெரியாதேப்பா !!!

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

அழைப்புக்கும் அன்புக்கும் நன்றிப்பா! சாப்பிடவும் வேளைன்னு ஒன்னு வரணுமே!

said...

வாங்க ஜிரா.

அடுத்த களையெடுப்பில் இன்னும் கொஞ்சம் அதிகமாக் கொண்டு வரணும் :-)