Monday, December 11, 2017

பாதிதான் பார்த்தேன். இப்ப மீதியையும்.... (இந்திய மண்ணில் பயணம் 87)

முதல்வேலை முதலில்னு  அடுத்தாப்லே இருக்கும் சத்குருவுக்குப்போய்  நமக்கு காஃபியும் சீனிவாசனுக்கு டீயுமா ஆச்சு. அப்பதான்  சேதி வருது ஸ்பெஷல் வடை இருக்காம்.   வடைன்னா  விடமுடியுதா?   ப்ச்....  கொண்டு வாங்க....  ஆச்சு :-)

அப்பதான் நம்மவர் சொல்றார், இவருக்கு இந்தக் கோவில் சமாச்சாரம், போன இடத்தில் கிடைச்சதாம்.  மீட்டிங்கில் சின்னப்பேச்சு :-)

முத்தியால்பேட்டை என்ற இடம்.  அட!  இதே பெயரில் நம்ம சிங்காரச் சென்னையில் ஒரு பகுதி இருக்கே!  எங்க அம்மாவின் அம்மம்மாவுக்கு ரொம்ப பிடிச்ச இடமாம்!

அதிக தூரமில்லை. ஷெண்பகாவில் இருந்து வெறும் 2.7 கிமீதான்னு  கூகுளார் சொல்லிட்டார். இதே மஹாத்மா காந்தி சாலையில்  வடக்கே நேராப்போய் நம்ம  காய்தே மிலத் நூற்றாண்டு வளைவுக்குப் பக்கம்  ரைட் எடுக்கணும்.
   மேலே படம்:   வலையில் ஆப்ட்டது 


அந்தப்பேட்டைக்குள் போய் கொஞ்சம் விசாரிச்சதும் கோவிலுக்கு வழி தெரிஞ்சது. இங்கே அதுக்குள்ளே இருட்டிப்போச்சு பாருங்க.....   கோபுரம் இருக்கா என்ன?  முன்னால் பந்தல் போட்டுருப்பதால் கண்ணுக்கு ஆப்டலை....
வீடு போல இருந்த ஹாலுக்குள் போனால்  தகதகன்னு மின்னும் கொடிமரம், கம்பி கூண்டுக்குள் ....  அந்தாண்டை பெரிய திருவடிக்கான சந்நிதி. இவருக்கும் தகதகன்னு  'தங்கச்சுவர்' !




மூலவருக்குத் திரை போட்டுருந்தாங்க. அஞ்சு நிமிஷம் ஆகுமாம்.   அடுத்தாப்லே இருந்த இன்னொரு ஹாலுக்குள் போனால்.... அங்கேயும் திரை!  உற்சவர் எழுந்தருளும் மண்டபமாம்!
அங்கே இருந்த படங்களைப் பார்த்தும்,  சுவரில் இருந்த  அஹோபில நரசிம்ஹர்களைப் பற்றிப் போட்டுருந்த தகவல்களைப் படிச்சுக்கிட்டும்  இருந்தப்பதான், இதன் மேல் மூலையில்  பத்து நரசிம்ஹர்களை மேல் சந்நிதியில் தரிசிக்கலாம் னு எழுதி இருப்பதைக் கவனிச்சேன்.


நம்ம அஹோபில யாத்திரையில்  பத்துக்கு அஞ்சு பழுதில்லைன்னு  கிடைச்ச அம்பது சத தரிசனத்தை இங்கே துளசிதளத்தில் எழுதி வச்சுருந்தேன். யாருக்காவது ஞாபகம் இருக்கோ?   இல்லைன்னா.... இங்கே எட்டிப் பார்க்கலாம் :-)


ஆனாலும் அது ஒரு மனக்குறையா ஒரு மூலையில் இருந்துக்கிட்டேதான்....

உடம்பு இருக்கும் நிலையில்  கோல்பிடித்து நடந்தெல்லாம் போக முடியாதே.....

அந்தக் குறை உனக்கெதுக்கு? இதோ இங்கே பார்னு கூப்புட்டுருக்கான் போல!
இதே கட்டடத்தின் பக்கவாட்டுக் கதவுக்குப் போகணும். மாடிப்படி தெரிஞ்சது.  முதல் மாடி தாண்டி ரெண்டாவது மாடிக்குப் போகணும்.
போனால்....
ஹைய்யோ......   பத்துப்பேரும் ஒரே வரிசையில் அழகா காட்சி கொடுக்கறாங்க!  பஞ்சலோஹ விக்ரஹங்கள்! பளிச் பளிச் !
அருமையான தரிசனம்!   படம் எடுக்கலாமான்னு தயக்கத்துடன் கேட்டேன். எஸ்ஸுன்னுட்டார் பட்டர்பிரான்!  ஹைய்யா..... பெருமாளே/\....

நன்றி சொல்லிட்டுக் கீழே கோவிலுக்கு வந்தால்  ஹயக்ரீவரும் லக்ஷ்மியுடன்  ஸேவை சாதித்தார்!   ரொம்ப அழகான உருவம்!

கோவில் பழசுதானாம்.  தினமலர் சொல்றாப்லே ஐநூறு வருஷம் இருக்குமான்னு சின்ன சந்தேகம் வரத்தான் செஞ்சது...
சமீபத்தில்தான் நாப்பத்தி  ஆறாவது ப்ரம்மோத்ஸவம் நடந்ததாக ஒரு தகவலும் கிடைச்சது!
இவுங்க கோவிலின் பதிவில் 1971 இல் ஸ்தாபிதம்னு இருக்கு.  அந்தக்கணக்கில் பார்த்தால்  46 சரியா வருதே!

இவுங்க   ஸைட்லே போய்ப் பார்த்தால்   1971 இல்  குடமுழுக்குன்னும் இருக்கு.  ஒருவேளை ஏற்கெனவே இருந்த கோவிலைக் கொஞ்சம் விஸ்தரிச்சுக்கட்டிக் கும்பாபிஷேகம் நடத்தி இருக்காங்க போல!

 அப்ப அந்த நாப்பத்தியாறு?  அது  ட்ரஸ்ட் ஃபார்ம் பண்ண வருஷம். அப்படித்தான் எனக்குத் தோணுது.  மேல்விவரம் கேட்டு அனுப்பிய மடலுக்கு பதில் இதுவரை இல்லை!

கல்விக்கடவுள் நம்ம ஹயக்ரீவர்  என்பதால் எல்லோருக்கும் பிடிச்சுப்போயிருக்கும்தானே?  மேலும் மூலவர் பிரதிஷ்டைக்குமுன்  அங்கே செப்பு யந்திரம் ஒன்னு  பதிச்சுருக்காங்களாம்.  பவர்ஃபுல் சாமியா இருக்காருன்னும் கேள்வி.

 ஹயக்ரீவர்  கதை ஒன்னு நம்மவருக்காக இங்கே சொல்லணும்தான். இதோ சுட்டி. எட்டிப் பார்த்தால் தேவலை  :-)


ராம ராவண யுத்தம் நடந்தப்ப,  லக்ஷ்மணன்  அடிபட்டு விழ,  அவரைக் காப்பாத்த நம்ம ஆஞ்சி சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தாரே..... அப்போ கொஞ்சம் மண் சரிஞ்சு பூமியில் மூணு இடத்தில் விழுந்துருச்சு.  அந்த மூணு இடங்களிலும்   லக்ஷ்மி ஹயக்ரீவர் கோவில் இருக்குன்னு  சொல்றாங்க.

ஓ.... ஒன்னு இங்கே!  மத்த ரெண்டு எங்கே?

திருவஹீந்த்ரபுரமும் நம்ம நங்கநல்லூரும்தானாம்!   நங்கநல்லூர் கோவிலில் கூட மூலவர் பெரிய ஸைஸில் ரொம்ப அழகா இருப்பார்.  அங்கேயும் மாடி ஏறிப்போகணும் தரிசனத்துக்கு!

நல்ல தரிசனம் கிடைச்ச மகிழ்ச்சியில் அப்படியே கிளம்பிப்போறோம்.  பதிவுலக நண்பருடன்  மதியம் பேசுனதில்  சந்திப்பை ஒரு எட்டரைக்கு வச்சுக்கலாமான்னு கேட்டார். தங்க்ஸ் வேலைக்குப் போயிருக்காங்க. எட்டுமணிபோலதான் வருவாங்களாம்.

ரொம்ப நல்லது. அதுவரை இன்னும் கொஞ்சம் ஊர் சுத்திக்கறேன்னு  சொல்லி இருந்தேன்.   காலையில் கிளம்பிப்போன  நம்மவரும் எத்தனை மணிக்குத் திரும்பிவருவார்னு தெரியாது பாருங்க...

சந்திப்புக்கு இன்னும் சுமார் ஒன்னரை மணி  நேரம் இருக்கே... அதுவரை சும்மா  பீச் வரை போய் வரலாமே....    பீச் ரோடில் போக முடியாது  அதுதான் மாலை 6 மணி முதல்   வண்டிப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லையே....

இதுக்கு இந்தாண்டை இருக்கும் தெருவழியாப் போகலாமுன்னு  சீனிவாசன் அப்படிக்காப் போய்  ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினார்.  பழைய கலங்கரை விளக்கம் இருக்கு  இங்கே.  நாங்க இறங்கி நடந்து போறோம்....

கண்ணுக்குத் தெரிஞ்சது ஒரு பெரிய  வெள்ளைக் கட்டடம். க்ராஃப்ட்  பஸார்.
மகளிர் சுய உதவிக் குழுவினரின் பயனுக்காக அரசு கட்டிக்கொடுத்துருக்கு!
ரொம்ப நல்ல சமாச்சாரம்.  பெண்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை  விற்பனைக்கு வைக்க ஒரு இடம் வேணும்தானே?


உள்ளே போய்ப் பார்த்தோம். துணிமணி நகை நட்டு, எம்ப்ராய்டரி, டெய்லரிங்ன்னு  கொஞ்சம் கடைகள்/ ஸ்டால்கள்.    சரக்கை வச்சுட்டுப் பூட்டியெல்லாம்  வச்சுட்டுப்போக முடியாது.  தாற்காலிகமான கடைகள்னு சொல்லலாம்.

போனதுக்காக நானும் ஒரு பச்சை மணி மாலை வாங்கினேன்.
அப்படியே வண்டி நிறுத்தத்துக்கு  நடந்து வந்தா....  பெருமாள் கூப்பிட்டார்!  இவர் ஸ்ரீ வெங்கடேஸ்வர பாலாஜி !  சின்னதா ஒரு சந்நிதி. மேலே  பெருசா ஷெட் போட்டுருக்காங்க. சுத்திவர கம்பி வேலி!
 வாசலில் நின்னாவே பெருமாள் பளிச்ன்னு தெரியறமாதிரி அமைப்பு!  சாமின்னா  இப்படி இருக்கணும். காட்சிக்கு எளியவனா!!  நல்ல தரிசனம். பெருமாளே   நீர் நல்லா இரும்!
திருப்பதி திருமலையில் ஏறி ரெண்டு விநாடி கூடப் பார்க்க விடாம இருட்டுலே நின்னுக்கிட்டு அழிச்சாட்டியம் செய்றவனுக்கு...  சேதி அனுப்பினேன்....  பார்த்துக்கோ.... நல்லா பார்த்துக்கோ....இங்கேயும் அதே ஸ்ரீநிவாஸன்தான்! 

மணி எட்டரை ஆகப்போகுது.....  நண்பரை சந்திக்கலாம்  வாங்க  :-)


தொடரும்......  :-)


8 comments:

said...

//பெருமாளே நீர் நல்லா இரும்// ஆண்டவனை வாழ்த்தவும் ஒரு மனசு வேணும் இல்லியா, பெரியாழ்வாருக்கு அப்புறம் நீங்க தான்.

said...

எத்தனை எத்தனை கோவில்கள். உங்கள் தயவால் தரிசனம் ஆகின்றது. தொடர்கிறேன்.

said...

/ பெருமாளே நீர் நல்லா இரும்!/

மிஷ்டர் பெருமாள், இப்படிக் காதைக் குடும், ஒரு தொழில் ரகசியம் சொல்லறேன்.
உமக்கு இப்படி எல்லாம் ஆசீர்வாதம் கிடைக்கணும்ன்னா எங்க ரீச்சரை நல்லபடியா வெச்சுக்கோ. அம்புட்டுதான்.

said...

வாங்க விஸ்வநாத்.

இதெல்லாம் கொடுத்து வாங்கறதுதான். நீங்க நல்லா இருங்கன்னதும் அவுங்களும் நீங்க நல்லா இருங்கன்னு வாழ்த்த மாட்டாங்களா ? :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

கண்டது கடுகளவு, காணாதது உலகளவுன்னு கோவில்கள் பற்றியும் சொல்லலாம். ஒரு முழு வாழ்நாளில் பார்த்து முடிப்பது சந்தேகமே!

said...

வாங்க கொத்ஸ்,

வகுப்பும் வகுப்புத் தலைவனும், நல்லா இருந்தால்தானே அவரையும் வாழ்த்த மனசு வரும். எல்லாம் மிஷ்டர் பெருமாளுக்குத் தெரியாதா என்ன ? :-)

said...

கடைசியில் இருக்கும் கோவில் மாதிரி இருந்தால் எவ்வளவு நல்ல தரிசனம் கிடைக்கும்! இதை புரிஞ்சுக்க மாட்டாங்களே! :)))

தொடர்கிறேன் டீச்சர்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


அப்புறம் காசு பண்ணறது எப்படி? அதான்......