Wednesday, February 07, 2018

சிறியதோர் உலகம் செய்வோமுன்னு..... (@அமெரிக்கா.... 2)

ஒரு நூத்திப்பனிரெண்டு வருஷங்களுக்கு முன் இந்தப் பொட்டல்காட்டுப் பாலைவனம்,  இப்படி  அமெரிக்காவின் கூட்டம் அதிகம் இருக்கும் நகரங்களில் ஒன்னாக மாறப்போகுதுன்னு யாராவது கணிச்சுருப்பாங்களோ?
உண்மையைச் சொன்னா...ஒன்னுமே இல்லாத ஒரு  ஊர் , இப்பப் பணத்தால் கொழிக்குது! பகல் இல்லை, இரவில்லைன்னு  இருபத்திநாலு மணி நேரமும்   ஆட்கள் நடமாட்டம்,  அலங்கார விளக்குகள்,  சாப்பாட்டுக் கடைகள், எல்லாத்துக்கும் மேலே  காலடி வைக்கும் இடமெல்லாம் சூதாட்டம் ஆடிக்க காஸினோக்கள்..... அப்பப்பா.....  எதைச் சொல்ல எதை விட !
நான்  ஒரு  வகையில்  மஹாபாரத  யுதிஷ்டிரர்/தருமரின் சொந்தக்காரியா  த்வாபர யுகத்தில் இருந்துருக்கலாம். தருமரின் டி என் ஏ...... ?     அட்லீஸ்ட் அரண்மனை சேடி?  சூதாட்ட ஆசை  ஒரு துளி இன்னும் ஒட்டிக்கிட்டு இருக்கு. அதுக்காக நம்மவரை வச்சு ஆடும் அளவுக்கு இல்லையாக்கும். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்குல்லே?   அதிகபட்சமா இருவது டாலர்.  அதையும்  சட்னு விளையாடித் தீர்க்க மாட்டேன்.  நம்மவர்தான் பொறுமை இல்லாம.... 'சீக்கிரம், சீக்கிரம் முடிச்சுட்டு வா'ன்னு அவசரப் படுத்துவார்.
வேறெந்த நாடுகளில் (முக்கியமா...கழுதை கெட்டாக் குட்டிச்சுவர்னு அண்டைநாட்டில் ப்ரிஸ்பேன் தான்)  காஸினோவைப் பார்த்தாலும்  எட்டிப் பார்க்காம வர முடியாது. இப்ப இந்தச் சின்ன ஆசையை நிறைவேத்திக்காம மேலே போயிட்டால்.... இதுக்காக இன்னொரு பிறவி வாய்ச்சுட்டா?  அந்த  பயத்தில்தான் அப்பப்பச் சின்னதா விளையாடிக்குவேன்.  அங்கே  Bபாண்டு படத்தில்  வர்றது போல  என்னென்னவோ     டேபிள் கேம்ஸ்  இருந்தாலும்....  நம்ம  ஐவேஜுக்கு ஸ்லாட் மெஷீன் போதாதா என்ன?  ஒரு சென்ட் கேம் இருக்கான்னு தேடியே சில சமயம் அலுத்துப் போயிரும்.
ஆனா ஒன்னு.... இருவது டாலர்னு ஆடறேனே தவிர,  பொதுவா ஜெயிப்பில் இருவது வந்ததும், அதைத் தனியா எடுத்து வச்சுட்டு, மீதியை ஆடியே தீர்த்துட்டு வந்துருவேன்.  நோ கெய்ன், நோ லாஸ், ஆட்டம் போட்ட மகிழ்ச்சி, அம்புட்டுதான்:-)

ட்ராப்பிக்கானா ஹொட்டேலில்  கீழ் தளம் முழுசுமே  ஸ்லாட் மெஷீன்கள்தான்.  ஒரு ஓரமா இருந்த வரவேற்பில் நாம் செக்கின் செஞ்சுக்கிட்டோம். வீக் எண்ட் என்பதால் (வெள்ளிக்கிழமை)  இடம் கேட்டு பெரிய வரிசை நிக்குது.  நம்மவர் முந்தி எப்பவோ ஹில்டன் க்ரூப்பில் மெம்பரா சேர்ந்தது, நினைவுக்கு வர,  அதுக்குன்னு தனியா இருந்த கவுன்ட்டரில் போய்  நம்ம மெம்பர்ஷிப் நம்பர்  செக் பண்ணக் கேட்டதும்.... பார்த்தா.... டடா..... இருக்கே! ஆஹா.... சட்புட்ன்னு அறைச்சாவி கைக்கு வந்துருச்சு. மெம்பர்களுக்கான சில கூடுதல் வசதிகளுடன் அறை நல்லாவே இருக்கு! பதினாறாவது மாடி.

இந்த ஹொட்டேலையும் வலையில் பார்த்துத்தான் புக் பண்ணி இருந்தார்.  பொட்டிகளை அப்படியே போட்டுட்டு ரெண்டு மணி நேரம் தூங்கி எழுந்ததும் சுறுசுறுப்பு வந்துருச்சு.  காஃபி கேப்ஸ்யூல், பால், மெஷீன் எல்லாம் சூப்பர்!
ஷவர் ஒன்னு எடுத்துக்கிட்டு காஃபி ஒன்னு குடிச்சதும்  போன உயிர் வந்தே வந்துருச்சு.  கிளம்பி கீழே போனோம்.

இந்த ஹொட்டேலுக்கு எதிரில்தான் ஸ்ட்ரிப் என்னும் மெயின் வீதி..... நாலு மைலுக்கும் கூடுதலா  நீளம்.  நேராப் போய்க்கிட்டே இருக்கு!
எதிர்வாடையில் வலப்பக்கம் எம்ஜிஎம். இடப்பக்கம் சுதந்திரதேவி!  ந்யூயார்க் :-)  கண் எதிரே கொஞ்ச தூரத்தில் பாரிஸ். ஐபெல் டவர்!  இந்தப்பக்கம் டிஸ்னி லேண்ட்......   அங்கிருந்து  கூப்பிடு தூரத்தில் ( கொஞ்சம் சத்தமாக் கத்திக் கூப்பிடணும், ஆமா!)   ப்ரமிட், எகிப்து!
 காசு கொட்டிக்கிடக்கேன்னு    உலகத்தையே இங்கே கொண்டு வந்துருக்காங்க. தாஜ்மஹல்தான் பாக்கி.... ப்ச்..... நாங்களும்  கொஞ்சநேரம்  உலகத்தைச் சுத்திப் பார்த்துட்டு,  ஒரு இடத்தில்  ஃபுட் கோர்ட் இருக்கேன்னு  நம்ம சாப்பாடு கிடைக்க வழி உண்டான்னு தேடுனதில்,    தாலிக்குப் பதிலா இத்தாலி கிடைச்சது. 
வரிசை வரிசையா ஹொட்டேல்ஸ்,  ஷோ நடக்கும் அரங்கங்கள், ஸ்லாட் மெஷீன்கள் நிரம்பி வழியும் பெரிய பெரிய ஹால்கள் இப்படி எங்கியாவது ஒரு இடத்தில் நுழைஞ்சால்  வேடிக்கையும் விநோதமுமா.....போய்க்கிட்டே இருக்கலாம்.

ஹொட்டேலுக்குத் திரும்பியதும்    நம்மூர் காசை விட யூ எஸ் காசு ஸ்ட்ராங்கா இருக்கேன்னு  இருவதைப் பத்தாக்கினேன்.  நீங்க போய் தூங்குங்கன்னு சொன்னாலும்  நம்மவர் கேக்கறாரா?  சீக்கிரம் சீக்கிரமுன்னு சாட்டையைச் சொடுக்கிட்டே உக்கார்ந்துருந்தா.... எப்படி?   வேற நாடுகளில்தான் ஆடற இடம் வேற தூங்கற இடம் வேற.... இங்கேதான் ரெண்டும் ஒன்னா இருக்கே....
பிடுங்கலைச் சமாளிச்சுக்கிட்டே  தோல்வியும் வெற்றியுமா மாறி மாறி  அழுது சிரிச்சுக் கடைசியில் மீதிக் காசுக்கான வவுச்சரை எடுத்துக்கிட்டு அறைக்குப் போகும்படியா ஆச்சு.
மறுநாள் கொஞ்சம் நிதானமா எழுந்து, காலை வேலைகளை முடிச்சுட்டு, இங்கேயே இருக்கும்  ஏகப்பட்ட ரெஸ்ட்டாரண்டுகளில் எது நமக்குன்னு பார்த்து அங்கெ போய்  ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு.
இதைத் தேடிப்போகும் வழியிலேயே  வெவ்வேற  மாடிகளில், வெவ்வேற இடத்தில் வெவ்வேற தரத்தில் விளையாடிக்க ஏற்பாடுகள்.  வி ஐ பி அந்தஸ்த்து போல!
கூட்டத்துலே கோவிந்தாப் போடாம தனியா போட்டுக்கலாம்... நாமத்தை!  எப்படிப் பார்த்தாலும் சூதாடியே பில்லியனர் ஆக முடியுமா? அப்படி யாராவது ஆகி இருக்காங்களா என்ன?
ஹொட்டேலுக்குள்ளேயே  பெரிய தோட்டங்களும், கடைகளும்... (கடை வீதின்னும் சொல்லலாம்) ஷோ நடக்கும்  தியேட்டர்களுமா இருக்கு.  சுருக்கத்தில் சொன்னால் அரண்மனைக்குள் அலைஞ்சு திரியற மாதிரிதான்...   காய்ஞ்சு போன ஊர்னு சொன்னா நம்ப முடியுதா?  பாலைவனத்தில் பசுஞ்சோலை!
கல்யாணம் பண்ணிக்க உள்ளே ஒரு சின்ன சேப்பல் கூட இருக்கு. அழகான தோட்டம், கடற்கரை(!) நீச்சல்குளம்தான். நாள் முழுசும் வெயில் காயலாம். அதுக்கு இடம் பிடிக்க சனம்  வரிசையில் போகுது!  போங்க.....  எங்க இடமும் உங்களுக்கே!

வெளியே தலை காமிச்சால் சுட்டெரிக்கும் வெயில் .....   ஒரு  ரெண்டு நிமிசம் வெளியே வந்து பக்கத்துக் கட்டடத்துக்குப்போகும் பாலத்தில் ஏறிட்டால்....  பாதாள லோகத்திலேயே சஞ்சரிச்சுக்கிட்டுச் சுத்திப் பார்த்துட்டு வரலாம்.  ஒரு ட்ராம் ஸ்டேஷன் இருக்குன்னு உள்ளே போனால்   டிக்கெட் எடுக்குமிடத்தைக் காணோம்.   கட்டடத்துக்குள்ளேயே       இருந்த  இடத்திலிருந்து  ட்ராமை ஓட்டறவர் கிட்டே கேட்டால்   ஃப்ரீ ரைடுன்னார் !! வித்தவுட்....... ?
இன்றைக்கு  முழுநாளும் ச்சும்மா ஒரு ஊர் சுத்தல்தான். இங்கே லாஸ் வேகாஸுக்கு  வந்தது நாளைக் காலையில் நாம் போகும் மூணு நாள் டூருக்காகவே!
காலையில்  ஏழு மணிக்கு பிக்கப் என்பதால், அவுங்க சொன்ன பிக்கப் பாய்ண்ட் எங்கேன்னு பார்த்து வச்சுக்கணும். டாக்ஸி பிடிச்சுக்கலாம் என்றார் நம்மவர்.  விவரம் தேடுனதில் நாம் எகிப்து நாட்டுக்குப் போயிட்டால் அதுலே ஒரு பகுதிதான்  அவுங்க குறிப்பிட்ட இடம்னு  தெரிஞ்சது.  புள்ளி நாலு மைல் தூரம்.     ஊர் உலகமே மெட்ரிக் அளவுக்கு மாறிட்டாலும் இடும்பர்கள் நாட்டில் மட்டும் இன்னும் மைலும் பவுண்டும்தான்....

வேற வேலை ஒன்னும் இல்லைன்னதும்,  நேரம் ஏகப்பட்டது நம்ம கையில் :-) கர்மா லக்னு  அங்கங்கே கடைகள்.  புள்ளையார் ஜோரா இருக்கார்!
இன்னொரு கடையில் அதிர்ஷ்டக் கற்கள்!  கடைக்காரப் பொண்ணு நல்லா சிநேகமான பேச்சு.  பெயர் தாய்.  அடடா....   எங்கூர்லேகூட ( வெளிநாடுகளில் நான் எங்கூர்ன்னு சொன்னா அது இந்தியா!) தாயம்மான்ற பெயர் உண்டு.  எங்கூர்லே ஒரு சாமிக்கே தாயுமானவர் என்ற பெயர் இருக்கு,  எங்க மொழியில் தாய்ன்னா...   அம்மான்னதும்  பொண்ணுக்கு மகிழ்ச்சி. எனக்கு  தாய் இல்லைன்னதும் சங்கடமாப் போயிருச்சு.  நானே உனக்குத்  தாய்னு நினைச்சுக்கோன்னேன்.  நல்ல இனிமையாப் பேசும் மகள் கிடைச்சா வேணாங்குதா?  க்ளிக் :-)
இந்தாண்டை இருக்கும் இன்னொரு பாலம் ஏறி     எதிர்வாடையில் இருக்கும் எம்ஜிஎம் வந்து பகல் நேரத்தில் பார்த்தால் சிங்கம் நல்லாவே இல்லை.... அசிங்கமாச் செஞ்சு வச்சுருக்காங்களே.... திருஷ்டி கழிக்கவா?
நாளைக்கு இங்கே லாஸ்வேகாஸில் ஒரு பெரிய குத்துச் சண்டை போட்டி நடக்கப்போது. அதுதான் பயங்கரக்கூட்டம். எந்த ஹொட்டேலிலும் இடம் கிடையாது...  தகவல்  சொன்னார் ஒருவர்.  தங்கச் சிங்கத்தோடு ஒரு விளம்பரம் வேற! 



அங்கேயும் கொஞ்சம் சுத்திட்டு, மோனோ ரயில் இருக்குன்னு  ஒரு நாள் டிக்கெட் (24 மணி நேரம்) வாங்கிக்கிட்டுப் போறோம்.  வெறும் 3.9 மைல்தான். எம்ஜிஎம்லே ஆரம்பிச்சு  ஏழு ஸ்டேஷன். ஒன்னரை நிமிசத்துல்லே அடுத்த ஸ்டேஷன் வந்துருது :-)  கடைசி ஸ்டேஷன் வரை போயிட்டு வரலாம்....  போனோம்.  அங்கே இறங்கி கொஞ்சம் சுத்துனதில் 'தாய்' ரெஸ்ட்டாரண்ட் ஒன்னு கண்ணில் பட்டதும்,  அங்கே போய் சாப்பாட்டை முடிச்சோம்.  நல்ல இளநீர் ஒன்னு :-)
வெயில் தணியட்டும்.... சாயங்காலமா ஒவ்வொரு ஸ்டேஷனா இறங்கிப் பார்க்கலாமுன்னு  ட்ராப்பிக்கானாவுக்குத் திரும்பினோம்.
மூணு நாளைக்கு  வேண்டிய உடைகளை   சின்ன கேபின் பேகில் எடுத்துக்கிட்டுப் போனால் போதாதா?  ஹொட்டேலில் க்ளோக் ரூம் இருக்கு. அதில்  மற்ற பெட்டிகளைப் போட்டுட்டுப் போகலாம். அதுக்கான விதிமுறைகளைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டதும்,   இப்பவே கொண்டு போய் போட்டுடலாம். காலையில்  கொஞ்சம் நிம்மதியாக் கிளம்பலாமுன்னார் நம்மவர். அதுவுஞ்சரிதான்.

வைஃபை இருக்கே.... வலை மேயல், ஓய்வு, வாட்ஸ் அப் எல்லாம் ஆச்சு. அஞ்சு மணிக்கு  ரெண்டு பெட்டிகளைக் கொண்டுபோய் க்ளோக் ரூமில் கொடுத்துட்டு ரசீது  வாங்கி வச்சுட்டு இன்னொரு முறை ஊர் சுத்தல்.  மோனோரயில்தான். டிக்கெட் வீணாப் போயிரக்கூடாது  பாருங்க :-)

முதல் ஸ்டேஷனில் இறங்கி வெளியே போய்  வேடிக்கை பார்த்துக்கிட்டு நடக்கும்போதே அடுத்த ஸ்டேஷனுக்கு வந்துருந்தோம்!  ரயில் பாதையின் நீளத்தை விட, ரயில் ஸ்டேஷனுக்குப் போய்  ப்ளாட்ஃபார்ம் போய்ச்சேரும் நீளம் ரொம்பவே அதிகம். ஃபிட்பிட் கொண்டு போகலை......  (மறந்துட்டேன். இருபதாயிரம் ஈஸி....)
இது வேலைக்காகாதுன்னு  இரவு நேர விளக்கு ஜொலிப்பில் இன்னொருக்காக் கடைசி ஸ்டேஷன் (எஸ் எல் எஸ்) வரை போயிட்டு, வண்டியை விட்டு இறங்காமல் அப்படியே திரும்பினோம்.
பாரிஸ் போய் சாப்பிடணும் :-)  ஓ.....  மறுபடியும் தாய்!  தாயில்லாமல் நானில்லை.....

மணி அப்படி இப்படின்னு  ஒன்பதேகால் ஆகிருச்சேன்னு  ட்ராப்பிக்கானா திரும்புனா,  மெஷீன்ஸ் வா வான்னு கூப்புடுது.   கையில்  வவுச்சர் இருக்கே..... விடமுடியுமா?

ஆடு.... ஆடு.....     காலையில் சீக்கிரம் எழுந்து கிளம்பணும். வா வான்னு  இந்தப் பக்கம் அன்புத்தொல்லை.....   என்னை விட்டுப் போகாதேன்னு..... அந்தப் பக்கம் மெஷீனின் தொல்லை.... யாருக்குன்னு ஆடுவேன்....
துணிந்து அஞ்சு சென்ட் அஞ்சு லைன்னு  காமணி ஆடிட்டு, ஜெயிச்ச காசை (!)  கவுன்டரில் போய் வாங்கிக்கிட்டு அறைக்குப் போய் கிடந்தாச். நாலு டாலர்னா நாலு டாலர் இல்லையோ!!!

PINகுறிப்பு:  டில்ட்டிங் ஸ்க்ரீன் இருக்கும் கெமெரா ஒன்னு  வாங்குனதால்  அங்கங்கே ஒரு ஸெல்ஃபீ வேற எடுத்துக்கறது இப்போதைய புதுப் பழக்கம், கேட்டோ ..:-) கண்டுக்கப்டாது...

தொடரும்...... :-)


13 comments:

said...

ஹிஹிஹி... நீங்கள் டிக்கெட் போடாட்டாலும் இப்போ உங்கள் கூடப் பயணிக்கத்தானே போறேன்?!! அதைச் சொன்னேன். படங்கள் சுவாரஸ்யம்.

said...

உங்கள் மூலம் நானும் அமெரிக்கா வந்தாச்சு. ஸ்லாட் மெஷின்கள் - பார்க்கும்போதே பரவசம் தான்!

தொடர்கிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

ஆஹா.... ஆஹா.....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உருளைக்கிழங்கைத் தின்னே மூணுவாரம் ஓடப்போகுது :-)

தொடர்வருகைக்கு நன்றி !

said...

நத்திங் லைக் வேகஸ்! 💃💃

said...

வழக்கம் போல வெகு சுவாரஸ்ய்ம்..லாஸ்வேகாஸ்...தொடர்கிறேன்..

said...

மிக அருமை.
நன்றி

said...

சகுனி சகோதரி அவர்களே...நன்று. தாலி/இத்தாலி...இடும்பன்..தாய்..
ரசித்துப் படித்தேன். நன்றி.

said...

வாங்க பொற்கொடி!

எவ்ளோ நாளாச்சு உங்களை இங்கே பார்த்து !!!!!


நத்திங் லைக்... ஐ அக்ரீ. ஆனால் ஐவேஜ் நிறைய வேணும்..... அழிக்கறதுக்கு :-)

said...

வாங்க கண்ணன்,

தொடர்வதற்கு நன்றி!

ஆளுக்கு நவ்வாலு மெஷீன்ஸ் எடுத்துக்கலாம் :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றீஸ்.

said...

வாங்க டாக்டர் ராஜன்.

கண்ணைக் கட்டிக்கிட்டு இருக்க முடியாது.... நோ சான்ஸ்........... ஃபார் சகுனியின் சகோதரி ஆக்ட் :-)

பின்குறிப்பு: நமக்கொரு அங்கிள் இருந்தார். ராஜன் மாமா.! உங்க பெயரைப் பார்த்ததும் மாமா நினைப்பு வர்றதைத் தடுக்க முடியலை....

said...

கீதா: ஆஹா! அமெரிக்கத் தொடரா....கண்ணுல பட்டதும் மூணு நாள் ஓபன்னாகி வைச்சும் இன்னிக்குத்தான் வர முடிஞ்சுது....ஆடுகளமா!!! ஆடுங்க! இதோ அடுத்த பதிவுக்குப் போறோம்..

துளசிதரன்: அமெரிக்கப் பயணம் உங்களோடு சுத்தத் தொடங்கியாச்சு!!! படம் எல்லாம் நல்லாருக்கு. நேரில போக முட்யுதோ என்னவோ உங்க பதிவு மூலம் வந்து லேன்ட் ஆகியாச்சு!